சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று பூமியில் தங்கம் எப்படி உருவானது என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அவர்கள் இதைக் கண்டுபிடிக்க நியூட்ரான் நட்சத்திர வெடிப்பு இணைப்பிலிருந்து கிலோனோவா வெடிப்பு நிகழ்வின் மாதிரியை உருவாக்கியுள்ளனர். இந்த வெடிப்பின் மூலமாக, அணுக்கரு பொருள் தீவிர நிலைமைகளின் கீழ் எப்படி செயல்படுகிறது என்பதை கண்டறிந்து, பூமியில் தங்கம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை அறிய முற்படுகின்றனர்.
இந்தக் கிலோனோவா வெடிப்பிலிருந்து பல வானியல் தரவுகளை விளக்குவதற்கு ஆராய்ச்சியாளர்கள் புதிய மென்பொருள் கருவியை உருவாக்கியுள்ளனர். இதில் கிடைக்கும் தரவுகள் தனித்தனியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, பல மாதிரி விளக்கங்கள் மனிதர்களுக்கு புரியும் வகையில் கொடுக்கப்படும். இந்த முறையால் தீவிர அடர்த்தியில் உள்ள பொருளின் பண்புகள் பகுப்பாய்வு செய்யப்படும். இதன் மூலமாக நியூட்ரான் நட்சத்திரங்களின் இணைப்புகளின் போது கனமான தனிமங்கள் எப்படி உருவாகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
நியூட்ரான் நட்சத்திரங்கள் என்பது ஒரு சூப்பர் நோவா வெடிப்பில் உருவாகும் அடர்த்தியான வானியற்பியல் பொருள். இது சில நேரங்களில் பைனரி அமைப்புகளை சுற்றி வரும். இந்த அமைப்புக்குள் ஈர்ப்பு அதிகம் என்பதால் ஆற்றலை இழந்து இறுதியில் ஒன்றாக இணைகிறது.
இத்தகைய உயராற்றல் மோதல்களில் தங்கம் போன்ற கனமான கனிமங்கள் உருவாக வழி வகுத்திருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். என்னதான் தங்கம் பூமியில் இயற்கையாக உருவானது என்றாலும், மக்கள் மத்தியில் அதற்கு இருக்கும் டிமாண்ட் காரணமாகவே பிரபலமாக பார்க்கப்படுகிறது.
இதன் உண்மை நிலையை மக்கள் புரிந்து கொண்டால், நிச்சயம் தங்கத்தையும் இரும்பு, அலுமினியம் போல மற்றொரு உலோகமாகவே பார்ப்பார்கள்.