Soil pollution 
பசுமை / சுற்றுச்சூழல்

மண் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

கலைமதி சிவகுரு

ண் என்பது தாவரங்கள் வளர்வதற்குரிய சாதனமாகக் கருதப்படுகிறது. உயிரியல்முறைப்படி பௌதீக மற்றும் இரசாயன முறைகளுக்குத் தேவையான தட்ப வெப்ப நிலையை உருவாக்கிக் கொடுப்பதுதான் மண். மண்ணில் பல்வேறு வகையான தாதுக்களும், உயிர் வகைகளும், நுண்ணுயிரிகளும் காணப்படுவதால் நிலம் இவ்வுலக விண்ணுலகம் என்று கருதப்படுகிறது.

மண் மாசுபடுதல்: மண் மாசுபடுதல் என்பது மண்ணில் உள்ள பௌதீக, இரசாயன மற்றும் உயிரியல் தன்மைகளை பாதிக்கக்கூடிய அளவில் சேர்ந்துள்ள கூடுதல் பொருட்களை உணர்த்துவதாகும். அவை:

1. தொழிலக கழிவுகள்: தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் திண்ம மற்றும் திரவக் கழிவுகள் மண் மீது குவிக்கப்பட்டு விடுவதால் மண் மாசு படுத்தப்படுகிறது.

2. நகரியக் கழிவுகள்: நகர் மயமாக்குதல் காரணமாக திண்ம கழிவுகளும், கழிவு கசடுகளுமாகிய குப்பைகள், கண்ணாடித் தட்டுகள், பிளாஸ்டிக் வகைகள், மலங்கள், செடி கொடிகளின் இலைகள், வாகனங்களுக்கு பயன்படாத உதிரி பாகங்கள், வீணான காய்கறிகள் ஆகியவை நிலங்களில் கொட்டப்படும்போது மண் மாசுபடுகிறது.

3. வேளாண் கழிவுகள்: இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பண்ணைக் கழிவுகள் ஆகியவை மண்ணில் கலக்கப்படும்போது மண் மாசுபடுகிறது.

4. வாகனக் கழிவுகள்: பெட்ரோலியம் மற்றும் டீசல் போன்றவற்றை எரிபொருளாக பயன்படுத்தும் வாகனங்கள் வெளிவிடும் புகையை தவிர வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வீண் என்று ஒதுக்கப்பட்ட உதிரி பாகங்களை நிலத்தின் மீது குவித்து வைப்பதால் மண் மாசுபடுகிறது.

5. மனித மாசு: மனிதர்களின் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் சிதைவுதான் மனித மாசு ஆகும்.

மண் மாறுபடுவதால் ஏற்படும் விளைவுகள்:

1. மண்ணில் கலந்துள்ள மாசு, உணவு சங்கிலியின் மூலமாகப் பல்வேறு உயிரினங்களுக்குச் சுகாதாரக் கேட்டை உருவாக்குகிறது.

2. தொழிற்சாலைக் கழிவுகள் மண்ணில் கலந்து விடுவதால் பூமிக்கடியில் உள்ள நீர் மாசு படுகிறது.

3. உலோகக் கழிவுகள் மண்ணில் கலக்கப்படும்போது மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் அழிந்து விடுகின்றன. அதனால் விளைபொருட்களின் உற்பத்தித் திறன் குறைகிறது.

4. பூச்சிக்கொல்லி மருந்துகளை தாவரங்களுக்குப் பயன்படுத்தபடும்போது அவை மண்ணில் கலந்து பல ஆண்டுகளுக்கு மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கேடு விளைவிக்கின்றன.

மண் மாசுபடுதலை கட்டுப்படுத்தும் வழிமுறை:

1. கழிவுப் பொருட்களை நிலத்தின் மேற்பகுதியில் கொட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். மாறாக, கழிவுப்பொருட்களை பூமிக்குள் புதைத்து வைக்கப்படலாம்.

2. தொழிற்சாலை கழிவுகள் குவிக்கப்படுவதற்கு சிறப்பு இடங்கள் ஒதுக்கப்பட்டு அதில் மட்டுமே குவிக்கப்பட வேண்டும் மற்றும் நீர்மக் கழிவுகள் சுத்திகரிப்பு செய்யப்படலாம்.

3. காடுகள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

4. இரசாயன உரங்கள் பயன்படுத்துவது குறைக்கப்படலாம். கால்நடைகளின் கழிவுப்பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படலாம்.

5. பூச்சிக் கட்டுப்பாடு முறைகளை பின்பற்றினால் பூச்சிக்கொல்லி மருந்துகளின் அவசியம் குறைந்து விடும்.

6. சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குறைக்கப்படுவதற்காக சுரங்கங்களிலிருந்து வளங்கள் பூமிக்கு மேல்பகுதிக்கு கொண்டு வரப்படுவதற்கு சிறந்த தொழில் நுட்ப முறைகள் பின்பற்றப்படலாம்.

7. வேளாண் கழிவுப்பொருட்கள் அப்படியே நிலத்தில் வீசப்படுவதை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

8. உலர்முறை கழிப்பிட வசதியை பயன்படுத்துபவர்கள் நவீன கழிப்பிட முறையை பின்பற்றலாம்.

வாழ்க்கை மற்றும் பிற சுற்றுச்சூழல் செயல்பாடுகளை பராமரிக்க மண்ணை பராமரித்து வளம் குறையாமல் பாதுகாப்பது நம் கடமையாகும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT