பல நூறு ஆண்டுகள் பழமையான ரோமானியக் கோழி முட்டைகளில் திரவம் இருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு, அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்காக இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம்ஷயரில் தோண்டப்பட்ட குழியில், சுமார் 1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த முட்டையின் உள்ளே அதன் திரவம் இன்றளவும் அப்படியே இருக்கிறது. இந்த திரவம் முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவின் கலவையாக இருக்கலாம் என நம்பும் விஞ்ஞானிகள், இதை மேலும் ஆய்வு செய்வது மூலமாக, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த புதிய பறவை இனத்தின் ரகசியத்தை, இந்த முட்டைகள் வெளிப்படுத்தும் எனக் கூறுகின்றனர்.
இதுகுறித்து பேசிய தொல்பொருள் விஞ்ஞானியான டானா குட்பர்டன் பிரவுன், “அகழ்வாராய்ச்சியில் அவ்வப்போது பல ஓடுகளின் துண்டுகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். ஆனால் முழு முட்டை எங்களுக்குக் கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது. இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் அந்த முட்டையின் திரவம் அப்படியே அதன் உள்ளே இருக்கிறது. பல நூறு ஆண்டுகளில் வெளியேறியிருக்க வேண்டிய இதன் திரவங்கள், எப்படி இதன் உள்ளேயே இருக்கிறது? என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது முற்றிலும் நம்ப முடியாததாகும். இந்த முட்டைகள் உலகிலேயே மிகப் பழமையான முட்டைகளாக இருக்கலாம்” என அவர் கூறினார்.
2010ல் இந்த முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்ட போது, மொத்தம் மூன்று முட்டைகள் கிடைத்தன. அதில் இரண்டு முட்டைகள் ஈரமான சூழ்நிலையில் இருந்து வெளியே எடுத்ததும் வெடித்துள்ளது. வெடித்த அந்த முட்டைகளிலிருந்து கந்தக நறுமணம் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் தற்போது முழுமையாக இருக்கும் ஒரு முட்டையை மைக்ரோ CT ஸ்கேனிங் செய்து பார்த்தபோது, அதன் உள்ளேயும் திரவம் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். AYLESBURY EFF எனப்படும் இந்த திரவத்தை கவனமாகப் பிரித்தெடுத்து, அடுத்த கட்ட ஆய்வு மேற்கொள்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.