தேசிய அழிந்து வரும் உயிரினங்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அழிந்து வரும் உயிரினங்களின் அவலநிலை மற்றும் அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் கருப்பொருள், ’Celebrate Saving Species.' ‘சேமிப்பு இனங்களைக் கொண்டாடுங்கள்’ என்பதாகும். அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க செய்யவேண்டிய 9 எளிய விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. நமது பகுதியில் உள்ள உயிரினங்களைப் பற்றி அறிந்து கொள்தல்: நம் வீட்டிற்கு அருகில் வாழும் அற்புதமான வனவிலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் தாவரங்களைப் பற்றி நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். ஆபத்தான உயிரினங்களை பாதுகாப்பதற்கான முதல் படி. அவை எவ்வளவு சுவாரசியமானவை மற்றும் முக்கியமானவை என்பதை பற்றி அறிந்து கொள்வது.
2. தேசிய வனவிலங்கு புகலிடம், பூங்கா அல்லது பிற திறந்தவெளியைப் பார்வையிடவும்: அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு அவை வாழும் இடங்களைப் பாதுகாப்பதே சிறந்த வழி என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். உள்ளூர் இயற்கை மையம் அல்லது வனவிலங்கு புகலிடத்தில் தன்னார்வத் தொண்டு செய்யலாம்.
3. தாவரங்கள் முளைத்து வளர: தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் போன்ற பூச்சிகள் உங்கள் தோட்டத்தில் உள்ள தாவரங்களுக்கு மகரந்தச் சேர்க்கைக்கு உதவும். வீட்டில் தோட்டம் இல்லாதவர்கள் தாங்கள் உண்டு முடித்த பழங்களின் கொட்டைகளை பிரயாணம் செய்யும்போது காலியிடங்களில் வீசி எறியலாம். அங்கு தாவரங்கள் முளைத்து வளர வழிவகை செய்யலாம். இதனால் அங்கு தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் வருகை தந்து அந்த இடத்தை பசுமையாக்கும்.
4. இயற்கையான உரங்களைப் பயன்படுத்தவும்: செயற்கையான பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை தவிர்க்கவும். இவை மண்ணில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களின் சத்துக்களை சிதைக்கின்றன. இவற்றை உண்ண வரும் பலவிதமான பறவைகள் விஷம் கலந்த உணவுகளை உண்ணும்போது அவற்றிற்கு ஆபத்து ஏற்படுகிறது. இந்த ரசாயனங்கள் அவர்களது வாழ்வாதாரத்தையே பாதிக்கின்றன. எனவே இயற்கையான உரங்களை பயன்படுத்தவும்.
5. வாகனத்தை மெதுவாக ஓட்டவும்: மரங்கள் அடர்ந்த அல்லது காட்டுப்பகுதிகளில் பிரயாணம் செய்யும்போது வாகனங்களை மெதுவாக ஓட்ட வேண்டும். மிகவும் வேகமாக செல்லும்போது அதில் அடிபட்டு சில விலங்குகள், பாம்புகள் போன்றவை இறக்க நேரிடுகின்றன. மக்கள் வசிக்கும் பகுதிகளில் வாழும் வனவிலங்குகளுக்கு இவை மிகப்பெரும் சவாலாக இருக்கின்றன. அவை சாலை கடந்து செல்லும்போது வாகனங்களில் அடிபட்டு சில மிருகங்கள் இறக்க நேரிடுகின்றன. அதனால் வாகனத்தை மிதமான வேகத்தில் ஓட்டுவது சிறந்தது.
6. பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே தவிர்த்தல்: வீட்டில் குப்பைகளை சேர்க்கும்போது மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தனித்தனியாக சேமிக்கவும். பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே தவிர்த்தால் அவற்றை தெரியாமல் உண்ணும் ஆடு, மாடு, நாய் போன்ற உயிரினங்கள் பாதுகாக்கப்படும். பயணம் செய்யும்போது பிளாஸ்டிக் பாட்டில்களை எறிய வேண்டாம். அவற்றை முறையாக டிஸ்போஸ் செய்ய வேண்டும்.
7. எலக்ட்ரானிக் பொருட்களை மறுசுழற்சி செய்யவும்: வருடத்துக்கு ஒருமுறை மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் செல்போன்களை வாங்க வேண்டும் என்பதற்காக பழையவற்றை வீசி எறிந்து விட்டு பலர் புது செல்போன்கள் வாங்குகிறார்கள். அப்படி செய்யாமல் அவற்றை மறுசுழற்சி செய்ய வேண்டும்.
8. இந்த பரிசு பொருட்களை வாங்காதீர்கள்: அழிந்து வரும் உயிரினங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை ஒருபோதும் வாங்காதீர்கள். ஆமை ஓடு, முதலைத் தோல், யானைத் தந்தம், புலித்தோல், காண்டாமிருகம், குரங்குகள், ஆசிய கருப்பு கரடி போன்ற விலங்குகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கக்கூடாது.
9. வன விலங்குகளின் வாழ்விடத்தைப் பாதுகாத்தல்: வன விலங்குகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் குஞ்சுகளை வளர்க்க இடங்கள் இருக்க வேண்டும். மரம் வெட்டுதல், எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடுதல் வன விலங்குகளின் வாழ்விடங்களை அழிக்கின்றன. அழிந்து வரும் உயிரினங்களின் வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் இந்த பாதிப்புகள் குறைக்கப்பட வேண்டும்.