சென்சிடிவ் சருமம் உடையவர்கள் பாடு பெரும்பாடு தான். பருவ காலங்களில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலே, சென்சிடிவ் சருமம் உடனே அதற்கு React ஆகி சில சருமப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அந்தப் பிரச்னைகளுக்கு ஏதாவது தீர்வு காண நினைத்து, சரும பராமரிப்பில் ஈடுபட, அதற்கும் இந்த சென்சிடிவ் சருமம் React ஆகி இன்னும் புதிய சருமப் பிரச்னைக்கு அழைத்துச் சென்றுவிடும். அல்லது இருக்கின்ற பிரச்சனையின் அளவு அதிகமாகிவிடும்.
என்னாடா இது..! பிரச்னைக்கு மேல பிரச்னை- னு நினைத்து எதுவும் செய்யவும் முடியாமல், செய்யாமல் இருக்கவும் முடியாமல் சென்சிடிவ் சருமத்தை வைத்துக் கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்காகவே, சில சரும பராமரிப்பு டிப்ஸை இந்தப் பதிவில் காணலாம்.
சென்சிடிவ் சருமதத்திற்கு, பிற சரும வகைகளைக் காட்டிலும் கூடுதல் கவனம் தேவை. சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவை முகத்தை கெமிக்கல், நுரை அல்லாத சோப்புகளை பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்வது அவசியமானது.
குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது பல பேருக்கு பிடிக்கும். ஆனால், இந்த சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் முடிந்த அளவு வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதில் வெதுவெதுப்பான நீரை குளிக்கப் பயன்படுத்தலாம், குளிர்காலத்தில் கூட வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்.
வெயில் காலத்தில், சருமத்தை வெயிலில் இருந்து மறைத்துக் கொள்வது அவசியமானது. குடை, கண்ணாடி, தொப்பி, கையுறை போன்ற பொருள்களை வெளியில் செல்லும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள், பழச்சாறுகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சரும வறட்சியை தடுத்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
பேஷியல் செய்வது சென்சிட்டிவ் ஸ்கின் டைப் உள்ளவர்களுக்கு எரிச்சல், ஒவ்வாமை மற்றும் அசௌகரியம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, பேஷியல் செய்வதற்கு முன், உங்கள் சருமத்திற்கு எந்த வகையான பேஷியல் செட் ஆகும் என்பதை தெரிந்து கொள்ள சரும மருத்துவரை அணுக வேண்டும்.
நீங்களாகவே எதையாவது தேர்ந்தெடுத்து செய்து கொண்டிருக்காமல் சரும மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அவர் பரிந்துரைக்கும் அழகு சாதனப் பொருள்கள் அல்லது சரும பராமரிப்பு பொருள்களை வாங்கி உபயோகப்படுத்தலாம். சரும பராமரிப்புப் பொருட்களை வாங்கும் போது, அதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருள்களின் பட்டியலை நன்கு ஆராய்ந்து விட்டு வாங்க வேண்டும்.
குறிப்பாக ஆல்கஹால், சல்பேட்ஸ், ப்ரொப்பைன்ஸ், பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள் போன்ற கெமிகல்ஸ் மூலப்பொருள்களாக சேர்க்கப்பட்டிருந்தால் அதனை தவிர்ப்பது நல்லது. செராஹைலூரோனிக் அமிலம், கிளிசரின் மற்றும் இயற்கை எண்ணெய்கள் போன்ற மென்மையான, சருமத்திற்கு ஊட்டமளிக்கும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும் பொருள்களை வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால், சில அத்தியாவசிய எண்ணெய்கள் எரிச்சல் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
எந்த ஒரு சரும பராமரிப்புக்களை தொடங்குவதற்கு முன்பும் முதலில் பேட்ச் சோதனை செய்து பார்க்க வேண்டும். பேட்ச் சோதனை என்பது அழகு சாதனம் அல்லது சருமப் பராமரிப்பு பொருள்களை காது மடல்களுக்குப் பின்னால் தொடர்ந்து ஒருவாரம் வரை தடவிப் பார்க்க வேண்டும். அவை எந்த சருமப் பிரச்னைகளையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிந்தால், அவற்றை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.