பீட்ரூட்டில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பதைப் போலவே அழகை மேம்படுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. பீட்ரூட்டில் உள்ள அதிகப்படியான விட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் போன்றவை முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது! வறண்ட சருமத்தை மாற்றி முகத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு, முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி முகத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. இத்தகைய அற்புதமான பலன்கள் நிறைந்த பீட்ரூட்டை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்!
ஒரு பீட்ரூட்டை எடுத்து தோல் சீவி விட்டு அதனைத் துண்டு துண்டாக வெட்டி அதனுடன் இரண்டு ஸ்பூன் கெட்டியான தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் அல்மேன்ட் ஆயில் போன்றவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, நன்கு அரைத்து, முகம் மற்றும் உடல் முழுவதும் பூசிக் கொள்ளவும். இதனை 10 முதல் 20 நிமிடங்கள் வைத்திருந்து சுத்தமான நீரில் கழுவும் போது முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் மாறுவதோடு முகத்தில் உள்ள தேவையற்ற சுருக்கங்களும் நீங்கும். இதுபோன்ற ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு பழத்தின் தோல்களை எடுத்து வெயிலில் நன்கு உலர வைத்து அதனை பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியில் இரண்டு ஸ்பூன் எடுத்து இதனோடு ஒரு ஸ்பூன் பீட்ரூட் சாறை சேர்த்து நன்கு குழைத்து மாஸ்க் போன்று முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 முதல் 20 நிமிடங்கள் முகத்தில் வைத்திருந்து பின் சுத்தமான நீரினால் முகத்தை கழுவும் போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு முகம் பளபளப்பும், பொலிவும் பெறுகிறது.
ஒரு பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து , இரண்டு ஸ்பூன் பீட்ரூட் சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் நன்கு தேய்த்து மசாஜ் செய்யவும். 5 முதல்10 நிமிடங்கள் இவ்வாறு மசாஜ் செய்யும் போது முகம் பளபளப்பாக மாறும். மேலும் பீட்ரூட்டில் அதிக அளவு லைகோபின் இருப்பதால் வயதானது போன்று தோற்றத்தை ஏற்படுத்தும் முகச் சுருக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
அரை பீட்ரூட் மற்றும் அரை வெள்ளரிக்காய் சேர்த்து ஜூஸ் தயாரித்து தினமும் அருந்தி வருவதால் எப்பொழுதும் சருமம் வறண்ட நிலையில் இருப்பது தடுக்கப்பட்டு முகம் மற்றும் உடல் முழுவதும் ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது.
உதடு கருமையாக இருப்பவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் பீட்ரூட் சாறு எடுத்து அதனை உதட்டில் நன்கு தடவி விட்டு அப்படியே தூங்கி காலையில் எழுந்து கழுவினால் நாளடைவில் கருமையான உதடு மாறி புதுப்பொலிவு பெறும்.
கண்களைச் சுற்றி கருவளையம் இருப்பவர்கள் பீட்ரூட் சாறு ஒரு ஸ்பூன் மற்றும் அதனுடன் ஒரு ஸ்பூன் அல்மேன்ட் (almond oil) ஆயில் சேர்த்து தினமும் கண்ணைச் சுற்றி தேய்த்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்து வருவதன் மூலம் கண்களைச் சுற்றியுள்ள கருமையான பகுதிகள் நீங்கி நாளடைவில் முகம் முழுவதும் ஒரே விதமான புதுப்பொலிவுடன் காணப்படும். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
இரண்டு ஸ்பூன் பீட்ரூட் சாறு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் கெட்டியான தயிர், எலுமிச்சம் பழச்சாறு சிறிதளவு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் இவற்றை ஒன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் மாஸ்க் போன்று நன்கு அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவும் போது முகத்தில் உள்ள நாள்பட்ட கரும்புள்ளிகள் மறைவதோடு முகம் மற்றும் கழுத்து பகுதியில் ஒரே அளவிலான நிற அமைப்பை பெற முடியும்.
இரண்டு ஸ்பூன் கற்றாழை சாறு அதனுடன் சிறிதளவு வைட்டமின் ஈ எண்ணெய், சிறிதளவு கிளிசரின் மற்றும் ரெண்டு ஸ்பூன் பீட்ரூட் சாறு கலந்து முகத்தில் வாரம் இரண்டு நாட்கள் பூசி வரும் போது வறண்ட சருமம் மாறி, முகம் மற்றும் சருமம் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது.