முடி உதிர்வு, தலைமுடி வறட்சி போன்றவை இன்றைய காலத்தில் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டன. இதற்கு தீர்வு காணும் விதமாக பல விதமான தயாரிப்புகள், வைத்திய முறைகளை பலர் பின்பற்றி வருகின்றனர். இவற்றில் ஒன்றுதான் முயல் ரத்தம் கொண்டு தயாரிக்கப்படும் ஹேர் ஆயில். சமூக ஊடகங்கள் மற்றும் சில வலைதளங்களில், இந்த எண்ணெய் முடி வளர்ச்சியை அதிகரித்து, முடியை கருமையாக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் உண்மை என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
முயல் ரத்தம் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஹேர் ஆயில், முடி வளர்ச்சியை அதிகரிக்கும் என சொல்லப்பட்டாலும், இதற்கு எவ்விதமான அறிவியல் ஆதாரமும் இல்லை. முடி வளர்ச்சி என்பது மிகவும் சிக்கலான உயிரியல் செயல்முறை. இது பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது. மரபணு, ஹார்மோன்கள், ஊட்டச்சத்து, வயது, மன அழுத்தம் மற்றும் சில மருத்துகள் ஆகியவை இதற்கு முக்கிய காரணிகளாக சொல்லப்படுகின்றன.
இதுவரை முயல் ரத்தத்தில் உள்ள பொருட்கள் முடி வளர்ச்சியை எவ்வாறு அதிகரிக்கும் என்பது குறித்து எவ்விதமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது தலை முடி வளர்ச்சிக்கு நல்ல ரிசல்ட் கொடுக்கும் என்பதற்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. எனவே, முயல் ரத்தம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஹேர் ஆயிலை தலையில் தேய்த்தால் பலவிதமான பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தொற்று நோய்கள், அலர்ஜி எதிர்வினைகள், தோல் எரிச்சல் மற்றும் காயங்கள் ஆகியவை இதனால் ஏற்படும். முயல் ரத்தம் என்பது ஒரு விலங்கின் ரத்தம் என்பதால், இதில் பல வகையான நோய்க்கிருமிகள் இருக்கலாம். இவை சருமத்தில் படுவதன் மூலம், உடலுக்குள் நுழைந்து தொற்று நோய்களை ஏற்படுத்தும். மேலும், முயல் ரத்தத்தில் உள்ள புரதங்கள் மற்றும் பிற பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தி பிரச்சனையை மோசமாக்கும். இதனால், தோல் சிவந்து போதல், வீக்கம், அரிப்பு மற்றும் கொப்பளங்கள் ஏற்படலாம். எனவே, சமூக ஊடகங்களில் ஏதோ சொல்கிறார்கள் என்பதற்காக கண்மூடித்தனமாக எதையும் பயன்படுத்தாதீர்கள்.
முடி வளர்ச்சிக்கான பாதுகாப்பான வழிகள்:
முடி வளர்ச்சிக்கு புரதம், இரும்பு, துத்தநாகம், வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அவசியம். எனவே, பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது முக்கியம்.
தலை முடியை எப்போதும் மென்மையாகக் கையாள வேண்டும். அதை அதிகமாக தேய்ப்பது, சூடான நீரில் குளிப்பது, கெமிக்கல்கள் நிறைந்த ஷாம்பு, கண்டிஷனர்களைப் பயன்படுத்துவது போன்றவை முடியை பாதிக்கலாம். மேலும், மன அழுத்தம் முடி உதிர்வை அதிகரிக்கச் செய்யும். எனவே, மன அழுத்தத்தை குறைக்கும் நுட்பங்களைப் பயன்படுத்துங்கள்.
இது தவிர உங்களுக்கு முடி உதிர்வு அதிகமாக இருப்பின் தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.