ஆண்கள், பெண்கள் என எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைவரும் சந்திக்கும் ஒரு தொல்லை, முடி உதிர்வு. குறிப்பாக, இந்த சுட்டெரிக்கும் கோடைக்காலங்களில் முடி உதிர்வு, முடி வறட்சி போன்ற எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்தவகையில், கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த கேரட் ஹேர் மாஸ்கை ஒரு முறை பயன்படுத்திப் பாருங்கள்.
உடலில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தால்தான், தலைமுடி ஆரோக்கியத்தை இழக்கும். எனவே, அதற்கேற்றவாரு செயற்கை பொருட்களைப் பயன்படுத்தாமல், நாம் வீட்டில் இருந்தப்படியே கூந்தலை கவனிப்பது மிகவும் அவசியம். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், இது உங்கள் தலை முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும், இது உங்கள் தலைமுடியின் வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. நல்ல முடி வளர்ச்சியைத் தூண்டவும் கேரட் உதவும். ஒருவேளை உங்களுக்கு கேரட் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். கேரட்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, மாஸ்க் வடிவில் நேரடியாக உங்கள் தலைமுடியில் தடவி வரலாம். இது அவ்வளவு ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.
கேரட் மாஸ்க் செய்ய தேவையானப் பொருட்கள்:
கேரட் – 1 அல்லது 2
வாழைப்பழம் – 1
தயிர் – மூன்று டேபிள் ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறை:
முதலில் கேரட்டுகளின் தோல்களை சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். பின்னர் வாழைப்பழத்தை உரித்து, அதனையும் ஜாரில் சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும். இறுதியாக அந்தக் கலவையில், தயிர் மற்றும் பாதாம் சேர்த்து தலை முடியில் நன்றாக தடவ வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிக்க வேண்டும். கோடைக்காலம் முழுவதும் வாரம் ஒருமுறை தொடர்ந்து இதனை செய்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த கேரட் மாஸ்க், உங்கள் முடி வறட்சி ஆகாமல் தடுக்கும். அதேபோல் உச்சந்தலையில் வெப்பத்தால் ஏற்படும் வறட்சியை போக்கி, பொடுகை நீக்கும். மேலும் கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்வதோடு, முடி உதிராமாலும் பாதுகாக்கும்.