இத்தாலி நாட்டில் தற்போது நீல நிற நண்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. ஆரம்ப காலத்தில் இத்தாலியில் ஒன்றிரண்டு என நீல நண்டுகள் இருந்த நிலையில், தற்போது அதன் நிலை மாறி, பல கடல்வாழ் உயிரினங்கள் அழிவதற்கு இது காரணமாகி விட்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் சுற்றுச்சூழலுக்கு அழிவை ஏற்படுத்தும் நீல நிற நண்டு இனத்தை சமாளிக்க இத்தாலி அரசாங்கம் அவசர அவசரமாக பட்ஜெட் ஒன்றை ஒதுக்கியுள்ளது. இந்த நீல நண்டு இனம் மேற்கு அட்லாண்டிகில் தோன்றி, தற்போது இத்தாலி முழுவதும் பரவி, உள்ளூர் மட்டி மீன்கள் மற்றும் பல நீர்வாழ் உயிரினங்களை வேட்டையாடி அழிக்கிறது. இத்தகைய நீல நண்டுகளை ஆரம்ப காலத்தில் ஒன்றிரண்டு மட்டுமே பார்த்ததாக இத்தாலியர்கள் கூறுகின்றனர். ஆனால், தற்போது இதன் நிலை மாறி நீல நிற நண்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
இதனால் நத்தைகள் போன்ற பல கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக இத்தாலியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சரக்கு கப்பல்கள் வழியாக இந்த நீல நிற நண்டுகள் இத்தாலிக்கு வந்திருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது. இந்த நண்டுகள் எப்படி அதிகரிக்கிறது என்பதற்கான காரணத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. வடக்கு இத்தாலியில் இவற்றின் பரவல் அதிகமாக உள்ளது.
இத்தாலி நாட்டின் போ நதிப்படுகையில் உள்ள 90 சதவீதத்துக்கும் அதிகமான மட்டி மீன்களை இந்த நீல நிற நண்டுகள் உண்டு அழித்துவிட்டதாக கடல் உயிரியலாளர்கள் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள 12 டன்கள் வரையிலான நண்டுகளை இத்தாலி அரசாங்கம் அழித்து வருகிறது. இதற்காக 26 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. இந்த நிலை மாறவில்லை என்றால் இத்தாலியின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கும் எனச் சொல்லப்படுகிறது.
இத்தாலியர்கள் நத்தைகளை அதிகமாக உண்ணக்கூடியவர்கள். இந்த நண்டுகள் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான நத்தைகளை உண்டு விடுவதால் அந்நாட்டு மக்களும், உயிரியலாளர்களும் பெரிதும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.