பூமியின் சராசரி வெப்பநிலை இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக 2 டிகிரி செல்சியஸை கடந்துள்ளது. இதனால் பூமியில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதுவரை பூமியின் சராசரி வெப்பநிலை அளவு 1.5 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டி உயராமல் தடுப்பதற்கான உடன்படிக்கையில் உலக நாடுகள் கையெழுத்திட்டிருந்தன. இது பெரும்பாலும் மனிதர்களின் செயல்களினாலேயே ஏற்படுவதால், இத்தகைய உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
ஆனால், தொழிற்சாலைகளின் மற்றும் வாகனங்களின் அதீத வளர்ச்சியால் ஏற்கெனவே வெப்பத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் பூமி, 2027ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வெப்பநிலை வரம்பைக் கடக்கும் என விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். இந்நிலையில் இந்த வரம்பு கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் புவியின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸை தற்காலிகமாகத் தொட்டுவிட்டதாக, மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிகப்படியான கிரீன் ஹவுஸ் வாயு உமிழ்வுகள், எல்நினோ போன்றவற்றால் ஏற்பட்ட காலநிலை மாறுபாடுகள் காரணமாக, வெப்பநிலை இப்படி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் உலகில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பூமியின் வெப்பநிலை மாறுபாட்டால் உலகின் பல நாடுகளில் தண்ணீர் இல்லாமல் போகும். உலகம் வறட்சியால் பாதிக்கப்படும். வெப்பத்தின் தாக்கத்தால் பல மனித உயிர்கள் அழியும் வாய்ப்புள்ளது. எனவே, இப்பொழுதே இதைத் தடுக்கும் விதமாக அரசாங்கமும், மக்களும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து செயல்பட வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எதிர்காலத்தில் உலக வெப்பமயமாதலால் கடும் பாதிப்புகளை மனிதர்கள் எதிர்கொள்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.