தலைமுடி என்பது நம் அழகிற்கு மகுடம் சேர்க்கும் ஒன்றாகும். ஆரோக்கியமான அடர்த்தியான தலைமுடியைப் பெறுவது பலரின் கனவு. இதற்கு நாம் பல வகையான தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இயற்கையான பொருட்களே தலைமுடிக்கு மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் ஆகிய இரண்டும் தலைமுடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இவற்றில் எது தலைமுடிக்கு சிறந்தது? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கற்றாழை - தலைமுடியின் நண்பன்:
கற்றாழை என்பது பல நூற்றாண்டுகளாக சருமம் மற்றும் தலைமுடிப் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு இயற்கை பொருள். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. கற்றாழையின் ஜெல் போன்ற தன்மை உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதனால், உச்சந்தலை உலர்ந்து அரிப்பை ஏற்படுத்துவது தடுக்கப்படுகிறது.
கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இது முடி வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வைக் குறைக்கிறது. இதில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கள் பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் பல்வேறு நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. கற்றாழை, முடியை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றுகிறது. இது முடியில் வெப்பத்தால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது.
நெல்லிக்காய் - ஆயுர்வேத மருத்துவத்தின் பொக்கிஷம்:
நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவும் கற்றாழை போலவே பல நூற்றாண்டுகளாக தலைமுடிப் பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, முடி நரைப்பதைத் தடுத்து முடியின் இயற்கையான நிறத்தைப் பாதுகாக்கிறது.
நெல்லிக்காய், முடி வேர்களை வலுப்படுத்தி முடி உயிர்வைக் குறைக்கிறது. இதனால், முடி அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் மாறுகிறது. நெல்லிக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உச்சந்தலையில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
எப்படி பயன்படுத்துவது?
கற்றாழை மற்றும் நெல்லிக்காயை தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல்லை நேரடியாக தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து கழுவுவது நல்லது. நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல செய்து உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் முடி ஆரோக்கியமாக மாறும். கற்றாழை ஜெல், நெல்லிக்காய் பொடியை சம அளவில் கலந்து, பேஸ்ட் செய்து தடவினாலும் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
கற்றாழை Vs நெல்லிக்காய்: எது சிறந்தது?
கற்றாழை மற்றும் நெல்லிக்காய் இரண்டும் தலைமுடிக்கு நல்லதுதான். ஆனால் எது சிறந்தது என்பது நம்முடைய தலை முடிப் பிரச்சனைகளைப் பொறுத்து மாறுபடும். கற்றாழை உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. நெல்லிக்காய் உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. கற்றாழை மற்றும் நெல்லிக்காய் இரண்டும் முடி உதிர்வைக் குறைக்க உதவுகின்றன. நெல்லிக்காய், முடி நரைப்பதை தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, உங்களுடைய பாதிப்புகளுக்கு ஏற்ப, எதைப் பயன்படுத்துவது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.