கடல்வாழ் உயிரினங்களில் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்கள் என்று கருதப்படுபவை ஆக்டோபஸ்கள். இவற்றை கௌரவிக்கும் பொருட்டு உலக ஆக்டோபஸ் தினம் அக்டோபர் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆக்டோபஸ்களின் சிறப்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
புத்திசாலித்தனம்: எட்டுக் கைகள் போன்ற அமைப்பைக் கொண்ட ஆக்டோபஸ்கள் கடலுக்கு அடியில் உயிர் வாழ்வதற்குக் காரணம் அவற்றின் புத்திசாலித்தனம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சுமார் 500 மில்லியன் நியூரான்கள் அவற்றின் மூளைகளிலும் கைகளிலும் அமைந்துள்ளன. பிற கடல்வாழ் உயிரினங்களுக்கு இல்லாத சிறப்பு இவற்றுக்கு உண்டு. இவை பிரச்னைகளை தீர்ப்பதில் வல்லமை பெற்றவை. கடலில் தூக்கி எறியப்படும் தேங்காய் மட்டைகளை பயன்படுத்தி அவற்றை நடமாடும் வீடுகளாக மாற்றும் படைப்பாற்றல் கொண்டவை.
பிரம்மிக்க வைக்கும் அழகு: ஆக்டோபஸ்கள் பார்வைக்கு பிரமிக்க வைக்கும் அழகைக் கொண்டுள்ளன. அவை பல்வேறு வண்ணங்களில் இருக்கின்றன. பல அளவுகள் மற்றும் அனைத்து வகையான வடிவங்களிலும் இருக்கின்றன. சில ஆக்டோபஸ்கள் கடலின் மிக ஆழமற்ற நீரில் வசிக்கின்றன. மற்றும் சில நீரின் மேற்பரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான மீட்டர் கீழே வசிக்கின்றன.
மூன்று இதயங்கள்: ஒரு ஆக்டோபஸ்க்கு மூன்று இதயங்கள் உள்ளன. இரண்டு இதயங்கள் இரத்தத்தை செவில்களுக்கு பம்ப் செய்கிறது. அங்கு அது ஆக்ஸிஜனை பெறுகிறது. மூன்றாவது இதயம் உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை பம்ப் செய்து அனுப்புகிறது. ஆக்டோபஸ்கள் கடலில் நீந்தும்போது உடலுக்கு இரத்தத்தை வழங்கும் இதயம் ஓய்வு எடுக்கும். எனவே, அவை நீந்துவதை விட ஊர்ந்து செல்லவே விரும்பும்.
நீல நிற இரத்தம்: ஆக்டோபஸ்களின் உடலில் ஹீமோகுளோபின்கள் இல்லை. அதற்குப் பதிலாக ஹீமோசயனின் உள்ளது. எனவே, இவற்றின் இரத்தம் நீல நிறத்தில் உள்ளது. ஹீமோசயனின் ஆக்சிஜனை கடத்தும். இதில் செம்பு மற்றும் புரதம் இருக்கிறது.
மீள் உருவாக்கம்: விபத்து அல்லது தன்னை வேட்டையாடுபவர் மூலம் ஒரு கையை இழந்து விட்டால் காலப்போக்கில் அவற்றால் அந்த இழந்த கையை உருவாக்கிக்கொள்ள முடியும். இதனால் அவை தன்னை சூழும் அச்சுறுத்தல்களில் இருந்து எளிதாக தப்பிக்க முடிகிறது. மேலும், இவை தங்கள் தோலின் நிறம் மற்றும் அமைப்பு இரண்டையும் மாற்றும் இயல்புடையவை. இவற்றின் உடலில் உள்ள சிறப்பு செல்கள் இதற்கு உதவுகின்றன. இதனால் தங்களை வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்கவும் இரையை பதுங்கி இருந்து பிடிக்கவும் உதவுகிறது.
தப்பிக்கும் கலைஞர்கள்: இவற்றை, ‘கலைஞர்கள்’ என்று செல்லமாக அழைக்கின்றார்கள் இயற்கை நல விரும்பிகள். தங்களை வேட்டையாட வரும் மனிதர்களை குழப்பவதற்கு தங்கள் உடலில் இருந்து மை போன்ற பொருளை இவை வெளியேற்றுகின்றன. இதனால் வேட்டையாடுபவர்களுக்கு வாசனைத் திறனை மந்தப்படுத்தும் நிலையை ஏற்படுத்துகிறது. உடனே அவை தப்பித்து விடுகின்றன.
கடலின் பச்சோந்திகள்: இவை ‘கடலின் பச்சோந்திகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை கடலில் உள்ள பாறைகள் அல்லது பவளம் போன்ற பிற பொருள்களாக தங்களை மாற்றிக் கொள்ளும். பச்சோந்திகளைப் போல மாறுவேடம் ஏற்றுக்கொள்ளும் இயல்புடையவை.
ஆக்டோபஸ் வகைகள்: ஆக்டோபஸ்ஸில் சுமார் 300 இனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான வினோதமான இயல்புகளைக் கொண்டுள்ளன. மிமிக் ஆக்டோபஸ், லயன் ஃபிஷ், ஃப்ளாக் பிஷ் மற்றும் கடல் பாம்புகள் போன்ற பிற உயிரினங்களின் தோற்றத்தையும் நடத்தையையும் கொண்டுள்ளன. சில வகையான ஆக்டோபஸ்கள் ஆறு மாதம் மட்டுமே வாழக்கூடியவை.
இரண்டு வெவ்வேறு மனங்கள்: ஆக்டோபஸ்களுக்கு பரவலாக்கப்பட்ட நரம்பு மண்டலங்கள் உள்ளன. மூளையில் இருப்பது போன்ற நியூரான்களில் மூன்றில் இரண்டு பங்கு அவற்றின் கைகளில் உள்ளன. இதனால் மூளையின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாமல் அவற்றால் செயல்பட முடியும். பொருட்களை ஆராயவும் கையாளவும் முடியும்.