கடந்த 2005ம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத்தின் கட்ச் பகுதியில், பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு வலிமையான உயிரினத்தின் புதைப்படிவ எச்சங்களும், 27 முதுகெழும்புகளும் கண்டுப்பிடிக்கப்பட்டன. இதுகுறித்த ஆராய்ச்சிகள் பல ஆண்டு காலங்கள் நடந்து வந்தன. அந்தவகையில், இந்தியன் ரூர்க்கி இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்களின் இறுதி முடிவு சைன்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
10 முதல் 15 மீட்டர் நீளம் கொண்ட இந்த புதைப்படிவ எச்சங்கள் குஜராத்தின் கட்ச்சில் அமைந்துள்ள பனந்த்ரோ லிக்னைட் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதைப்படிவங்கள் 47 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதே அனைவரின் ஆச்சர்யமாக உள்ளது. இது பூமியின் பண்டைய வரலாற்றின் அடையாளமாக உள்ளது. வேட்டையாடும் இந்த ராட்ச்சஸ இப்பாம்பினுடைய அறிவியல் பெயர் Vasuki Indicus.
இந்த வாசுகி பாம்பு இந்து மதத்தின் மிகவும் புனிதத்துவம் வாய்ந்த பாம்பாகக் கருதப்படுகிறது. சிவனுடைய கழுத்தில் இருக்கும் வாசுகி பாம்பு என்று பழமைவாய்ந்த பல கல்வெட்டுகளில் குறுப்பிடப்பட்டுள்ளன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், சாதாரண உயிரினங்களை விட ஊர்வன உயிரினங்களே அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆகையாலேயே, அப்போதைய புவியியல் தன்மைக்கும், இப்போதைய புவியியல் தன்மைக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன. ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த வாசுகி பாம்பு இனம் அதிகம் இருந்தன. வாசுகி இண்டிகஸ் பொறுத்துவரை பரந்த மற்றும் உருளை உடலை கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் இது சக்திவாய்ந்த உடல் அமைப்பைக் கொண்ட பாம்பு இனமாகவும் சொல்லப்படுகிறது.
சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர் இனம் அழிந்தாக கூறப்படுகிறது. அதேபோல், டைனோசர் அழிவுக்கும் 23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வாசுகி பாம்பு அதிகளவில் இருந்ததாகவும், வேட்டையாடும் பாம்பாகவும் இருந்திருக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று. இன்னும் சொல்லப்போனால், அனகோன்டா மற்றும் பைத்தான்களுக்கு இணையான ஒரு பாம்பு இனம், இந்த வாசுகி இண்டிகஸ்.
அந்தவகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாம்பு 42 அடி மற்றும் 1டன் (1000 கிலோ) எடை கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இதனை ஆராய்ச்சி செய்த ஒரு ஆராய்ச்சியாளர் கூறியதாவது, “முதலில் இதன் அளவைப் பார்த்து நிலத்தில் வாழ்ந்த முதலையாக இருக்கும் என்று எண்ணினோம். ஆனால், பின்னர்தான் தெரிந்தது இது ஒரு பாம்பு என்று. அதனுடைய இனத்திலேயே இந்த பாம்பு தான் மிகவும் பெரிய பாம்பு என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். உலகின் மிகப்பெரிய பாம்பு இனமாகக் கருதப்படும் அழிந்தப்போன Titanoboa இனத்தைப் போலவே, இந்த வாசுகி பாம்பு இருந்துள்ளது.” என்று பேசினார்.