இந்தியா பல்வேறு கலாசாரங்கள், தனித்துவமான மரபுகள் மற்றும் வித்தியாசமான நிலப்பரப்புடன் உலகின் மற்ற நாடுகளிலிருந்து தனித்து நிற்கிறது. இந்தியாவின் மிகவும் தனித்துவமான விஷயங்களின் ஒன்று அதன் நேர மண்டலமாகும். ஏனெனில், இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் ஒரே நேர மண்டலத்தை பயன்படுத்தினாலும் அனைத்தும் ஒரே நேர மண்டலத்தில் இல்லை.
உண்மைதான், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசம் மற்ற மாநிலங்களை விட வித்தியாசமான நேர மண்டலத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களை விட 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே இங்கு சூரியன் உதித்துவிடும். அதிலும் அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் ஒரு கிராமம்தான் சூரிய உதயத்தை முதலில் பார்க்கும் இடமாகும்.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல அழகிய கிராமங்களில், டோங் கிராமம் இந்தியாவில் சூரிய உதயத்தைக் காணும் முதல் இடமாகத் திகழ்கிறது. மாநிலத்தின் கிழக்குப் பகுதியில், இந்திய - சீனா எல்லைக்கு அருகில், டோங் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,240 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் பனி படர்ந்த மலைகள், பசுமையான மரங்கள் மற்றும் ஓடும் ஆறுகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
டோங்கின் புவியியல் இருப்பிடம் மற்றும் அதன் உயரம் இந்தியாவில் சூரிய உதயத்தை அனுபவிப்பதற்கான சிறந்த இடமாக அமைகிறது. இந்த கிராமம் இந்தியாவின் கிழக்கு மாவட்டங்களில் ஒன்றான அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ளது. கிழக்கு நீளமான கோடுகளுக்கு அருகாமையில் இருப்பதால், நாட்டின் பிற பகுதிகளில் சூரியன் உதிக்கும் முன்பு இங்கு முன்னதாகவே சூரியன் உதிக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, வடகிழக்கு மாநிலங்களுக்கு வேறு நேர மண்டலத்தைக் கோரினார். வேறு நேர மண்டலத்தைப் பயன்படுத்துவது தங்களுக்கு பயனளிக்கும் என்றும் பகல் சேமிப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் என்றும் கூறினார். இது பற்றி அவர் கூறுகையில், "நாங்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகிறோம். அரசு அலுவலகங்கள் காலை 10 மணிக்கு மட்டுமே திறக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மூடப்படுவதால், பகல் நேரம் அதிகமாக வீணாகிறது" என்று கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களை GMT+6 நேர மண்டலத்தில் வைத்து கடிகாரத்தை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உயர்த்துமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் இந்தியா GMT+5.5ல் உள்ளது. இது கிரீன்விச் நேரத்தை விட ஐந்தரை மணி நேரம் முன்னதாக உள்ளது.