Insects Img Credit: Lexica
பசுமை / சுற்றுச்சூழல்

இந்த பூச்சிகளை மட்டும் சீண்டி பார்க்காதீர்கள்!

A.N.ராகுல்

இந்தியா பல்வேறு வகையான பூச்சிகளின் தாயகமாகும், அவற்றில் பல சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதிலும் மனித வாழ்க்கையை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில பூச்சிகள் நமக்கு சாதாரணமாக கருதப்பட்டாலும், சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பின் காரணமாக அவை எந்த சூழ்நிலையிலும் அழிக்கவோ அல்லது தொந்தரவு செய்யக் கூடாதவை, அவைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

என்னென்ன பூச்சிகள்:

1. தேனீக்கள்: தேனீக்கள் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட நன்மை தரும் ஒரு பூச்சி வகை. பழங்கள், காய்கறிகள் உட்பட பல பயிர்களுக்கான விளைச்சல்களுக்கு முக்கியமான மகரந்தச் சேர்க்கைக்கு (Pollination) உதவுகின்றன. தேனீக்கள் இல்லை என்றால் பயிர்களின் உற்பத்தி வெகுவாகக் குறைந்து, உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார இழப்புகளுக்கு வழிவகுக்கும். கூடுதலாக, காட்டில் வளரும் தாவரங்களுக்கு மகரந்தச் சேர்க்கை செய்வதன் மூலமும் தேனீக்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரிதும் பங்களிக்கின்றன.

2. பட்டாம்பூச்சிகள்: தேனீக்கள் போன்று தான் பட்டாம்பூச்சிகள் முக்கியமான மகரந்தச் சேர்க்கையாளர்கள். அவை உலா வரும் இடங்களை ஆரோக்கியமான சூழலாக மாற்றுகின்றன. மேலும், வண்ணத்துப்பூச்சிகள் இயற்கை நிலப்பரப்புகளின் அழகியல் பொலிவிற்கு பெரிதும் பங்களிக்கின்றன. பலர் அதை ரசிக்க ஈர்க்கப்பட்டு வருவதன் மூலம், அந்த குறிப்பிட்ட இடத்தை ஒரு பாதுகாப்பான இடமாக பலருக்கு எடுத்துக்காட்டி அதை பாதுகாக்கவும், பட்டாம்பூச்சிகள் மறைமுகமாக பங்களிக்கின்றன.

3. பெண் வண்டுகள் (Ladybugs): பெண் வண்டுகள், பிற தாவரங்களை உண்ணும் பூச்சிகளை இயற்கையாகவே வேட்டையாடுகின்றன. அப்படிப்பட்ட பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பெண் வண்டுகள் பயிர்களைப் பாதுகாக்கின்றன மற்றும் அதன் மூலம் இரசாயன பூச்சிக்கொல்லிகளின் தேவையைக் குறைக்கிறது. இது நிலையான விவசாயத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், விவசாயத்திற்கு தடையாய் இருக்கும் சுற்றுச்சூழல் தாக்கத்தையும் குறைக்கிறது.

4. தட்டான்பூச்சிகள் (Dragonflies): தட்டான் பூச்சிகள், கொசுக்கள் மற்றும் பிற சிறிய பூச்சிகளை திறம்பட வேட்டையாடுகின்றன. காலப்போக்கில் அவை இந்த பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவுகின்றன. மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களின் பரவலைக் குறைக்கின்றன. தட்டான் பூச்சிகள், கொசுக்கள் இடும் முட்டைகளையும் வேட்டையாடுவதன் மூலமும் நீர்நிலைகளில் உள்ள உயிரினங்களின் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. இதன் மூலம் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கின்றன.

இப்படிப்பட்ட பூச்சிகளை தொந்தரவு செய்வதால் ஏற்படும் விளைவுகள்:

இந்த நன்மை அளிக்கும் பூச்சிகளை தொந்தரவு செய்வது அல்லது கொல்வது பல தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தும். தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் போன்ற மகரந்தச் சேர்க்கையாளர்கள் எண்ணிக்கையில் குறையும் போது, பயிர் விளைச்சல் குறைவதற்கும் உணவுப் பற்றாக்குறைக்கும் வழிவகுக்கும். இது உணவுப் பாதுகாப்பை மட்டும் பாதிக்காது, விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலுக்கும் மிகப்பெரிய பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும்.

பெண் வண்டுகள் மற்றும் தட்டான்பூச்சிகள் போன்ற இயற்கை வேட்டையாளர்களின் இழப்பு பிற தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது இரசாயன பூச்சிக்கொல்லிகளை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய சூழலை உருவாக்கி, சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும்.

சுற்றுச்சூழல் சமநிலை தொடர்வதற்கும், விவசாயத்தை ஆதரிப்பதற்கும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உதவும் பூச்சிகளை பாதுகாப்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. இந்தப் பூச்சிகளின் முக்கியத்துவங்கள் மற்றும் அவற்றைத் தொந்தரவு செய்வதால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்து கொண்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமும், அவற்றின் இருப்பை பாதுகாத்து ஆரோக்கியமான சூழலை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கலாம். எனவே அதற்கு தேவையான பூக்களை நடுதல், பூச்சிக்கொல்லி பயன்பாட்டைக் குறைப்பது போன்ற எளிய செயல்கள் மூலம் இந்த பூச்சி இனங்களை பாதுகாக்கலாம்.

Motivational Quotes: உங்களை மனதளவில் வலிமையாக்கும் 12 மேற்கோள்கள்! 

இரவு உணவுக்குப் பின் செய்யக்கூடாத 6 தவறுகள் தெரியுமா?

செரிமான உறுப்புகளின் ஆரோக்கியம் காக்க கார்போஹைட்ரேட்ஸ் தரும் 6 நன்மைகள்!

பிரம்ம தேவனால் நடத்தப்பட்ட திருப்பதி பிரம்மோத்ஸவத்தின் வரலாறு தெரியுமா?

இந்தியத் திருமணங்களில் எதிர்காலம்… சுமையா? சுலபமா?

SCROLL FOR NEXT