தூங்கும்போது தலைமுடியை பின்னிப்போடுவதா அல்லது விரித்துப்போடுவதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதுகுறித்தான முழுமையான பதிவைப் பார்ப்போம்.
பண்டைய தமிழர்களின் நம்பிக்கைப்படி பெண்கள் தங்கள் தலைமுடியை விரித்துப்போடக் கூடாது. ஆனால், நாள் ஆக ஆக 6 மணிக்கு மேல் விரித்துப்போடக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் இப்போது பகல் இரவு என பாராமல் எப்போதுமே விரித்துப்போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
பழந்தமிழர்கள் காரணம் இல்லாமல் எதையும் சொல்லவில்லை. தூங்கும்போது தலைமுடியை விரித்தப்படி தூங்கக்கூடாது என்பதற்கு பின் பல காரணங்கள் இருக்கின்றன.
கூந்தலை விரித்து தூங்குவதால் கூந்தலில் உள்ள ஈரப்பதம் குறைந்து தலையில் வறட்சி ஏற்படுகிறது. கூந்தலும் வறண்டு போவதால், முடி உதிர்வு, பொடுகு ஆகியவை ஏற்படுகின்றன. இதுவே நீங்கள் பின்னிப் போட்டீர்கள் என்றால், ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. ஆனால், மிகவும் இறுக்கமாக பின்னிவிடாதீர்கள். இது பலருக்கு தலை வலியை ஏற்படுத்தி நிம்மதியான தூக்கத்தை கெடுத்துவிடும்.
மேலும் பின்னிப்போட்டு தூங்குவதால், ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலை பெறலாம். காலையில் எழுந்து சிகை அலங்காரம் செய்யும்போது வசதியாக இருக்கும்.
இரவு நேரங்களில் முடியை விரித்துவிட்டு தூங்குவதால் முடியில் உள்ள அழுக்குகள் மற்றும் தூசுகள் முகங்களில் படிந்து பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். பொடுகு போன்றவையும் முகத்தில் பட்டு பருக்களை உண்டாக்கும். இதுவே பின்னிப்போட்டால் அத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குறிப்பாக முடி உதிர்வு என்பது தடுக்கப்பட்டு முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. உச்சந்தலை முதல் நுனி வரை சீப்பை வைத்து சீவுவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி கூந்தல் வளர்ச்சி மேம்படுகிறது.
மேலும் சிக்கல் ஏற்படாமல் இருக்கும். இதனால் காலையில் சிக்கலில்லாமல் எளிதாக முடி ஸ்டைல் செய்யலாம்.
ஆனால், தலை முடி ஈரமாக இருக்கும்போது பின்னல் போடக்கூடாது. அதேபோல் தலையணையில் கவனம் செலுத்துவது அவசியம். காட்டன் துணியிலான தலையணை உறைகள் மிகவும் சிறந்தது. கூந்தலில் பின்னல் போடுவதற்கு முன்பு சிக்குகளை நன்கு எடுத்து பின்னர் பின்னல் போடவும். உச்சந்தலையில் நீர்ச்சத்து இருப்பது அவசியம் என்பதால், அதனை நன்றாக பராமரித்து வாருங்கள்.
மேலும் சுருள் முடி வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், இரவு பின்னிப்போட்டால், காலை எழும்போது சுருள் சுருளாக அழகாக இருக்கும். கருவியே இல்லாமல் முடியை அழகுப்படுத்திவிடலாம்.
இவையனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு முடியை பின்னிப்போடலாமா அல்லது விரித்துப் போடலாமா என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.