Candle Fruits 
பசுமை / சுற்றுச்சூழல்

மெழுகுவர்த்தி பழத்தைப் பற்றி தெரிந்து கொள்வோமா!

ரா.வ.பாலகிருஷ்ணன்

நம் உடல் நலனைப் பாதுகாப்பதில் பழங்களுக்கு முக்கியப் பங்குண்டு. நமக்கு பரிட்சையமான பழங்களைத் தான் பொதுவாக பலரும் உண்ணுகிறோம். ஆனால், சமீப காலங்களில் சில வித்தியாசமான பழங்களை அவ்வப்போது சந்தையில் காண முடிகிறது. அப்படி ஒரு பழம் தான் மெழுகுவர்த்திப் பழம். பெயரைக் கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா! வாங்க இப்பழத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

மெழுகுவர்த்தி பழங்கள், மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்விகமாக கொண்டுள்ளன. இது ஒரு தனித்துவம் நிறைந்த வெப்ப மண்டலப் பழமாகும். இப்பழங்கள் மெழுவர்த்தியைப் போன்று நீளமாக மரத்தில் தொங்குவதால், இம்மரம் மெழுகுவர்த்தி மரம் என அழைக்கப்படுகிறது.

பழங்களின் தோற்றம்:

மெழுகுவர்த்தி மரங்களின் தனிச்சிறப்பே பழங்கள் தான். பழங்கள் மரத்தின் கிளைகள் மற்றும் தண்டுகளில் செங்குத்தாக தொங்கும். சுமார் 30 செ.மீ. நீளமுடைய இப்பழங்கள், உருளை வடிவத்தில் மெழுகுவர்த்தியை ஒத்திருக்கும். பழங்கள் முதிர்ச்சி அடையும் போது பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் மெழுகு அமைப்புடன் காணப்படும். இப்பழங்களின் கவர்ச்சிகரமான தோற்றம் தான் சந்தையில் இதன் மதிப்பு உயரக் காரணமாக இருக்கிறது. இதன் வடிவமும், கவர்ந்திழுக்கும் பச்சை நிறமும் தோட்டத்திற்கு தனித்துவமான அழகையும் கொடுக்கிறது.

உள்ளூர் சந்தைகளில் மெழுகுவர்த்தி பழங்கள் காணப்படாத நிலையில், பூர்விகப் பகுதிகளில் நல்ல அளவில் விற்பனை நடக்கிறது. அங்கு சில பாரம்பரிய உணவுகளில் கூட இப்பழம் சேர்க்கப்பட்டு வருகிறது. சிட்ரஸ் தன்மையுடன், சற்று இனிப்புச் சுவை கொண்ட மெழுகுவர்த்தி பழங்கள் ஜாம் மற்றும் ஜெல்லி போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது. இப்பழங்கள் உணவுப் பதப்படுத்துதலிலும் உதவுகிறது. பறவைகள் மற்றும் சில விலங்குகளை ஈர்க்கும் தன்மையைக் கொண்டதாகவும் இப்பழங்கள் உள்ளன.

மருத்துவப் பலன்கள்:

மெழுகுவர்த்தி பழச் சாறுகள் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு இயற்கை வைத்தியமாக பயன்படுகிறது. பழங்கள் மற்றும் மரத்தின் பல்வேறு பாகங்கள் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், பூஞ்சை காளான் பண்புகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன. இதனால் பாரம்பரிய மருத்துவத்தில் ஆரோக்கிய நன்மைகளுக்காக இப்பழங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழல் நன்மைகள்: கடினமான மற்றும் பல்வேறு தன்மை கொண்ட மண் நிலைகளில் மெழுகுவர்த்தி மரங்கள் நன்றாக வளரக் கூடியவை. இம்மரத்தின் பரந்து விரிந்த வேர் அமைப்பானது மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி, மண் அரிப்பையும் தடுக்கிறது. இம்மரம் மற்ற சில தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு நிழல் கொடுத்து, பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் உதவுகிறது.

பெயரிலும் சரி, உருவத்திலும் சரி சற்று வித்தியாசமாக இருக்கும் மெழுகுவர்த்தி பழங்கள் நிச்சயமாக இயற்கையின் வரப்பிரசாதம் தான். மெழுகுவர்த்தி பழங்கள் மற்றும் மரத்தின் பட்டைகள் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுகிறது. இதனால் பொருளாதார வாய்ப்பை வழங்கும் சிறப்பம்சத்தையும் இம்மரங்கள் தன்னகத்தே கொண்டுள்ளன. இப்பழங்கள் உள்ளூர் சந்தையில் கிடைக்கும் பட்சத்தில் இதன் விற்பனை நிச்சயமாக அதிகரிக்கும்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT