கோடை சீசன் வந்தாலே மாம்பழத்தைத் தேடித்தேடி வாங்குவோம். காரணம் பழங்களின் அரசன் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் இனிப்பாக இருந்தாலும், சற்று புளிப்பாக இருந்தாலும் சாப்பிடும்போது தனி சுவை நாக்கில் சுகம் தரும். பல்வேறு நகரங்களில் பலவித ரக மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், தென்னிந்திய மாம்பழத்தின் ருசி தனிதான் என்பது பெரும்பாலோர் கருத்து. இங்கிருந்து வடநாடு மட்டுமின்றி, உலகம் எங்கும் பறந்து செல்கிறது நம்மூர் மாம்பழங்கள்.
மாம்பழங்களில் சில வகைகள் தனி ருசியும் சிறப்பும் கொண்டவை. அதில் ஒன்றுதான் தோதாபுரி என்றழைக்கப்படும் பெங்களூரா. மின்னணு நகரமான பெங்களூரு, தோதாபுரி மாம்பழங்களுக்கு பிரபலமானது என்பதால் இது பெங்களூரா அல்லது சந்தர்ஷா மாம்பழங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
தோதாபுரி மாம்பழங்கள் பெருவாரியாக ஆந்திராவில் பயிரிடப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலும் இது அதிகம் விளைகிறது. இந்த மாம்பழம் கிளியின் மூக்கு போன்ற வளைந்த நுனியைக் கொண்டிருக்கும். மே மாதம் முதல் ஜூலை வரை கிடைக்கும் தோதாபுரி மாம்பழம் தனித்துவமான சுவை மற்றும் மணம் கொண்ட மாம்பழமாக நம்மைக் கவர்கிறது.
இனிப்பு, புளிப்பு சுவை காரணமாக தோதாபுரி ஊறுகாய் மற்றும் சாலட்களுக்கு சிறந்ததாக உள்ளது. கடலோர ஆந்திர மாவட்டங்களில் இது, ‘கலெக்டர் காயலு’ என்றும் அழைக்கப்படுகிறது. இவை பழுக்க ஆரம்பிக்கும் தருணத்தில் உள்ள குறைவான சுவை இனிப்பு மாங்காய் ஊறுகாயின் ஸ்பெஷல். இந்த மாம்பழங்களை தோலோடு அல்லது வெறும் சதையை நறுக்கியும் சாப்பிடலாம்.
பொதுவாக, அனைத்து மாம்பழங்களிலுமே சத்துக்கள் நிறைந்துள்ளன என்றாலும், தோதாபுரி மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இருதய ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்துகிறது. காரணம், இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள். இதய ஆரோக்கியத்துடன், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் இந்த இரண்டு தாதுக்கள் உதவுகின்றன. மேலும், இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள், தேவையற்ற கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் இது குறைக்கிறது.
இந்த மாம்பழங்கள் அடர்த்தியான தோலுடன் இருந்தாலும் இதன் சதைப்பகுதியின் மஞ்சள் கலந்த ஆரஞ்சு கூழ் காணும்போதே சுவைக்கத் தூண்டும். பெரும்பாலான தோதாபுரி மாம்பழத் தோல்களில் கசப்புச் சுவை இருப்பதில்லை. இருந்தாலும் மிகக் குறைந்த கசப்புத்தன்மை மட்டுமே இருப்பதும் அதிக சதையும் இதன் சிறப்பு.
தோதாபுரி மாம்பழங்கள் அதிக சுவையுடனும் சதையுடனும் இருப்பதால் புதிய, முதிர்ந்த மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பழுத்த தோதாபுரி மாம்பழங்களில் இருந்து பழக்கூழ் பிரித்தெடுக்கப்படுகிறது. அதைப் பதப்படுத்தி சுவையூட்டப்பட்ட மாம்பழக்கூழாக விற்பனைக்கு வருகிறது. இந்தக் கூழ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
கடந்த சில வருடங்களாக தோதாபுரி மாம்பழ உற்பத்தியாளர்களுக்கு கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் மூலம் தகுந்த விலை இல்லை என்னும் ஒரு கருத்து நிலவுகிறது. மேலும், தற்போதைய நடப்பாண்டில் இயற்கையிலேயே மாம்பழங்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு இன்னும் சந்தையில் பரவலாக மாம்பழ விற்பனை வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து வரும் ஓரிரு மாதங்களில் இந்த தோதாபுரி மாம்பழம் கிடைத்தால் நிச்சயமாக வாங்கி சுவையுங்கள்.