வீட்டிலேயே தோட்டம் அமைத்துப் பராமரித்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாடித் தோட்டத்தின் வரவிற்கு பிறகு தான், பலரும் வீட்டுத் தோட்டத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். வீட்டுத் தோட்டத்தை பொழுதுபோக்கிற்காக தொடங்கி, பின்னாளில் அதிலேயே அதிக நேரத்தை செலவிடும் இல்லத்தரசிகளும் உள்ளனர். தோட்டத்தில் நாம் அதிக நேரத்தை செலவிடும் போது, மனதளவில் மகிழ்ச்சி அடைவதோடு, மன அழுத்தமும் குறைகிறது.
வீட்டுத் தோட்டம் அமைத்த பிறகு, அதனை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டியது அவசியம். சிலர் தோட்டத்திற்கான உரங்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்குகின்றனர். வீட்டுத் தோட்டத்திற்கு அதிக அளவில் உரம் தேவைப்படாது. ஆகையால், சமையலறைக் கழிகள் மற்றும் பழத் தோல்களையே உரமாகப் பயன்படுத்தலாம். இது முற்றிலும் நல்ல பலனைத் தரக் கூடியது. அவ்வகையில், பூசணிக்காய் தோலை உரமாக எப்படி பயன்படுத்துவது என்பதை இப்போது காண்போம்.
பூசணிக்காய் தோலின் நன்மைகள்:
பூசணிக்காய் தோலில் அதிகளவில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் தோலில், சுமார் 550 மில்லி கிராம் என்றளவில் பொட்டாசியம் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இந்தச் சத்து பூக்கள் மற்றும் பழங்களின் மேம்பட்ட வளர்ச்சிக்கு உதவுகிறது. வறட்சி எதிர்ப்பை அதிகரித்து, தாவர வீரியத்தையும் மேம்படுத்துகிறது.
பூசணிக்காய் தோல்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, ஒரு செடிக்கு சுமார் 2 முதல் 3 கைப்பிடிகள் அளவு பயன்படுத்த வேண்டும்.
உங்களின் வீட்டுத் தோட்ட மண்ணில் உரமிடப்பட்ட பூசணிக்காயைச் சேர்ப்பதனால் தக்காளி மற்றும் பூசணிக்காய் ஆகிய தாவரங்களில் பழ உற்பத்தி கணிசமாக உயரும்.
பொட்டாசியம் நிறைந்துள்ள பூசணிக்காய் தோல்கள் மலர்ச் செடியில் பூக்கும் தன்மையினை அதிகரிக்க உதவுகிறது.
வேர் வளர்ச்சி:
100 கிராம் பூசணிக்காய் தோலில் 20 மில்லிகிராம் என்ற அளவில் பாஸ்பரஸ் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இது, வேர் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகிறது.
மண் செறிவூட்டல்:
மெக்னீசியம் உள்பட பல முக்கிய நுண்ணூட்டச் சத்துக்களும் பூசணிக்காய் தோலில் அதிகமாக உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் மண்ணின் தன்மையை செழுமைப்படுத்தவும், மண் வளத்தினை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும், ஒட்டுமொத்த தாவர வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் பூசணிக்காய் தோல் முக்கிய பங்காற்றுகிறது.
பூசணிக்காய் தோல்கள் சிதைவுறுவதால், அவை படிப்படியாக ஊட்டச்சத்துக்களை வெளியிடுகின்றன. இதன் மூலம் மண் வளம் மேம்படும். பூசணிக்காயில் இருக்கும் கரிமப்பொருள்கள், மண் அரிப்பைத் தடுக்க உதவி புரிகிறது. உங்கள் மண் ஆரோக்கியமாக இருப்பதையும் பூசணிக்காய் தோல் உறுதி செய்கிறது.
உபயோகிக்கும் முறை:
பூசணிக்காய் தோல்கள் சிதைவதற்கு 2 நாட்களுக்கு வெயிலில் உலர வைக்க வேண்டும். இவை உலர்ந்த பின் அரைத்து, 8 முதல் 10 வாரங்கள் நிறைந்த ஒரு செடிக்கு 2 முதல் 4 டீஸ்பூன் அளவு பயன்படுத்த வேண்டும்.
தோட்டக்கலை வளர்ப்பில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் செயற்கை உரங்களைத் தவிர்த்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்துங்கள். இதுவே, ஆரோக்கியமான காய்கறிகள், பழங்கள் கிடைக்க உதவும். நஞ்சற்ற காய்கறிகள் வேண்டுமாயின், இயற்கை உரங்கள் தான் நமக்கு மூல ஆதாரம் என்பதை மறக்க வேண்டாம்.