Facts about the Karungaali Maram! 
பசுமை / சுற்றுச்சூழல்

கருங்காலி மரம் பற்றிய உண்மைகள்!

கிரி கணபதி

டந்த சில காலமாகவே சமூக வலைதளங்களுக்குச் சென்றால் கருங்காலி பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட மாலையை அணிந்தால் தீய சக்திகள் நீங்கும், ஆன்மிக பலம் கிடைக்கும், பணம் சேரும் என பல்வேறு விதமான விஷயங்களைக் கூறி, பல காணொளிகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இதில் சிலர் சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் என பல பிரபலங்கள் இதை பயன்படுத்தியே பிரபலமாக மாறினார்கள் என்று கூறுவதால், ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ? என்ற எண்ணமும் நமக்குள் எழுகிறது. எனவே, இத்தகைய மாலைகள் எங்கெல்லாம் கிடைக்கும் எனப் பலரும் தேடுகின்றனர்.

கருங்காலி மரம், அத்தி மரம், மருத மரம், நாவல் மரம் போலவே தமிழ்நாட்டின் மிகவும் பழைமை வாய்ந்த மர வகைகளில் ஒன்று. இதிலும் மற்ற மரங்கள் போல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது துவர்ப்புத் தன்மையுடைய மரம் என்பதால், சித்த மருத்துவத்தில் இதைப் பயன்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு இதை நீரிழிவு நோய்க்கும் பால்வினை நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்துவதுண்டு. இது மிகவும் உயர்தர மரம் என்பதால், இதைப் பயன்படுத்தி கடவுள் சிலைகள் செய்வதும் வழக்கம்.

அந்தக் காலத்தில் நாம் வீடுகளில் மாவு இடிப்பதற்கும் நெல் குத்துவதற்கும் இந்த மரத்தை பயன்படுத்தியே உலக்கைகள் செய்து வைத்திருப்பார்கள். மாதவிடாய் காலங்களில் பெண்களின் பாதுகாப்புக்காக இந்த மரக்கட்டையை பெண்களின் குறுக்கே போட்டு வைத்திருப்பார்கள். இந்த மரம் மிகவும் உறுதியாக இருப்பதால், ஆபத்திற்கு உதவுவதற்காக இதில் தடிகள் செய்து வைத்திருப்பார்கள். மேலும், கோயில்களில் அதிகப்படியாக இந்த மரம் பயன்படுத்தப்பட்டதால், அதன் ஆன்மிகத் தன்மையை தற்போது பெரிதுபடுத்திக்காட்டி வியாபாரமாக மாற்றி விட்டார்கள்.

குறிப்பாக, இந்த மரம் கதிர்வீச்சை எதிர்கொள்ளும் என்று சிலர் கூறுவதைப் பார்க்கும்போது வியப்பாக உள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான மரங்கள் கதிர்வீச்சை எதிர்கொள்ளும் தன்மையுடனேயே இருக்கும். ஆனால், இந்த மரத்தால் செய்யப்பட்ட மாலையை அணிந்தால் அதிர்ஷ்டம் வரும், பணம் பெருகும் என சொல்வதற்கு எந்த விதமான சான்றுகளும் இல்லை. இவை அனைத்துமே வணிக ரீதியாக உருவாக்கப்பட்ட பொய்கள்.

கருங்காலி மரம் மற்ற மரங்களைப் போலவே நமக்கு உதவியாய் இருக்கக்கூடியது. இதுபற்றி பெரிதாக அறியாதவர்கள் மத்தியில் இதை வைத்து பெரிய வியாபாரம் செய்ய வேண்டும் என நினைத்து, பல புரளிகளை கிளப்பி விட்டு தற்போது ட்ரெண்டிங்கில் இதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் மரங்கள் அழிவதைத் தடுப்பதற்கு இதுபோன்ற கதைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், தற்போது இது முழுவதும் வியாபார நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது.

எனவே, யார் சொல்வதையும் தேவையில்லாமல் நம்பி, கருங்காலி மாலைக்காக சில ஆயிரங்களை செலவு செய்து பணத்தை வீணடிக்காதீர்கள். முடிந்தால் ஒரு கருங்காலி மரக்கன்று வாங்கி உங்கள் நிலத்தில் நட்டு வையுங்கள். சில வருடங்கள் கழித்து அதன் மூலமாக உங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்ல நன்மை கிடைக்கும்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT