கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது தற்போது டயப்பர் மற்றும் சானிட்டரி நாப்கின் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்திருந்தாலும், அதை முறையாக அப்புறப்படுத்துவதற்கான முறைகள் பின்பற்றப்படுவதில்லை. எனவே. இத்தகைய சானிட்டரி நாப்கின், டயப்பர் மற்றும் ஆணுறை போன்ற பொருட்களுடன் அதை அப்புறப்படுத்துவதற்கான பையையும் சேர்த்து வழங்கும்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதன் உற்பத்தியாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவோர் அதை முறையாக அப்புறப்படுத்தாமல் அப்படியே கண்ட இடங்களில் வீசிவிடுகிறார்கள். ஒருசிலர் மட்டுமே இதை முறையாக மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாதபடி அப்புறப்படுத்தும் செயலில் ஈடுபடுகின்றனர். ஆனால், பெரும்பாலானவர்கள் இவற்றை அப்படியே பொதுவெளியில் வீசி வருகிறார்கள்.
நாப்கின், டயப்பர் மற்றும் ஆணுறை போன்றவற்றை தயாரிப்பதற்கு மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்றும், அப்படி இல்லையெனில் அதை அப்புறப்படுத்துவதற்கான பைகளையோ, பேப்பர்களையோ வழங்குமாறு கடந்த 2013லேயே உற்பத்தியாளர்களிடம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.
இத்துடன் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தும் வாகனங்கள் 'பயோ ஹசார்டு' சின்னத்துடன் செல்ல வேண்டும். அதில் முக்கியமாக கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையத்தின் பெயர், தொடர்பு எண் மற்றும் முகவரி ஆகியவை பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. ஏனெனில், அப்போதுதான் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் விதிகளை மீறுவர்களை எளிதாகக் கண்டறிய முடியும்.
இதுகுறித்து இந்த வாரம் மாசு கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மருத்துவக் கழிவுப்பையையும் கண்காணிப்பதற்கு பார்கோடு அமைப்பை கட்டமைத்து வருவதாகக் கூறியுள்ளது. மருத்துவக் கழிவுகளை சட்டவிரோதமாக அகற்றுவதைத் தடை செய்வதற்காகப் போராடிய ஏஜென்சிகளுடன் கூட்டத்தைக் கூட்டுமாறு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேட்டுக் கொண்டதை அடுத்து இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் மக்களிடம் போதிய விழிப்புணர்வின்றி இருக்கும் ஆணுறை, சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் போன்றவற்றின் அப்புறப்படுத்தும் முறைகள், முற்றிலுமாக மாறும் என நம்பப்படுகிறது. இதற்கு மக்களிடமும் போதிய மனமாற்றம் ஏற்பட வேண்டும்.