world ocean day https://www.aakash.ac.in
பசுமை / சுற்றுச்சூழல்

சமுத்திரம் காப்போம்; சுற்றுச்சூழலை மேம்படுத்துவோம்!

கே.என்.சுவாமிநாதன்

லக சமுத்திர தினம் என்ற சர்வ தேச நிகழ்வு, உலகெங்கும் ஜூன் 8ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான வழிமுறைகளில் சமுத்திரத்திற்கு இருக்கும் பங்கை, நாம் சரிவர மதிப்பிடுவதில்லை என்ற கருத்து உலக நாடுகளில் பரவலாக இருந்தது. 1992ம் வருடம் பிரேஸிலின், ரியோ டி ஜெனீரோ நகரில், ஐக்கிய நாடுகள் அமைப்பின், ‘பூமி உச்சி மாநாடு’ நடைபெற்றது. அந்த மாநாட்டில், உலக சமுத்திர தினத்திற்கான பரிந்துரையை கனடா முன் வைத்தது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2002ம் வருடம் உலக நாடுகளை உள்ளடக்கிய ‘பெருங்கடலுக்கான திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்த தினத்திற்கான அங்கீகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை 2008ம் வருடம் அளித்தது.

இந்த தினம், ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள எல்லா நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்த சர்வதேச நாள், உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதை ஆதரிக்கிறது. மேலும், கடலின் முக்கியத்துவம், அதன் பாதுகாப்பு, கடல் மனித குலத்திற்கு அளிக்கின்ற வளங்களை நிலையான முறையில் ஒழுங்குபடுத்துவதற்கான நடைமுறைகளை ஊக்குவிக்கிறது.

உலகில் மொத்தம் ஏழு கடல்கள், 5 சமுத்திரங்கள். சமுத்திரங்களை பெரும் கடல்கள் என்று கூறலாம். கடலை சமுத்திரத்தின் ஒரு பகுதி என்று கூறுவதும் உண்டு. கடலின் ஒரு பகுதி நிலமாக இருக்கும். சமுத்திரம் அதனுடைய பரப்பளவிலும், ஆழத்திலும் கடலை விட அதிகமாக இருக்கும். அதிகம் உப்புத் தண்ணீரைக் கொண்டது சமுத்திரம். உலகின் நிலப்பரப்பில், 70 சதவிகிதத்தை சமுத்திரங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. உலகில் உள்ள தண்ணீரில் 95 சதவிகிதத்திற்கும் மேல் சமுத்திரத்தில் இருக்கிறது. ஐந்து பெரும் கடல்கள் இந்தியன், அட்லாண்டிக், பசிபிக், ஆர்க்டிக் மற்றும் அன்டார்டிக்.

நாம் வசிக்கும் பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பருவ நிலை மாற்றம். உலகின் தட்ப வெட்ப நிலை சீராக இருக்க, ஆரோக்கியமான, மாசுபடாத சமுத்திரம் அவசியம். சமுத்திரத்தைக் காப்பது ஒரு தனி மனிதன் அல்லது ஒரு நாடு செய்து முடிக்கக்கூடிய வேலையில்லை. பெரிய தனியார் நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை ஒருங்கிணைந்து செய்ய வேண்டியது முக்கியம். இதற்கான இடைவிடாத நடவடிக்கை, உள்நாட்டில், தேசிய அளவில், உலகளாவிய அளவில் தேவைப்படுகிறது.

இந்த தினத்திற்கென்று ஒவ்வொரு வருடமும் குறிக்கோள் வைத்திருக்கிறார்கள். இந்த வருடத்திற்கான செயல் திட்டக் குறிக்கோள்: ‘இந்தத் திட்டம் ஒரு ஆண்டிற்கான திட்டமல்ல, பல ஆண்டுகள் செய்ய வேண்டிய திட்டம். பருவநிலை மற்றும் சமுத்திரம் ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கான செயல்பாட்டை ஊக்குவித்தல், நியாயமான, சமமான, நிலையான சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்ற குறிக்கோளுடன், எல்லா தரப்பு மக்களின் ஒத்துழைப்புடன் இயக்கத்தை மேம்படுத்துதல்.’

இதற்கு முன்னர் நடந்த சர்வதேச மாநாட்டில், உலக நாடுகள், ‘30 - 30’ என்ற திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி, 2030ம் ஆண்டிற்குள் பூமியிலுள்ள 30 சதவிகிதம் நிலம் மற்றும் பெருங்கடல் பகுதிகளை, அழியாமல் பாதுகாப்பது இதன் குறிக்கோள். இந்த இலக்கை நோக்கிப் பயணம் தொடர வேண்டியது அத்தியாவசியமாகிறது.

நினைவில் கொள்ள வேண்டியவை:

சமுத்திரம், பூமியின் நிலப்பரப்பில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதியை கொண்டிருக்கிறது பூமியில், மனித குலம் மற்றும் உயிரினங்களின் வாழ்வில் சமுத்திரத்தின் பங்கு முக்கியமானது.

நாம் உயிர் வாழத் தேவையான பிராண வாயுவில், 50 சதவிகிதம் சமுத்திரம் அளிக்கிறது.

உலகெங்கும் உள்ள மக்களுக்கு புரதச்சத்து மிகுந்த உணவை அளிக்கிறது.

லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கடல். பெரிய வகையிலான மீன்களின் எண்ணிக்கையில் 90 சதவிகிதம் குறைந்து விட்டன. பவளப் பாறைகளில் பாதிக்கு மேல் அழிந்து விட்டன.

உலகப் பொருளாதாரத்திற்கு கடல் வாணிபம் அவசியமாகிறது. அதேசமயம் கப்பலின் கழிவுப் பொருட்கள், எண்ணெய் கசிவினால் ஏற்படும் பாதிப்புகள் அச்சுறுத்துகின்றன.

நம்முடைய சமுத்திரங்களில், பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் அதிகம் சேர்ந்து, கடல் வாழ் உயிரினங்களின் அழிவிற்கு காரணமாகிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT