நகங்களை வலிமையாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அந்தவகையில் இதற்கான சில டிப்ஸ் குறித்துப் பார்ப்போம்.
பலருக்கும் உள்ள மிகப்பெரிய பிரச்னை நகம் உடைவதுதான். அதற்கு காரணம் நகம் ஆரோக்கியமாக இல்லை என்பதுதான். நகம் ஆரோக்கியமாக இல்லை என்றால் நமது உடலுமே ஆரோக்கியமாக இல்லை என்றுதான் அர்த்தம். பெண்கள் தங்கள் நகங்களை நீளமாக வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். அதற்காக வளர்த்துக்கொண்டிருக்கும்போதே பாதியில் நகம் உடைந்துவிடும். இதனால், பலர் நகத்தை நீளமாக வளர்க்கும் முயற்சியில் தோற்றுப் போய்விடுகின்றனர்.
எப்படி நாம் நமது முகத்தையும் முடியையும் பராமரிக்கிறோமோ அதேபோல் நகங்களையும் பராமரிக்க வேண்டும்.
அந்தவகையில் நகத்தைப் பராமரிப்பதற்கான சில டிப்ஸ் பார்ப்போம்.
முகச்சருமத்திற்கு எப்படி மாஸ்க் போடுகிறோமோ அதேபோல் நகத்திற்கும் மாஸ்க் போட வேண்டும். கற்றாழை ஜெல்லை மட்டும் நகத்தில் தடவலாம். கற்றாழை ஜெல் நகத்திற்கு பளபளப்பை கொடுக்கிறது. மேலும் கற்றாழை ஜெல் மற்றும் தேன் கலந்து தடவலாம்.
நகங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என்றால், முதலில் சுத்தமாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, பேக்கிங் பவுடர் கலந்து வைக்க வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் கலந்து நகங்களில் தடவ வேண்டும். 2 நிமிடங்களுக்கு பிறகு சாதாரண நீரில் நகங்களை கழுவினால் நகங்கள் சுத்தமாக மாறிவிடும்.
தேங்காய் எண்ணெயில் சில துளிகள் தேயிலை மர எண்ணெயைக் கலந்து, பின்னர் இந்த கலவையை இரவில் தூங்கும் முன் நகங்களில் தடவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நகங்கள் பளபளப்பாகவும் வலுவாகவும் மாறும்.
பாலில் உங்கள் நகத்தை நனையுங்கள். இல்லையெனில் பாலில் முட்டையை கலந்து நகத்தை நனையுங்கள். 5 நிமிடங்கள் அப்படியே வைத்து எடுத்து பின்னர் நகங்களை சுத்தப்படுத்தவும். இதனால் உங்கள் நகங்கள் மிகவும் வலுவாக மாறும்.
நெய்யில் சிறிது கல் உப்பைக் கலக்கலாம். நெய் நகங்களை ஈரப்பதமாக்குவதோடு அவற்றை பலப்படுத்துகிறது. இல்லையெனில் வெறும் நெய் மட்டும் வைத்து மசாஜ் செய்யலாம். இதனால் நகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
இந்த டிப்ஸ் பின்பற்றி உங்கள் நகங்களை வலிமையாக்கலாம்.