சாதாரண வகையான கூந்தல் உடையவர்களுக்கு பிரச்னைகள் இருக்காது. ஆனாலும் வாரத்திற்கு இருமுறை கட்டாயம் எண்ணெய் மசாஜ் செய்தல் வேண்டும். இதனால் தலைமுடி நன்றாக வளரும். நுனியில் வெடிப்பு வராது.ஆதலால், மசாஜ் மற்றும்கலரிங் செய்யும் முறையைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் ,ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சூடு செய்து உபயோகப்படுத்த வேண்டும். சூடு செய்யும் போது வாயகன்ற பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க விட்டு சிறிய கிண்ணத்தில் எண்ணெயை விட்டு சூடு செய்தல் வேண்டும்.
நெல்லிக்காய் எண்ணெய், கற்றாழை எண்ணெய், செம்பருத்தி எண்ணெய் இவையும் நல்ல பலனை கொடுக்கும். இந்த எண்ணையை வீட்டிலேயே தயாரித்து வைத்துக் கொண்டால் உபயோகப்படுத்தலாம். நெல்லிக்காயை லேசாக இடித்து அதை அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்து உபயோகிக்க வேண்டும்.
செம்பருத்திப் பூவையும் அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி உபயோகப்படுத்தலாம். கற்றாழையை இரண்டாக பிளந்து உள்ளே உள்ள பிசின் போன்று இருப்பதை எடுத்து தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி எடுத்து உபயோகிக்கலாம் .நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். தேங்காய் எண்ணெய் இல்லையெனில் ஆமணக்கு எண்ணெய் கொண்டு உபயோகப்படுத்தலாம்.
நெல்லி, செம்பருத்தி, கற்றாழை மூன்றையும் சேர்த்து ஒரு லிட்டர் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி வைத்து உபயோகிக்கலாம். செம்பருத்தி இலை ,தயிர், பயத்தமாவு மூன்றையும் பேக் போன்று உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும். கூந்தலை கடைசியாக அலசும் போது ஒரு தேக்கரண்டி தேனை கலந்து அலசினால் நல்ல போஷாக்கு கிடைக்கும்.
இயற்கை முறையில் கூந்தலுக்கு கலரிங்:
பாட்ச் டெஸ்ட் எனப்படும் திட்டு பரிசோதனைக்கு பிறகு கூந்தல் சாயத்தை உபயோகிக்க வேண்டும். இல்லாவிட்டால் இவற்றினால் சரும எரிச்சல் மற்றும் ஒவ்வாமை குறிகள் தோன்றும் .மேலும் புகழ்பெற்ற தரமான தயாரிப்புகளையும் வாங்க வேண்டும். ஆனால் இயற்கை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் கூந்தல் சாயங்களின் விலை சற்று கூடுதலாக இருப்பினும் பாதுகாப்பான முறையில் செய்து விடுவதால் இவற்றை தைரியமாக பயன்படுத்தலாம். அதிலும் நாமே தயாரிப்பதால் எந்தவிதமான பயமும் இன்றி பயன்படுத்தலாம்.
சாதாரண கூந்தலுக்கு இந்த வகை கலரின் செய்வது எளிது. கலரிங் மங்குவது போல் இருந்தால் மீண்டும் கலரிங் செய்தால் நன்றாகவே இருக்கும். புதிதாக தலையிலிருந்து வரும் முடிக்கு கலரிங் கிடைக்காமல் போகும்போது மீண்டும் உபயோகிக்கலாம். எந்த விதமான பக்க விளைவும் இதனால் வராது. செய்முறை இதோ:
பீட்ரூட் சாறு- ஒரு கப், நெல்லிக்காய் தூள்- அரை கப், மருதாணி தூள்- ஒரு கப், காபித்தூள்- ஒரு தேக்கரண்டி ,பெனகிரிக் தூள் -ஒரு தேக்கரண்டி ,லவங்கத்தூள்- ஒரு தேக்கரண்டி இவற்றை தேவையான அளவு தண்ணீரில் கலந்து, இரும்பு வானலியில் 10 மணி நேரம் ஊற விட்டு, பிறகு எடுத்து தலை முழுவதும் தடவி இரண்டு மணி நேரம் கழித்து தலையில் ஊற விட்டு, பிறகு சாதாரண நீரினால் தலையை கழுவ வேண்டும். நல்ல நிறம் கிடைக்கும். அன்றைய தினம் கடைகளில் விற்கும் ஷாம்பு எதுவும் உபயோகிக்க கூடாது.
ப்ளீச்:
எலுமிச்சைசாறு அரை கப், தேன் 4 தேக்கரண்டி ,வினிகர் 4 தேக்கரண்டி, பாதாம் பருப்பு அரைத்தது ஒரு தேக்கரண்டி இவற்றை கலந்து தலை முழுவதும் தடவி ஊறவைத்து இரண்டு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். அடர்த்தியான நீண்ட கூந்தல் உடையவர்கள் கூந்தல் முழுவதும் செய்ய வேண்டுமானால் அளவை தேவைக்கேற்றாற்போல் அதிகப்படுத்தி கொள்ளலாம்.
இது போல் செய்து சாதாரண கூந்தலை அழகுடன், மெருகுடன், நல்ல போஷாக்குடன் வளரச் செய்யலாம்.