பசுமை / சுற்றுச்சூழல்

காற்றை சுத்திகரிக்கும் தாவரங்கள்!

எஸ்.விஜயலட்சுமி

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பூமியில் வீசும் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. மாசுக்கள் நிறைந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் ஆஸ்துமா, சைனசிடிஸ், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பிற சுவாசக் கோளாறுகளால் மக்கள் அவதியுறுகின்றனர். தற்காலத்தில் தண்ணீரை காசு கொடுத்து வாங்குவது போல, எதிர்காலத்தில் சுத்தமான காற்றையும் பணம் தந்தே வாங்கவேண்டிய நிலைமையும் நமக்கு வரலாம்.

தாவரங்கள் மனித குலத்தின் இருப்புக்கு இன்றியமையாதவை மட்டுமல்ல, பூமியின் ஆக்ஸிஜன் தேவைக்கு மிகப்பெரிய ஆதாரங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. ஆலமரம், வேம்பு போன்ற மரங்கள் பூமிக்கு சுத்தமான காற்றை வழங்குகின்றன. அதேபோல நாம் வீட்டில் வைத்து வளர்க்கும் துளசி மற்றும் கற்றாழை செடிகள் சுத்தமான காற்று மற்றும் அதிக அளவு ஆக்ஸிஜனை வழங்கி, நமது சுவாசத்தை மேம்படுத்துகின்றன என்பது ஆச்சரியமான விஷயம்.

‘மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசியின் இலைகள், தண்டு, பூ, வேர், விதைகள் என இந்தச் செடியின் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணம் கொண்டவை. சுவாசக் கோளாறுகள், தோல் நோய்கள், மன அழுத்தம் மற்றும் இதய நோய், சர்க்கரை நோய், மலேரியா, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது துளசிச் செடி. அத்துடன் புவி மண்டல காற்றை சுத்திகரிப்பானாக விளங்குகிறது துளசிசெடி. இது சுற்றுச்சூழலில் இருந்து கார்பன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உறிஞ்சுகிறது. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை அதிக அளவு ஆக்ஸிஜனை இந்தச் செடிகள் வெளியிடுகின்றன. இயற்கையான காற்று சுத்திகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் துளசிச் செடிகள் குறிப்பிடத்தக்க பங்களிக்கின்றன.

இதேபோல், மருத்துவத் தாவரமாக விளங்கும் கற்றாழை பல்வேறு சரும நோய்கள் மற்றும் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இவற்றின் வெள்ளை ஜெல் பல மருத்துவ செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இரவில் ஆக்ஸிஜனை வெளியிட்டு காற்றை சுத்தப்படுத்துவதோடு, நாம் சுவாசிக்க புதிய ஆக்ஸிஜனையும் வழங்குகிறது. ஆல்டிஹைடுகள் மற்றும் பென்சீன் போன்ற நச்சுகளை காற்றில் இருந்து இது அகற்றுகிறது.

துளசி மற்றும் கற்றாழை செடிகளை தொட்டியில் வைத்து அடுக்ககங்களில் வசிப்பவர்கள் கூட வளர்க்கலாம். இவற்றைப் பராமரிப்பது எளிது. மேலும், துளசியின் விதைகள் காற்றில் பரவி அருகில் சிறு செடிகளை உருவாக்கும். அதேபோல கற்றாழை செடிகளும் வாழையைப் போலவே பக்கக் கணுவு ஈன்று மேலும் பல செடிகளை உருவாக்கும். இவற்றை வீட்டில் வைத்து வளர்த்து சுத்தமான காற்றை மகிழ்வுடன் சுவாசிப்போமே!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT