கூந்தலின் அழகை பராமரிப்பதில் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் அக்கறை அதிகம் தான். அதுவும், ஆண்கள் எங்கு கண்ணாடியை பார்த்தாலும் முதலில் தலை முடியைதான் சரி செய்வர்.
தங்கள் முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்று பலவித ஹேர்பேக்களை பயன்படுத்துவார்கள். ஆனால் சந்தைகளில் விற்கும் ஹேர்பேக்களை வாங்கி பயன்படுத்த தயக்கமாக இருக்கும். ஏனெனில், சந்தைகளில் விற்கும் இது போன்ற பொருட்கள் நம்பகத்தன்மை அற்றதாக இருக்கிறது. அதனால் முடிந்த அளவு வீட்டில் இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் என்றால் எந்த யோசனையும் இன்றி தாராளமாக பயன்படுத்தலாம். அப்படி, இயற்கையாக நமது கூந்தலுக்கு உதவும் ஒன்றை பற்றிய பதிவுதான் இது.
கூந்தலுக்கு அழகு சேர்க்க நினைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சிறந்த தேர்வுதான் தேங்காய்ப்பால். தேங்காய் பாலில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அதனால் இதை முகத்திற்கு பயன்படுத்தினால் முகம் அதிக பொலிவு பெறும். சருமத்திற்கு தேங்காய்ப்பாலை பயன்படுத்துவது குறித்து அனைவரும் அறிந்திருந்தாலும், இது கூந்தலுக்கும் நன்மை அளிக்கும் என்று உங்களுக்கும் தெரியுமா?
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, தேங்காய் பாலில் ஆரோக்கியமான நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. உண்மையில், இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும் இதில் வைட்டமின் C மற்றும் E நிறைந்துள்ளன. இது சருமத்தை இளமையாக வைத்திருக்கும். மேலும், இதில் உள்ள தாமிரம், செலினியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களுடன் புரதம் மற்றும் பல B வைட்டமின்கள், சருமத்திற்கு ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் முடி வளர்ச்சி அடைவதோடு, கூந்தல் மென்மையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவியாக இருக்கும்.
தேங்காய்ப் பாலை எப்படி பயன்படுத்த வேண்டும்
தேங்காய்ப் பாலை பாதாம் எண்ணெய்யுடன் கலந்து முடிக்கு பயன்படுத்த வேண்டும். அதாவது தேங்காய்ப் பாலுடன் பாதாம் எண்ணையை கலந்து இரவு நேரத்தில் முடிக்கு பயன்படுத்தி, காலையில் கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இதை மேற்கொண்டால் நல்ல பலனை பெற முடியும்.
தேங்காய்ப் பால் ஹேர் ஸ்பா
தேங்காய்ப் பாலை வைத்து தலைமுடியை மசாஜ் செய்யலாம். அதாவது தேங்காய்ப்பாலை எடுத்து உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யுங்கள். அதன் பின், அரை மணி நேரம் கழித்து, வெந்நீரில் கழுவலாம். இது உங்கள் தலையில் ஏற்கனவே இருந்த உடைந்த முடிகளை சரி செய்ய உதவியாக இருக்கும்.