Total Solar Eclipse - Some interesting news https://tamil.oneindia.com
பசுமை / சுற்றுச்சூழல்

பூரண சூரிய கிரகணம் - சுவையான சில செய்திகள்!

கே.என்.சுவாமிநாதன்

ப்ரல் 8ம் தேதி வட அமெரிக்காவில் காணப்பட்ட பூரண சூரிய கிரகணம், வானத்தில் ஏற்பட்ட ஒரு அற்புத நிகழ்வாக உணரப்பட்டது. பொதுவாக, ஒரு வருடத்தில் இரண்டு சூரிய கிரகணங்கள் ஏற்படும். ஆனால், இது பகுதி சூரிய கிரகணமாக இருக்கும், கிரகணம் நடைபெறுகின்ற இடத்தில் முழுமையான இருள் சூழாது. ஆனால், பூரண சூரிய கிரகணத்தின்போது, சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டு, அந்த சில நிமிடங்கள், முழுவதும் இருள் சூழ்வதுடன், வெப்ப நிலையும் குறையும். பூமியில், குறிப்பிட்ட ஒரே இடத்தில் பூரண சூரிய கிரகணம் ஏற்படுவது 375 வருடத்திற்கு ஒரு முறை.

இதனால் இந்த சூரிய கிரகணத்தைக் காண பலர் கிரகணம் எங்கே முழுமையாகத் தெரியுமோ, அந்த இடங்களுக்கு விரைந்தனர். ஏப்ரல் 8ம் தேதி ஏற்பட்ட சூரிய கிரகணம், மெக்ஸிகோவில் தொடங்கி, அமெரிக்காவில் டெக்ஸாஸ், ஒஹையோ, நியூயார்க போன்ற 13 மாநிலங்களைக் கடந்து, கனடாவின் மாண்ட்ரியாலில் முடிவடைந்தது. இது சென்ற பாதையில் அதிகபட்சமாக இருள் சூழ்ந்த காலம் 4 நிமிடங்கள், 27 வினாடிகள். கிரகணப் பாதையில் இருந்த பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. வெளிச்சத்தின் நடுவே, சில நிமிடங்கள் கும்மிருட்டு ஏற்படுவதனால் மாணவர்கள் அச்சம் அடையக் கூடும் என்பதால் இந்த ஏற்பாடு.

இந்த கிரகணப் பாதையில் இருக்கின்ற மக்கள் தொகை 52 மில்லியன். (520 லட்சம்). அதைத் தவிர பூரண கிரகணம் பார்ப்பதற்காக, அமெரிக்காவின் மற்ற இடங்களிலிருந்து வந்தவர்கள் 3.7 மில்லியன் (37 லட்சம்). பயணம், தங்கும் விடுதி, உணவு என்று அமெரிக்க மக்கள் செலவு செய்தது 1.6 பில்லியன் டாலர்கள் (12000 கோடி ரூபாய் இந்திய மதிப்பில்) 80 டாலர்கள் என்றிருந்த விடுதி அறைகள் 765 டாலர் முதல் 950 டாலர் வரை வசூலிக்கப்பட்டன. ஒரு இரவு தங்குவதற்கு 355 டாலரிலிருந்து 482 டாலர் வரை விலை நிர்ணயத்திருந்த பெரிய நட்சத்திர விடுதிகள், ஒரு இரவு தங்குவதற்கு 1039 டாலர்கள் விலை ஏற்றினர். பல உணவு விடுதிகளிலும், கிரகணத்திற்கான சிறப்பு உணவுகள் அறிவித்தன. கிரகணத்தைப் பார்ப்பதற்கு 75 மில்லியன் (750 லட்சம்) சிறப்பு கண்ணாடிகள் விற்பனை ஆயின. ஒரு கண்ணாடியின் விலை 2 டாலர்கள்.

முழு சூரிய கிரகணத்தின் சமயம், சிறிதாக இருள் சூழ ஆரம்பிக்கும் நேரத்தில் வானத்திலிருந்து குதிப்பதற்கான கட்டணம் 250 டாலர்கள். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. சூரிய கிரகணத்தின்போது அரக்கன்சாஸ் என்ற மாநிலத்தில், ரஸ்ஸல்வில்லே என்ற இடத்தில், பெரிய மைதானத்தில் 300 தம்பதிகள், மோதிரம் மாற்றிக் கொண்டு மணம் புரிந்து கொண்டனர். இதற்கு சில தம்பதிகள் பாரம்பரிய கல்யாண உடையில் வர, பலர் பழங்கால உடையணிந்து வந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களே, திருமணத்திற்கான கட்டணம் 60 டாலர்களைச் செலுத்தினர். இந்த இடத்தில் பூரண கிரகணம் நான்கு நிமிடங்கள் தெரியும். ஆகவே, கிரகணம் பார்ப்பதற்கான சிறந்த இடம் என்று நாசா இதனை பரிந்துரை செய்திருந்தது.

கிரகணப் பாதையில், மடிக்கணிணி, வலைதளம் மறந்து பல்லாயிரக்கணக்கானோர், வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததால், வலைதளம் உபயோகிப்பது 40 முதல் 50 சதவிகிதம் குறைந்தது.

விஞ்ஞான வளர்ச்சியடையாத பண்டைய காலத்திலும், அவர்களால் எப்போது கிரகணம் ஏற்படும் என்பதை அறிய முடிந்தது. அதற்கான வல்லுநர்கள் இருந்தார்கள். கிரகணம் என்பது கடவுளின் கோபத்தால் ஏற்படுகின்றது என்று நம்பினார்கள். ஒரு சில பழங்குடியினர் கிரகணத்தால் ராஜாவுக்கு மரணம் சம்பவிக்கும் என்று நம்பினர். அதனால், வல்லுநர்கள் எப்போது கிரகணம் ஏற்படும் என்று சொன்னவுடன், ராஜா ராணியுடன் ரகசிய இடத்திற்குச் சென்று தங்குவார். அங்கிருந்தபடியே ராஜ பரிபாலனம் செய்வார். அந்த நேரத்தில் எல்லோரும் அறியும் வண்ணம் புதிதாக ஒருவரை ராஜாவாக அங்கீகரிப்பார்கள். அவர் அநேகமாக சிறையில் இருக்கும் குற்றவாளி அல்லது பாமரனாக இருப்பார். அவருக்கு ஒரு பெண்ணை மணம் செய்து ராணியாக ஏற்பார்கள். கிரகணம் முடிந்தவுடன் புதிய ராஜாவும், ராணியும் கொல்லப்படுவார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு 2134 வருடங்களுக்கு முன்னால், அக்டோபர் 22, சைனாவில் சூரிய கிரகணம் ஏற்பட்டது என்பதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. ராட்சத டிராகன் சூரியனை விழுங்கி விடுவதால் கிரகணம் ஏற்படுவதாக நம்பினார்கள். ஹ்சி, ஹோ என்ற இரு வானிலை வல்லுநர்களை நியமித்திருந்தார்கள். அவர்கள் வேலை, கிரகணம் எப்போது ஏற்படும் என்று அறிந்து சொல்வது. அது தெரிந்தவுடன், அரசரின் வில்லாளிகள், அம்பெய்து டிராகனைக் கொல்வார்கள். ஹ்சி, ஹோ இருவரும் தங்களுக்கு கொடுத்த வேலையில் கவனம் செலுத்தாமல், குடிபோதையில் இருந்ததாக அரசனால் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

யேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டபோது, வானம் இருண்டதாக கிறிஸ்துவ மதத்தின் வேத நூல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, சூரிய கிரகணம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்து உண்டு. சரித்திர வல்லுநர்கள், சூரிய கிரகணம் எப்போது எல்லாம் ஏற்பட்டது என்ற வான் ஆராய்ச்சி ஆய்வுகளிலிருந்து சிலுவையில் ஏற்றப்பட்டது கி.பி. 29 அல்லது 32 ஆக இருக்கலாம் என்று கணித்திருக்கிறார்கள்.

அடுத்த பூரண சூரிய கிரகணம், க்ரீன்லாந்த், ஐஸ்லாந்த், ஸ்பெயின், ரஷ்யா, போர்ச்சுக்கல் சில பகுதிகளில் ஆகஸ்ட் 12, 2026ம் வருடம் ஏற்படும்.

கிரிப்டோவில் முதலீடு செய்வது சரியான யுக்தியா?

தண்ணீர் குடிப்பதற்கு இத்தனை விதிமுறைகளா? இது தெரியாம போச்சே!

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

SCROLL FOR NEXT