அநேக வீடுகளில் தற்போது நாய், பூனை, புறா, கிளி என்று செல்லப்பிராணிகளை வளர்ப்பது அதிகரித்து வருகிறது. செல்லப்பிராணிகளுடன் கொஞ்சி விளையாடுவதால் மன அழுத்தம் குறைவதாக அதை வளர்ப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படி வளர்ப்பவர்கள் எப்படி சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
எந்தப் பிராணி அல்லது பறவையாக இருந்தாலும் அதை தூக்கிக் கொஞ்சி விளையாடினால் கண்டிப்பாக கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். கூடவே குழந்தைகளை அவற்றுடன் விளையாட விட்டால் அவர்களின் துணிமணிகளையும் மாற்றி விடுவது அவசியம். ஏனெனில், செல்லப்பிராணிகளின் முடிகளோ, கழிவுகளோ, எச்சலோ சிறு குழந்தைகளின் மீது பட்டு, அதை கவனிக்காமல் அலட்சியமாக விட்டால் தொற்று நோய்கள் ஏற்பட காரணமாகிவிடும்.
எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் சில நாய்க்கு உண்ணி வருவதுண்டு. அப்படி வந்தால் சுவர்களில் கூட அந்த உண்ணி ஊர்வதை காண முடியும். ஆதலால் ஆரம்பத்திலேயே இதை கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
நாய், பூனை போன்ற விலங்குகளின் முடி உதிர்ந்தால் அதை பெருக்கி விட வேண்டும். அலர்ஜி இருப்பவர்களுக்கு, குறிப்பாக ஆஸ்துமாவால் அவஸ்தைப்படுபவர்களுக்கு இவற்றின் ரோமம் உதிர்ந்தால் மூச்சு விடவே சிரமப்படுவார்கள். அவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
குறிப்பாக, எல்லா விலங்குகளுக்கும் தடுப்பூசிகள் போட வேண்டும். நாய்களுக்கு நான்கு வகை தடுப்பூசிகள் போட வேண்டும். குட்டியாக இருக்கும்போதே போட்டு விட்டு, பிறகு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து போட வேண்டும். வயதான நாயை இன்னும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வயதாக ஆக அதன் ரோமங்கள் அதிகமாக கொட்டுகின்றன. கூடவே சில நோய்களும் தாக்குகின்றன. ஆதலால் அவற்றை மிகவும் உஷாராக கவனிக்க வேண்டும். அதை கவனிப்பவர்களும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும்.
செல்லப்பிராணிகளை வளர்க்கையில் வீட்டை சுத்தப்படுத்த சற்று கூடுதலான நேரமும், உழைப்பும் தேவைப்படுகிறது. கார்பெட்டுகளை வேக்யூம் கிளீனர் கொண்டு வாரத்தில் பலமுறை சுத்தப்படுத்த வேண்டும். உடைகளில் உள்ள முடியை சுத்தப்படுத்த டேப் ரோலரை பயன்படுத்தலாம். மெத்தைகள், திரைச்சீலைகள், மேசை, நாற்காலி முதலியவற்றின் விரிப்புகளை சுத்தப்படுத்த கையில் ஏந்திய வாக்யூம் கிளீனரை கட்டாயமாக பயன்படுத்தினால் நல்லது. அதுவும் மழைக்காலத்தில் இதை சரிவர பயன்படுத்த வேண்டும்.
செல்லப்பிராணிகளால் ஏற்படும் கறைகளை உடனுக்குடன் துடைத்து சுத்தப்படுத்த வேண்டும். கழிவறையில் அவற்றை சிறுநீர் மற்றும் கழிவுகளை கழிக்க பழக்கப்படுத்தி விட்டால் மிகப்பெரிய உதவியாக இருக்கும். நாய்களுக்கு பூச்சி மருந்து சீரான இடைவெளியில் கொடுத்தால் நாடா புழு வராமல் காக்கலாம். நாடாப் புழு வந்து விட்டால் அதை வளர்ப்பவர்களுக்கும் பிரச்னை. ஆதலால் சரும பிரச்னை வராதவாறு காக்க நாயின் கழிவு நாம் கைகளில் படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
சில நாய்கள் பால் பாக்கெட்டை தனது வாயால் கவ்விக் கொண்டு வந்து கொடுக்கும். அதில் அதன் பல் படாதவாறு இருக்கும். அதேபோல் பேப்பர் எடுத்து வந்து கொடுக்கும். இது போலவே செல்லப்பிராணிகளுக்கு சரியான பயிற்சி அளித்து மெத்தைகள், திரைச் சீலைகள், மேஜை நாற்காலி முதலியவற்றின் விரிப்புகளை சுருக்கி விடாதபடிக்கு பாதுகாக்க முயற்சி செய்யலாம். இதனால் நமக்கு வேலை செய்வது எளிதாகும். ஃபர்னிச்சர்களும் பாழ்படாமல் இருக்கும்.
செல்லப்பிராணிகளின் முடிகளை குறிப்பிட்ட இடைவேளையில் வெட்டிவிட்டு சரியாக வைத்திருந்தால் முடி உதிர்தலை பெருமளவில் குறைக்கலாம். அவ்வப்பொழுது ஈர துண்டை போட்டு துடைத்து சுத்தம் செய்தால் முடி உதிர்வதை தடுக்கலாம். இதனால் நடக்கும்பொழுது கால்களில் அதன் ரோமங்கள் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும். மற்ற அறைகளிலும் பரவாமல் தடுக்கலாம்.