பூமி வெப்பமடைதல் அதிகரித்து வருவதைப் போலவே நச்சுக்காற்று மாசுபாட்டின் அளவும் கூடிக்கொண்டே போகிறது. நமது சுற்றுச்சூழல் சமீப காலமாக பெரும் ஆபத்தில் உள்ளது. எனவே, சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக உள்ள வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வது நல்லது. சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற மூன்று எளிய வழிகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
சமையலறைத் தோட்டம்: சமையலறையை பசுமையாக வைத்துக்கொள்ளவும் அதிக அடுப்பு சூட்டு வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் சமையலறை தோட்டம் உதவுகிறது. சமையலறையின் உட்புறத்தில் மூலிகைத் தோட்டம் வைக்கலாம். செடிகளை வளர்ப்பது கண்களுக்கு அழகாகவும் வாழ்க்கை முறைக்கு பச்சை நிறத்தை சேர்க்கவும் சிறந்த வழி. சமையலறையையும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் உள்ள காற்றை சுத்தப்படுத்தும்.
சிறிய தொங்கும் தொட்டிகளில் சமையலுக்கு உதவும் புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை போன்றவற்றை வளர்க்கலாம். மருத்துவ குணம் கொண்ட கற்பூரவல்லி புதினா, கற்றாழை, லெமன் கிராஸ் போன்றவையும் நன்றாகவே வளரும். பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டுவதாக மட்டுமல்லாமல், உணவிற்கும் பயன்படும்.
தண்ணீரை சேமிக்கவும்: சமையலறை சிங்க் குழாயிலிருந்து ஒரு துளி தண்ணீர் ஒழுகிக்கொண்டே இருந்தால் கூட அது பெருமளவு தண்ணீர் சேதத்துக்கு வழி வகுக்கும். சிலர் சிங்க் குழாயை சரியாக கூட மூடாமல் விட்டுவிடுவார்கள். எனவே, தண்ணீரை சேமிப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கசியும் குழாயை சரி செய்யவும். சமையலறை சிங்கில் இருந்து வெளியேறும் தண்ணீரை செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச பயன்படுத்தலாம்.
இயற்கை உரம் தயாரிப்பது: குப்பைகளைப் பிரிப்பதை இன்னும் முனைப்புடன் கடைப்பிடித்தால் உலகம் வாழ மிகச் சிறந்த இடமாக இருக்கும். முதலில் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தனித்தனிக் தொட்டிகளில் சேகரிக்கவும். காலி பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், தேங்காய் ஓடுகள் போன்றவற்றை ஒரு குப்பைக் கூடையில் போடவும். எஞ்சி இருக்கும் உணவு, தேயிலை, காபி, காய்கறித் தோல்கள், அரிசி, முட்டை ஓடுகள் போன்றவற்றை மற்றொரு தொட்டியிலும் சேமித்து வர வேண்டும். குப்பைகளைக் கொண்டு உரம் தயாரிக்கலாம்.
ஒரு பெரிய மண் தொட்டியில் சிறிய துளைகளைப் போட்டு அதில் மண்ணை நிரப்பவும். பாதியளவு மண்ணை நிரப்பியவுடன் சமையல் கழிவுகளை அதில் கொட்டி அதன் மீது சிறிது மண் மற்றும் உலர்ந்த இலைகள் கொண்டு நிரப்பவும். பின்பு அதை ஒரு மரப்பலகையால் மூடவும் அல்லது வேறு ஏதாவது மூடி போட்டு மூடி வைக்கவும். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சமையலறை கழிவுகள் உரமாக மாற்றப்படும். இந்த உரம் சமையலறைத் தோட்டத்தில் உள்ள தாவரங்களுக்கு வளமான ஊட்டச்சத்துகளை வழங்கப் பயன்படுகிறது. மேலும் சமையலறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கரப்பான் பூச்சி. சிலந்தி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நமது தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது சுற்றுச்சூழலுக்காக நாம் செய்யும் சிறிய விஷயங்களோ மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. உலகத்தை சிறந்த மற்றும் தூய்மையான இடமாக மாற்றுவதற்கு நமது வீட்டில் இருந்து அந்த முயற்சியை தொடங்க வேண்டும். நாம் வாழ விரும்பும் சிறிய உலகத்தை வீட்டிலேயே மாற்றத்தொடங்கி மகிழ்ச்சியுடன் வாழலாம்.