இயற்கையானது சில இனங்களை மிகவும் வித்தியாசமான செயல்முறைகளுக்காக உருவாக்கியுள்ளது. அப்படிதான் ஆப்பிரிக்கா சமவெளிகளில் காணப்படும் ‘ஆக்ஸ் பெக்கர்’ என்ற ஒரு வகைப் பறவை தனித்துவமான உணவு உண்ணும் நடத்தையைக் கொண்டுள்ளது. அதாவது தனக்கு உணவளிக்கும் விலங்குகளின் ரத்தத்தையே குடித்து வாழ்வதாக சொல்லப்படுகிறது. சரி வாருங்கள் இந்தப் பதிவில் இந்த விசித்திரமான பறவையின் நடத்தையைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஒரு சிம்பயோட்டக் காதல்: காட்டில் வாழும் பாலூட்டி விலங்குகளுக்கும் இந்தப் பறவைகளுக்கும் ஒரு பரஸ்பர உறவு உள்ளது. அதாவது காண்டாமிருகம், எருமைகள், வரிக்குதிரைகள் போன்ற விலங்குகளின் தோலை பாதிக்கும் உண்ணிகள், புழுக்கள் மற்றும் பேன்கள் போன்ற ஒட்டுண்ணிகளை ஆக்ஸ் பெக்கர்கள் உண்கின்றன. மேலும் பாலூட்டிகளுக்கு ஏதேனும் ஆபத்து வரும்போது இந்த பறவைகள் சத்தம் எழுப்பி காப்பதால் அவற்றின் முதுகில் அமர்வதற்கு பாலூட்டிகள் அனுமதி அளிக்கின்றன. அதேபோல ஆக்ஸ் பெக்கர்களுக்கு தேவையான உணவும் விலங்குகளின் உடலில் கிடைப்பதால் ஒரு நம்பகமான புரிதல் அங்கே நிலவுகிறது.
ரத்தம் குடிக்கும் பறவைகள்: உதாரணத்திற்கு ஒரு காளையின் உடலில் உள்ள பூச்சிகள், லார்வாக்கள், உண்ணிகள் மற்றும் இறந்த தோல்களை ஆக்ஸ் பெக்கர்கள் உண்கின்றன. ஆனால் இந்தப் பறவைகள் இவற்றிற்கு உணவளிக்கும் விலங்குகளின் ரத்தத்தைக் குடிப்பதாக சொல்லப்படுகிறது. விலங்குகளின் காயமடைந்த பகுதியில் உள்ள லார்வாக்கள் மற்றும் பூச்சிகளை இவை சாப்பிடும்போது அங்கிருந்து ரத்தம் வழிகிறது.
இந்த நடத்தை வெளியே இருந்து பார்ப்பதற்கு ஆக்ஸ் பெக்கர்கள் விலங்குகளின் ரத்தத்தைக் குடிப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் உண்மையில் காயத்தை சுற்றி குவிந்து கிடக்கும் இறந்த தோல், சளி மற்றும் திசு திரவங்கள் போன்றவற்றையே ஆக்ஸ்பெக்டர்கள் உண்கின்றன.
விலங்கின் காயமடைந்த பகுதியை இவை சுத்தப்படுத்துவதன் மூலம் காயம் விரைவாக குணமடைய உதவுகிறது. இது ஒருபோதும் அந்த விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காது. இருப்பினும் இந்த பறவைகள் தனக்கு உணவு அளிக்கும் விலங்குகளின் ரத்தத்தையே குடிப்பதாக கட்டுக்கதைகள் பரவி வருகிறது.
ஆக்ஸ் பெக்கர்ஸ் மற்றும் பெரிய பாலூட்டிகளுக்கு இடையே இருக்கும் இந்தத் தொடர்பு உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. எனவே இத்தகைய கட்டுக்கதைகளை நம்பாமல், இந்த அதிசய இனங்களின் வாழ்விடங்களை பாதுகாப்பதால் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒட்டுமொத்த பல்லுயிர் பெருக்கத்திற்கும் ஆரோக்கியமானதாக இருக்கும்.