Killing cats is punishable by death! https://historiaencomentarios.com
பசுமை / சுற்றுச்சூழல்

பூனைகளைக் கொன்றால் மரண தண்டனை!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

நாய் குட்டிகளை வளர்ப்பது போல் சில வீடுகளில் பூனை குட்டிகளையும் வளர்க்கும் பழக்கம் இருக்கிறது. பூனைகள் பத்தாயிரம் ஆண்டுகளாக மனிதனால் பழக்கப்படுத்தப்படுவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்தில் எலிகளை உண்பதற்காக பூனைகள் பழக்கப்படுத்தப்பட்டு பின்பு மனிதர்களுடன் பழகும் விதத்தில் ஈர்க்கப்பட்டு வளர்க்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. காட்டுப் பூனை மற்றும் வீட்டுப் பூனை என பூனைகளில் இரண்டு வகை உள்ளன.

காட்டுப் பூனைகள் மாமிசம் மட்டுமே உண்ணும். வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்ணும். பொதுவாக, ஆண் பூனைகள் ‘டாம்’ என்றும், பெண் பூனைகள் ‘ராணி’ என்றும் அழைக்கப்படுகின்றன. பூனைகள் ஒரு சிறிய வகை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஊனுண்ணி. ஒரு பூனை தனது வாழ்நாளில் 150 குட்டிகள் வரை ஈனும். பூனைகள் சிறந்த இரவு பார்வையைக் கொண்டுள்ளன. மங்கலான ஒளியிலும் துல்லியமான பார்வைத் திறன் கொண்டவை பூனைகள். வீடுகளில் வளர்க்கப்படுவதால் சைவ உணவையும் உண்ணும். நாயைப் போன்று பூனையும் மனிதர்களிடம் எளிதாகப் பழகக்கூடிய விலங்குகளில் ஒன்றாகும்.

சுத்தமாக இருக்கும் விலங்குகளில் ஒன்றான பூனை அதனுடைய ரோமங்களை நாக்கைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளும். தனது மலத்தை குழி தோண்டி புதைக்கும். பூனைகளின் மோப்ப சக்தி மனிதர்களை விட 14 மடங்கு அதிகம். பூனைகள் 180 டிகிரி வரை அதன் காதை அசைக்கும். அத்துடன் இரண்டு காதுகளையும் தனித்தனியாக அசைக்கும் ஆற்றலும் கொண்டவை. பூனைகள் தங்களது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன. பூனைகளின் சிறுநீர் இருட்டில் ஒளிரும். பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோளுக்கும் இடையிலான எலும்புகள் கிடையாது.

பூனைகளின் நாக்கில் இனிப்பு சுவையை உணரும் நுகர் மொட்டுகள் இல்லாததால் பூனைகளால் இனிப்பு சுவையை அறிய முடியாது. பூனைகள் பொதுவாக ஒரு உணவை ருசிக்கும் பொழுது மூன்று முறையாவது நக்கி பார்த்த பிறகுதான் நம்பிக்கையுடன் அந்த உணவை உண்ணத் தொடங்கும். பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவிற்கு திறன் கொண்டவை. பூனைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 70 சதவிகித நேரத்தை தூங்கியே கழிக்கின்றன. பூனைகளின் ஆயுட்காலம் சராசரியாக 12 முதல் 15 ஆண்டுகள்.

மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் அதன் தலை நுழையும் எந்த சிறிய இடத்திலும் பூனைகளின் உடல் நுழையும். முன்னங்கால்களில் ஐந்து நகங்களும் பின்னங்கால்களில் நான்கு நகங்களும் கொண்டவை. பூனையின் பாதங்கள் பஞ்சு போன்ற தன்மையுடன் இருப்பதால் இவை நடக்கும்பொழுது எந்தவிதமான ஓசைகளும் இருக்காது. அதிகமாக வேட்டையாடக்கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்று.

எகிப்தியர்கள் பூனைகளை வீட்டில் வளர்த்து வணங்கினர். பூனைகளுக்குக் கோயில் கட்டி வழிபட்டனர். பூனைகளைக் கொன்றவர்களுக்கு மரண தண்டனை என்பது அந்நாளில் எகிப்தில் விதிக்கப்பட்டது. பூனைகள் இறந்தால் அதற்கு பிரமிடுகள் கட்டி சில எலிகளையும் பாடம் செய்து எகிப்தியர்கள் புதைத்தனர். அரசர்களுடன் அவர்களது பூனைகளுக்கும் பிரமிடுகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. 1871ல் இங்கிலாந்திலும் 1875ல் அமெரிக்காவிலும் பூனைகளுக்கான ஃபேஷன் ஷோ முதன் முதலாக நடைபெற்றது.

தக்காளி பாத் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! 

கிஞ்சுகி (Kintsugi) எனக்கு உணர்த்திய 4 வாழ்க்கைப் பாடங்கள்! 

குழந்தைகள் சிறந்த மனிதர் என்று பெயரெடுக்க 10 வாழ்க்கைப் பாடங்கள்!

மரத்தை பாமாவுக்கும் மலரை ருக்மிணிக்கும் அருளிய பரந்தாமன்!

சிறுகதை – மரியாதை!

SCROLL FOR NEXT