தமிழகத்தில் அரிதாகக் காணப்படும் கருப்பு நிற நாரைகள் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளைநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்த பரப்பளவில் அதிகப்படியான வனப்பகுதி உள்ளது. இதில் பல்வேறு வகையான தாவர இனங்களும், பாலூட்டிகளும், பறவை இனங்களும், வண்ணத்துப்பூச்சி இனங்களும் காணப்படுகிறது. குறிப்பாக இந்த ஊரின் நீர்நிலைகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வழக்கம். சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில், புதுவிதமான பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது. இதன் மூலமாக எதுபோன்ற பறவை இனங்கள் கிருஷ்ணகிரியில் உள்ளது என்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் பல நீர்நிலைகள் மற்றும் சுற்றுவட்டார விளைநிலைப் பகுதிகளில், தற்போது அரிதான கருப்பு நாரைகள் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது. வழக்கமாக விளைநிலங்களில் கொக்குகளும் வெள்ளை நாரைகளும் இருப்பதைப் பார்த்த விவசாயிகள், தற்போது முழுவதும் கருப்பு நிற நாரைகள் இருப்பதைக் கண்டு ரசிக்கின்றனர். இவை பார்ப்பதற்கு முற்றிலும் வித்தியாசமாக இருப்பதால் அந்த வழியே செல்லும் மக்கள் அனைவரும் இவற்றை ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.
இந்த வகை நாரைகள் கடந்த சில ஆண்டுகளாகவே மழைக்காலம் முடிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் தென்படுவதாகக் கூறப்படுகிறது. நடவுக்காக உழவு செய்த நிலத்தில் வெள்ளை நாரையுடன் சேர்ந்து கருப்பு நாரைகளும், கூட்டமாக இணைந்து புழு பூச்சிகளை உண்பதை நாம் ரசிக்க முடிகிறது. அழிந்து வரும் பட்டியலில் இருக்கும் இந்த வகை நாரைகளை பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
இந்த வகை நாரைகள் ஒவ்வொரு ஆண்டும் சீசன் காலங்களில் இடத்திற்கு இடம் மாறி தங்களுக்கான சிறந்த சூழலை ஏற்படுத்தி இனப்பெருக்கம் செய்யும் என வனத்துறை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.