தொகுப்பு: சுடர்லெட்சுமி மாரியப்பன்
ஸ்பா எனப்படும் சொல்லானது தற்போது பரவலாகப் பிரபலமடைந்து வருகிறது. பெல்ஜியத்தின் ஸ்பா என்ற நகரின் பெயரில் இருந்து வந்த இந்தச் சொல் ‘நீர் மூலம் உடல் நலம்’ என்னும் பொருள்படும் ‘சனிடாஸ் பெர் அக்யூயம்’ (Treatment using pure water) என்ற லத்தின் வாக்கியத்தின் சுருக்கப் பெயராகும். இந்தச் சிகிச்சை ‘நீர் சிகிச்சை’ என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக ஸ்பா எனப்படுவது உடல் மற்றும் உள்ளத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் மருத்துவமற்ற சிகிச்சை முறையாகும். உலகளவில் பிரபலமாகப் பேசப்படும் இந்த நீர் சிகிச்சை ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாட்டுகளில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இது மேல்தர வர்க்கத்தினர் மேற்கொள்ளும் காஸ்ட்லியான சிகிச்சை முறையாக இருக்கிறது. பெரும்பாலும் ஹோட்டல், ரிசார்ட்ஸ், அழகுநிலையங்கள் போன்ற இடங்களில்தான் ‘ஸ்பா சேவைகள் வழங்கப்படுகின்றன.
இவ்வுலகில் அதிகமானோர் தங்கள் அழகில் கவனமாக இருப்பதால் ஸ்பா தெரபி சிகிச்சையைக் கட்டாயம் விரும்புவோராகத்தான் இருப்பார்கள்.
‘ஸ்பா’ குறித்து மேலும் பல தகவல்களை அறிவதற்கு அழகுக் கலை நிபுணர் வசுந்தரா அவர்களிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ஸ்பா தெரபி இந்தியாவில் தற்போது அதி வேகமாகப் பரவிவருகிறது. ஆனால், இந்தத் தெரபி ஐரோப்பிய நாடுகளில் நூற்றாண்டு காலமாக உள்ளது. இந்தச் சிகிச்சை முதன்முதலில் பூமிக்கு அடியில் இருந்து வரும் அதிக மினரல்ஸ் நிறைந்த ஊற்றுநீரைப் பயன்படுத்தியே தொடங்கப்பட்டது.
ஸ்பா தெரபி சிகிச்சையில் பல வகைகள் உள்ளன. அதில் முக்கியமாக ஆயில் மசாஜ், பாடி ரேப், பாடி ஸ்க்ரப் போன்ற சேவைகள் அடங்கும். அதாவது முகம், கண், உடல், தலைமுடி, கால் என அனைத்து அங்கங்களுக்கும் தனித்தனியாக வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்க்கும் வண்ணம் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.
தலைக்குக் கொடுக்கப்படும் ஸ்பா சிகிச்சை
தலைக்குக் கொடுக்கப்படும் ஸ்பா சிகிச்சை வாடிக்கையாளர்களின் பிரச்னைக்குத் தகுந்தவாறு அளிக்கப்படுகிறது. அதாவது முதலில் தலையில் (scalp) பிரச்னை உள்ளதா? இல்லை முடியில் பிரச்னை உள்ளதா? என்பதைக் கண்டறிந்து பின் அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும்.
எடுத்துக்காட்டாக, அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு ரிலாக்ஸிங் மசாஜ் செய்யப்படும். தலைமுடியில் ஏற்படும் பிரச்னைகளுக்குச் சிகிச்சை அளிப்பதன்மூலம் தலையில் உண்டாகும் பொடுகு தொல்லை, முடி உதிர்வு, வெள்ளை முடி போன்ற வற்றிற்குத் தீர்வு கிடைப்பதோடு முடி அதிகமாக வளர்வதற்கும் உதவியாக இருக்கும்.
உடம்பிற்கான ஸ்பா சிகிச்சை
இந்தச் சிகிச்சை முறையில் வாடிக்கையாளர்களின் உடம்பிற்குத் தேவைப்படும் ஆயில் அல்லது கிரீம், எந்தவகையான மசாஜ், எவ்வளவு நேரம் என்பதையெல்லாம் தேர்ந்தெடுத்து மசாஜ் செய்யப்படும். இந்த மசாஜ் மூலம் வேண்டாத நச்சுப் பொருட்கள் வெளியேறுவதோடு, தேவையற்ற கொழுப்புக்களும் நீங்கிவிடும். இதோடு பூக்கள் தூவி, ஆயில் மற்றும் மூலிகைகள் சேர்க்கப்பட்ட தண்ணீரில் நீராடுவதால் பலவித நன்மைகளும் உண்டாகும்.
பொதுவாக இந்த மசாஜ் எடுத்துக்கொள்வதன் மூலம் ரத்த ஒட்டங்கள் அதிகரிப்பதோடு நரம்பு தளர்ச்சி உள்ளவர் களுக்கு அதை சரிசெய்யவும் முடிகிறது. அதோடு எலும்புகள், நரம்புமண்டலம், தசைகள் சீராக மாறுவதற்கான ஒரு சிறப்பான முறையாகவும் அமைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்தச் சிகிச்சையை மேற்கொள்பவர்களுக்கு அதிக மனஉறுதி மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதை நம்மால் பார்க்கமுடியும்.
மேலும், மனஅழுத்தம் குறைவதோடு, ரத்த அழுத்தத்தையும் குறைத்து, உடலில் கழுத்து, கை, கால் போன்ற வலிகளையும் போக்குகிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் மனதளவிலும் உடலளவிலும் அதிக சுறுசுறுப்புத் தன்மையையும் அதிகமாக பெறமுடியும்.
முகத்திற்கான ஸ்பா சிகிச்சை
இந்தச் சிகிச்சை ஃபேஷியல் முறையைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் முகம் பளபளப்பாக மாறுவதோடு கண்ணில் ஏற்படும் கருவளையங்களும் நீக்கப்பட்டு முகம் அழகாக தெரிய வழிவகுக்கிறது.
பாதங்களுக்குக் கொடுக்கப்படும் ஸ்பா சிகிச்சை
தாய்லாந்து, இந்தோனேசியா, பாலி போன்ற இடங்களில் இந்த ஸ்பா சிகிச்சை பெரிய அளவில் பிரபல மடைந்துள்ளது. அங்கு கோயில்களுக்கு உள்ளேயே பாதங்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. கால்களுக்கு அடிப்பகுதியில் அழுத்தம் கொடுத்து வெறும் கைகளால் செய்யப்படும் இந்த மசாஜ் Flexology வாடிக்கையாளர்களுக்கு அதிக ரிலாக்ஸாக இருக்கும்.
தற்போது, இந்த ஸ்பா தெரபி இந்தியாவிலும் அதிகளவில் பரவி வருகிறது. முக்கியமாக இந்த ஸ்பா தெரபி தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், அதிக உடல் எடை உடையவர்கள் மேற்கொண்டால் உதவியாக இருக்கும்.