இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஒரு விஷயத்தை நன்றாக உணர்வோம். அதுதான் காலநிலை மாற்றம். சில இடங்களில் அதிக மழை, சில இடங்களில் இதுவரை பார்க்காத வறட்சி என இயற்கை தன் இயல்பை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறது. இதற்கு காரணமாக பல விஷயங்கள் இருந்தாலும், நாம் செய்திகளில் படிக்கும் காட்டுத்தீ சம்பவங்கள் எப்படிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
நாமும் ஒரு வகையில் ஓர் ஆரம்ப புள்ளிதான்:
பல்வேறு சிக்கல்கள் மற்றும் தொலைநோக்கு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய காட்டுத்தீ ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பிரச்னையாகும். காட்டுத் தீக்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று மின்னல் தாக்குதல்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் தான். பின், மனிதனின் அலட்சியத்தால் நிகழும் தீ வைப்புச் சம்பவங்கள் (எ.கா., தூக்கி எறியப்பட்ட சிகரெட் துண்டுகள்) அல்லத நிலத்தைச் சுத்தம் செய்யும் போது நாம் உருவாக்கும் தீ போன்ற விஷயங்களும் ஒரு காரணம்தான். இப்படி மனித தவறோடு இயற்கையும் கைகோர்த்து, காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, வெப்பமான, வறண்ட சூழ்நிலைகளை உருவாக்குவதன் மூலம் காட்டுத் தீயின் தீவிரத்தை உலகெங்கும் அதிகப்படுத்தியுள்ளது.
எங்கு அதிகமாக நிகழ்கிறது?
தற்போது, ரஷ்யா, கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள போரியல் காடுகளும் (Boreal forests), அமேசான், தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவில் உள்ள வெப்பமண்டலக் காடுகளும் உலகளவில் சில முக்கிய காட்டுத் தீ ஹாட்ஸ்பாட்களாகப் (Hotspot) பார்க்கப்படுகின்றன. இந்தப் பகுதிகள் அதிகம் பாதிப்படைவதற்கான காரணமே அவற்றின் காடுகள் சூழ்ந்த இடங்களும் (அருகருகே ஒட்டி வளரும் மரங்கள்) மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கமும்தான்.
விழிப்புணர்வு இல்லாமை:
காட்டுத் தீயை எப்படி தடுக்கலாம் மற்றும் அதைக் கையாள வேண்டிய விஷயங்கள் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவில் மக்களிடம் இல்லை. இது காலப்போக்கில் பல்லுயிர் இழப்பு, வாழ்விடங்களின் அழிவு மற்றும் அதிகரித்த கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட கடுமையான தீமைகளை ஏற்படுத்தி தொடர்ச்சியான காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கின்றன. கூடுதலாக, காட்டுத்தீ குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அது சிலரின் சொத்துக்களை சேதப்படுத்துவதோடு, காற்று மாசுபாட்டின் காரணமாக சுகாதார அபாயங்களையும் நம் மனித சமுதாயத்திற்கு ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் எந்தெந்த இடங்கள் மிகவும் எச்சரிக்கையானவை?
இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் காட்டுத்தீ அடிக்கடி ஏற்படும். இந்தப் பகுதிகளில் அடிக்கடி தீவிரமான காட்டுத்தீ வருவதற்கான காரணமே, பெரும்பாலும் மனித நடவடிக்கைகள் மற்றும் தட்பவெப்ப நிலைகளும்தான் (climatic conditions).
மனிதர்களாக நாம் என்ன செய்யலாம்?
காட்டுத் தீ ஏற்படும்போது, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தீ எச்சரிக்கைகள், வனப்பகுதிகளை சில நாட்களுக்கு தவிர்ப்பது மற்றும் தேவைப்பட்டால் அரசால் கொடுக்கப்படும் வெளியேற்ற உத்தரவுகளைப் பின்பற்றுவது ஆகியவை நாம் செய்ய வேண்டிய விஷயங்கள்.
புகைபிடித்தல் அல்லது வனப்பகுதிகளில் நெருப்பை மூட்டுவது போன்ற செயல்களையும் மக்கள் தவிர்க்க வேண்டும். முடிந்தால், உள்ளூர்களில் சொல்லித்தரப்படும் தீ மேலாண்மை பயிற்சிகளை மேற்கொள்ளவது மற்றும் இதைப் பற்றிய சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஆகியவை காட்டுத் தீயின் தாக்கத்தைத் பெரியளவில் தணிக்க உதவும்.
ஆக, காட்டுத் தீயின் காரணங்களையும் தாக்கங்களையும் புரிந்து கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், அவற்றின் நிகழ்வைக் குறைக்கலாம். அதோடு, நம் மனித சமுதாயத்திற்கு பெரிதும் தேவைப்படும், நமது மதிப்புமிக்க வன சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் நாம் பணியாற்றலாம்.