dress... Image credit - pixabay
அழகு / ஃபேஷன்

ஆடைகளைத் தேர்ந்தெடுக்க சில ஐடியாக்கள்!

இந்திராணி தங்கவேல்

சாதாரணமாக உடைகளை தேர்ந்தெடுக்க கடைக்குச் செல்லும் பொழுது இது சரி வருமா அது சரி வருமா? எப்படி வாங்கலாம்? என்று சற்று யோசிப்போம். அதற்கு சில ஐடியாக்கள் இதோ:

நாம் ஆடைகளை தேர்ந்தெடுக்கும் பொழுது உடலில் நிறம், உடல் அமைப்பு, சீதோஷ்ண நிலை இவற்றை மனதில் கொண்டு ஆடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பொழுதுதான் உறுத்தல் இல்லாமல் உடுக்க முடியும். இல்லையேல் நாம் தேர்ந்தெடுத்தது சரியான தேர்வு இல்லையோ என்று அடிக்கடி மனதில் எண்ணத் தோன்றும். 

நாம் எந்த நிறமாக இருந்தாலும் பளீரென்று அனைவருடைய கவனத்தையும் தன் பால் ஈர்க்கக் கூடிய வகையில் அது இருக்குமாயின் பொருத்தமான ஆடைகளை நாம் தேர்வு செய்து அணியவில்லை என்றே அர்த்தம். தீவிரமான காடியான நிறங்களை எப்போதுமே எந்த நிறம் உடையவர்களுமே தவிர்ப்பது நல்லது. 

நாம் துணி வாங்கச் செல்லும் பொழுது நம் வாழ்க்கைத் தரத்துக்குக் தகுந்ததாகவும், பார்வைக்கு கவர்ச்சி உள்ளதாகவும், அணிவதற்கு சௌகரியமானதாகவும் நம் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் வகையிலும் ஆடைகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது. அதற்காக செலவழிக்கும் நேரம் மிகவும் பயனுள்ளதே.

மேலும் துணி வாங்கும் போது நிறைய நீள அகலங்களை கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும் .பல சாதாரண கடைகளில் கிடைக்கும் துணிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படலாம். பாதிவிலை, விலை சரசம், குறைந்த விலை என்ற மனம் கொண்ட பல வாசகங்கள் நம்மை கவர்ந்திழுக்கலாம் . தள்ளுபடி, ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம் போன்றது அதில் சிறப்பு வாய்ந்த வாசகங்கள் ஆகும். விலை குறைவாக இருக்கும் பொழுது துணியும் கூட சில அங்குலம் குறைவாகவும் இருக்கலாம் (சில ஜாக்கெட் பிட்டுகள் போல) என்பதை நினைவில் வைத்து குறைந்த விலையில் உள்ளதை தவிர்த்து விடுவது நல்லது. 

நம் உயரத்திற்கும் பருமனுக்கும் தகுந்த மாதிரி ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு துணியை வாங்கும் பொழுது அது உண்மையாகவே உடனடியாக தேவை இதுதானா என தீர்மானித்த பின் வாங்குவதே சிறந்தது. 

உதாரணமாக குள்ளமானவர்கள் நேர்கோடுகள் போட்ட ஜாக்கெட்டுகளை அணியலாம் .அவர்கள் அணியும் புடவையின் தலைப்பிலும் கரையிலும் இவ்வித கோடுகள் இருப்பின் இன்னும் சிறப்பு. ஜாக்கெட்டின் கை நீளமாக இருக்கும் பட்சத்தில் நன்றாகவே பொருந்தும். சிறிது அழகான பூக்கள் போடப்பட்ட துணிகளையும் இவர்கள் அணிந்தால் பாந்தமாக இருக்கும். 

உயரமானவர்களுக்கு பெரிய பூக்கள் ,அழகிய கோடுகள், கட்டங்கள் ஆகியவை போடப்பட்ட துணிகளை அணியும் பொழுது அவர்களுடைய அழகு எடுப்பாக தெரிகிறது.

பெரும்பாலும் புடவையைத் தேர்ந்தெடுப்பதில் சிரமம் ஏற்படுவதில்லை. அதற்கான ஜாக்கெட்டுகளை தைக்கும் பொழுது தான் பல்வேறு பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது. ஆதலால் ஜாக்கெட்டை தைக்க கொடுக்கும் பொழுது அவை உடலுக்கு பாந்தமாக பொருந்தும் படி நல்ல அளவு ஜாக்கெட்டை எடுத்துக் கொடுக்க வேண்டும். 

பருமன் ஆனவர்கள் மிகவும் பிடிப்பான ஜாக்கெட்டுகளை அணிவது அவர்களின் உடல் நிலைக்கு ஒத்து வராது. இதனால் ரத்த ஓட்டம் தடைபடலாம். மிகவும் இறுக்கமான ஜாக்கெட்டை அணிந்து இருப்பவர்கள் பேசும்பொழுது கோபத்துடன் இருப்பதைக் கூட சில நேரங்களில் கவனிக்க முடியும் .மெலிந்தவர்கள் பிடிப்பான ஜாக்கெட் அணிவது பார்ப்பதற்கு விகாரமாக இருக்கும். அவர்கள் சிறிது தளர்ந்த ஜாக்கெட்டுகளை அணிவது நல்லது.

ஆள் பாதி ஆடை பாதி என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இவ்வளவு பார்த்து பார்த்து வாங்கினால் தான் இடத்திற்கு தகுந்தார்போல் நேர்த்தியாக உடுத்தி ஈடுபட்ட வேலையை இன்பமுடன் முடிக்க முடியும். கௌரவமான தோற்றத்திற்கு இவ்வளவும் அவசியம் அல்லவா?

வெற்றிக்கு வித்திடும் நவராத்திரி!

நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் தெரியுமா?

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

SCROLL FOR NEXT