பார்ப்பதற்கு அழகாகவும் அமைதியாகவும் இருக்கும் காடுகளில் ஆபத்தும் நிறைந்துள்ளது. காடுகளுக்குள் நாம் பயணம் செய்யும்போது நம்மால் மற்ற உயிரினங்களுக்கு ஆபத்து நேரக்கூடாது. அதேசமயம், மற்ற உயிரினங்களாலும் நமக்கு எவ்வித ஆபத்தும் நேரக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
காடுகளை சாதாரணமாக நினைக்க வேண்டாம். அவை பார்ப்பதற்கு பசுமையான மரங்கள், அழகாக வளைந்து நெளிந்து ஓடும் செடி கொடிகள், மிகுந்த இரைச்சலுடன் விழும் அருவி, இவற்றுக்கு இடையே அழகிய கீற்று போல விழும் சூரிய ஒளி, சுற்றித் திரியும் பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் என காட்டின் அழகை விவரித்துக்கொண்டே போகலாம்.
இத்தகைய அழகிய காடுகளில் காலை நேரத்தில் நடைப்பயணம் செய்வது, சுற்றுலா செல்வது, சபாரி எனப்படும் வன விலங்குகளைக் காணச் செல்வது, மலையேற்றம் செய்வது போன்றவை அனைவருக்குமே விருப்பமான ஒன்றாகும். எங்கு அழகு இருக்கிறதோ அங்கு ஆபத்தும் சேர்ந்தே இருக்கும் அல்லவா? எனவே, காடு சார்ந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
தனிமையைத் தவிருங்கள்: முதலில் காடுகளுக்கு தனியாகப் பயணிப்பதைத் தவிர்க்கவும். பெரும்பாலும் காடுகளில் வன விலங்குகளால் தாக்கப்பட்டவர்கள் தனியாக வனத்திற்கு சென்றவர்களே. எனவே, வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றால் குழுக்களாகச் செல்வது நல்லது.
வனத்துறையின் அறிவுரைகளைக் கேளுங்கள்: சுற்றுலா செல்வதென்பது நாம் நம்முடைய நேரத்தை கழிப்பதற்கு மட்டுமல்ல, இயற்கை மற்றும் காடுகள் குறித்த புரிதலை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும்தான். அங்கு ஆபத்து சற்று குறைவுதான் என்றாலும், நம்முடைய அஜாக்கிரதையால் எவ்வித அசம்பாவிதமும் நேராமல் இருக்க அரசாங்கம் அனுமதித்த இடங்களில் மட்டுமே சுற்றுலா செல்வது நல்லது. சில சமயங்களில் காடுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அல்லது சில சமயங்களில் சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் கூட வன விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். அந்நேரத்தில் வன அதிகாரிகள் சுற்றுலாவுக்கு தடை விதிப்பார்கள். எனவே, வனத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் முதலில் வனத்துறையினரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
சத்தம் போடாதீர்கள்: காடுகளுக்குள் சுற்றுலா செல்லும்போது அமைதியாக சென்றால் வனவிலங்குகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பாக செல்லலாம். ஒருவேளை நாம் செல்லும் குழுக்களுடன் அதிகம் பேசுவது, சத்தம் போடுவது, ரேடியோ சத்தம் ஆகியவற்றின் ஒலிகள் வன விலங்குகளுக்கு பிடிக்காத ஒன்றாகும். பொதுவாக, அமைதியாக இருந்தே பழக்கப்பட்ட உயிரினங்கள் சத்தத்தைக் கேட்டதும் ஆபத்து என நினைத்து உங்களைத் தாக்கலாம். அல்லது உங்கள் சத்தத்தைக் கேட்டு நீங்கள் பார்க்க விரும்பிய விலங்குகள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம்.
விஷச் செடிகளிடம் ஜாக்கிரதை: காடுகளில் ஆபத்தான விலங்குகள் மட்டுமல்ல, மனிதர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் தாவரங்களும் நிறைந்திருக்கும். சில பூக்களும் பழங்களும் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். அவற்றின் அழகில் மயங்கி அது எந்த வகை தாவரம் என்பதே தெரியாமல் அதை நுகர்தல், உண்ணுதல் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவை விஷச் செடிகளாகக் கூட இருக்கலாம்.
நீர்நிலைகளில் கவனமாக இருங்கள்: பொதுவாக, காடுகளுக்குள் பலர் செல்ல விரும்புவதற்கு காரணம் அங்குள்ள அருவிகள், நீரோடைகளில் குளித்து மகிழ்வதற்காகத்தான். எப்பொழுதும் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே குளிக்க வேண்டும். காடுகளில் உள்ள நீர்நிலைகள் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் உண்மையில் ஆபத்து நிறைந்ததாக இருக்கும். அவற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
காலடித் தடங்களை மட்டும் விட்டு வாருங்கள் கழிவுகளை அல்ல: இறுதியாக, காட்டுக்குள் செல்பவர்கள் உள்ளே செல்லும்போது என்ன கொண்டு செல்கிறீர்களோ அந்த பொருட்கள் அனைத்தையும் திரும்பக் கொண்டு வருவது அவசியம். நம்முடைய நகர்ப்புறங்களைப் போல காடுகளை குப்பையாக்கினால் அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருக்கும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருட்களை காடுகளுக்குள் போடக்கூடாது. மேலும், கண்ணாடிப் பொருட்களையும் அங்கு வீசினால் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்புள்ளது.
காடுகளுக்குள் பயணிக்கும்போது பல விஷயங்களையும் அறிந்துகொண்டு செயல்படுவது நல்லது. காடுகளில் அமைதியாக இருக்கும் விஷயங்களில் கூட ஆபத்து இருக்க வாய்ப்புள்ளது. எனவே, முடிந்தவரை காடுகளுக்குள் அமைதியாக பயணித்துவிட்டு, அழகிய நினைவுகளுடன் மீண்டு வருவது நல்லது.