Terrace garden 
பசுமை / சுற்றுச்சூழல்

மாடித் தோட்டத்தில் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

ரா.வ.பாலகிருஷ்ணன்

விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்கள் ஏற்படுவது இயல்பானது தான். மாடித் தோட்டத்திலும் இதுபோன்ற பூச்சித் தாக்குதல்கள் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்தி, பயிர்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

நகரத்தில் வாழும் மக்களுக்கு விவசாயத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்க காரணமாக அமைந்தது மாடித்தோட்டம். இதன் வருகைக்குப் பின் வீட்டின் மொட்டை மாடி, விவசாயப் பயிர்கள் செழித்து வளரும் தோட்டமாக மாறியது. இதன் மூலம் வீட்டிற்குத் தேவையான நஞ்சில்லா காய்கறிகளைப் பெற முடிந்தது. ஒருசிலருக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகவும் மாடித் தோட்டங்கள்‌ இருந்தன.

மாடித் தோட்டத்தில் பூச்செடிகள், கீரைகள், காய்கறிகள் மற்றும் பழச்செடிகளை வளர்க்கலாம். இந்தச் செடிகளைப் பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க சரியான நேரத்தில் முறையான பராமரிப்பு அவசியமாகும். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் செடிகளில் இலைகள் சுருங்குதல், பழுப்பு நிறப் புள்ளிகள் விழுதல், இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல், பூ வாடுதல் மற்றும் பிஞ்சு உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதனால் செடிகளின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படும்.

பூச்சி மேலாண்மை:

அசுவினி, மாவுப்பூச்சி, இலைப்பேன், செதில் பூச்சி மற்றும் வெள்ளை ஈ போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள் மாடித்தோட்டச் செடிகளைப் பாதிப்புக்குள்ளாக்கும்.

இலைப்பேன் மற்றும் அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை தலா 50 கிராம் எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து, பின் வடிகட்டிய தண்ணீரை செடிகளின் மீது தெளித்தால் பூச்சித் தாக்குதல் கட்டுக்குள் வரும்.

மாவுப்பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் 50 கிராம் சிகைக்காய் காய்களை இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வடிகட்டிய தண்ணீரை செடிகளின் மீது தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தத்துப் பூச்சி மற்றும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டையை இடித்து தண்ணீரில் ஊறவைத்து, வடிகட்டி செடிகளின் மீது தெளிக்கலாம். மேலும் வேப்பெண்ணையை தண்ணீரில் கலந்தும் தெளிக்கலாம்.

நோய் மேலாண்மை:

தேவையான அளவு சூரிய ஒளி, தூயத் தொட்டிகளைப் பயன்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து நிர்வாகம் ஆகியவற்றைப் முறையாகப் பின்பற்றினால் வேரழுகல், சாம்பல் நோய் மற்றும் கழுத்தழுகல் போன்ற நோய்களைத் தடுக்கலாம்.

வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் 50 கிராம் சிகைக்காய் காய்களை இரவு முழுக்க ஊற வைத்து, வடிகட்டிய தண்ணீரை செடிகளின் வேரில் நன்றாக தெளிக்க வேண்டும்.

இலைகளில் ஏற்படும் நோய்களைத் தடுக்க 1 லிட்டர் தண்ணீரில் 50 கிராம் வசம்புவை இரவு முழுக்க ஊற வைத்து, வடிகட்டிய தண்ணீரை இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.

செடிகளின் மீது எறும்புகள் வருவதைத் தடுக்க, தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் பொடியைக் கலந்து செடிகளின் மீது தெளிக்கலாம். மழைக்காலம் தவிர்த்து, செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றுவது அவசியமாகும்.

அத்திப்பழம் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிடேரியன் ஃபுரூட்டா?

ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வாழைப்பூ!

Biography of Picasso: 20ஆம் நூற்றாண்டின் கலைப் புரட்சியாளர். 

சிறுகதை: நரையும் நர்மதாவும்!

'வித்யாலட்சுமி திட்டம்' - உயர்கல்வி நிறுவனங்களில் பயில மாணவர்களுக்கு கல்விக் கடன் உதவி!

SCROLL FOR NEXT