பசுமை / சுற்றுச்சூழல்

இயற்கையை அச்சுறுத்தும் சீமை கருவேல மரம்!

க.இப்ராகிம்

சீமை கருவேல மரம். உண்மையிலேயே தீமை கருவேல மரமாகவே இருக்கிறது. இவ்வகை மரம் நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் ஏனைய மரம், செடி, கொடிகளுக்குக் கிடைக்க வேண்டிய நீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதிலும் கோடை காலங்களில் மக்களுக்குத் தேவையான குடிநீர் கிடைப்பதிலும் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. ஏரி, குளம், ஆறு என்று நீர்நிலைகளுக்கு அருகில் இருக்கக்கூடிய சீமை கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் அதிகமாகவே குறைகிறது.

இந்த வகை மரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் திட்டமிட்டு பரப்பப்பட்டது என்ற கருத்து நிலவுகிறது. அதேசமயம் இந்த வகை மரங்கள் கரீபியன் தீவுகள், மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா தீவுகளில் அதிகம் காணப்படும் மரமாகும். இதனாலேயே இந்த மரத்தின் தாயகமாக இந்த நாடுகள் குறிப்பிடப்படுகின்றன.

சீமை கருவேல மரம் வெளிநாட்டிலிருந்து வந்ததாலும், நம் நாட்டில் உள்ள நாட்டு கருவேல மரத்தை ஒத்து இருப்பதாலும் இது சீமை கருவேல மரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வகை மரங்களின் வேர் நிலத்தின் ஆழம் வரை பறந்து விரிந்து வளரும் தன்மை கொண்டது. இதனால் இவற்றுக்குத் தேவையான நீரை அதிகம் எடுத்துக்கொள்ள இம்மரம் தனது வேரைப் பயன்படுத்துகிறது. இது மட்டுமல்லாது, வளிமண்டலத்தில் உள்ள காற்று மூலகங்களையும் உறிஞ்சும் தன்மை கொண்டது சீமை கருவேல மரங்கள்.

பிற மரங்களின் 100 விதைகளில் 30 விதைகளே முளைக்கும் நிலையில், சீமை கருவேல மரத்தின் 100 விதைகளில் 95 விதைகள் முளைக்கும் தன்மை கொண்டவை. அது மட்டுமல்லாது, ஆடுகள் சீமை கருவேல மர பழங்களை உண்டு வெளியேற்றும் கழிவுகள் மூலமாகவும் சீமை கருவேல மரத்தின் உற்பத்தி அதிகரிக்கிறது.

இந்த மரத்தின் தாவரவியல் பெயர் புரோஸோபிஸ் ஜுவிபுளோரா ஆகும். இந்த மரம் தமிழ்நாட்டில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது. இந்த மாவட்ட மக்களினுடைய முக்கிய தொழிலாகவும் கருவேல மரங்கள் உள்ளன. இந்த மர விறகு அதிகம் எரிபொருளாகவும், மின்சார உற்பத்திக்கும் பயன்படுகிறது. இதனால் இந்த மாவட்டங்களின் வருவாய் சார்ந்த தொழிலாகவும் இது இருக்கிறது. குறிப்பாக, இராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டம் என்று சொல்லக் காரணமே சீமை கருவேல மரங்களின் அளவுக்கதிகமான விளைச்சல்தான்.

வெட்ட வெட்ட விரைவாக வளரும் தன்மை கொண்ட இந்த சீமை கருவேல மரத்தை இரண்டு வகையாகக் கட்டுப்படுத்தலாம். நீர்நிலைகளுக்கு அருகே இருக்கக்கூடிய சீமை கருவேல மரங்களை பூ பூப்பதற்கு முன்பே வேரோடு வெட்டி விட வேண்டும். தற்போது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் பெருகிவிட்டதால் அவற்றைப் பயன்படுத்தி சீமை கருவேல மரத்தின் உற்பத்தியைத் தடுக்கலாம்.

இலக்கை அடைய உதவும் காட்சிப்படுத்துதல் (Visualization) டெக்னிக் அவசியமும் வழிமுறைகளும்!

ப்ளீஸ் உப்பை குறைத்து சாப்பிடுங்களேன்…

ஒரு மொழி எப்படி அழிகிறது?

கிறிஸ்தவ மதத்தை பரப்ப முயற்சித்த தந்தை… கிரிக்கெட் வீராங்கனைக்கு வந்த சிக்கல்!

இதோ ஈஸியான தீபாவளி பட்சண டிப்ஸ் உங்களுக்காக..!

SCROLL FOR NEXT