தமிழகத்திலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் அதிக அளவில் வாழை விவசாயம் நடைபெறுகிறது. நேந்திரம், சிங்கன், பூவன், செவ்வாழை, ரஸ்தாலி மற்றும் மட்டி வாழை உள்ளிட்ட பல வகையான வாழை ரகங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இதில் மட்டி ரக வாழைப்பழம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் விளைந்த காட்டு ரகத்தைச் சேர்ந்த வாழை ஆகும். இது மெல்ல மெல்ல நாட்டுக்குள்ளும் பரவியது. இந்த வாழைப்பழத்தின் சிறப்பே அதன் மணமும் ருசியும்தான். வேறு எந்த வகை வாழைப்பழத்திலும் மட்டி வாழைப்பழத்தின் ருசியும் மணமும் கிடைப்பதில்லை.
முன்பெல்லாம் குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டுமே கிடைத்த இந்த மட்டி வாழைப்பழங்கள் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பயிரிடப்பட்டு வருகிறது. எனவே, எப்பொழுதும் கிடைக்கும் பல ரகங்கள் போலவே மட்டி வாழையும் கிடைக்கிறது. இந்த மாவட்டத்தில் நடைபெறும் எல்லாவிதமான நிகழ்ச்சிகளிலும் முந்திரி பருப்பும், மட்டி வாழைப்பழமும் தவறாமல் இடம்பெறும். இந்த வாழையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை அனைவருமே சாப்பிட்டுப் பலனடையலாம். இவ்வகை மட்டி வாழை மரங்கள் சுமார் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூடியதாகும்.
இந்த வாழை மரத்தின் தார்களில் வாழை காய்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும். இதன் சுவைக்காகவே கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு இதை விரும்பி அளிப்பார்கள். குழந்தைகளுக்கு மட்டி வாழைப்பழத்தை நசுக்கிக் கொடுக்கும் பழக்கம் இன்றளவும் இங்கு உள்ளது. இந்த வகை மரங்கள் நடவு செய்து 12 மாதங்களில் குலையை அறுவடை செய்யும் அளவுக்கு வளர்கிறது. ஒவ்வொரு தாரிலும் சுமார் 10 முதல் 12 சீப்புகளுடன், 150 பழங்கள் வரை இருக்கும். ஒவ்வொரு தாரும் 15 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும்.
பார்ப்பதற்கு ரஸ்தாலி போலவே தோற்றமளிக்கும் இவ்வகை பழத்தின் நுனிப்பகுதி சற்று நீளமாக இருக்கும். இத்தகைய பல சிறப்பம்சங்கள் இந்த மட்டி வாழைப்பழத்துக்கு இருப்பதால், இந்திய அரசாங்கம் மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் குறியீடு வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த வாழைப்பழத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்து தற்போது கிலோ 150 முதல் 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மட்டி வாழையை பயிரிடும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.