நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோய் வகையாகும். இது உடலில் இருக்கும் உயர் ரத்த சர்க்கரை அளவுகளால் வகைப்படுத்தப்படுகிறது. மரபியல் மற்றும் பிற காரணிகள் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு பங்களிக்கிறது என்றாலும் சில பழக்க வழக்கங்களும் இதன் ஆபத்தை அதிகரிக்கின்றன. இப்பதிவில் எதுபோன்ற பழக்கங்களால் நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
உட்கார்ந்த வாழ்க்கை முறை: அதிக உடல் செயல்பாடுகள் இல்லாமல், உட்கார்ந்த வாழ்க்கை முறையானது நீரிழிவு நோயின் வளர்ச்சிக்கு பங்களிக்கும். எனவே வழக்கமாக உடற்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் எடையை பராமரிக்க உதவி, இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. வாரத்தில் நான்கு நாட்களாவது குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற மிதமான உடல் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடவும்.
ஆரோக்கியமற்ற உணவு: சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை உணவுகள் மற்றும் அதிகப்படியான கலோரிகள் அடங்கிய உணவை உட்கொள்வது நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த உணவுகள் ரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்துவதால் காலப்போக்கில் இன்சுலின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். எனவே முழு தானியங்கள், புரதங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை உள்ளடக்கிய சீரான உணவை தேர்வு செய்து சாப்பிடவும்.
புகைப்பிடித்தல்: புகைப்பிடித்தல் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவித்து, நீரிழிவு அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும். புகைப்பிடித்தல் ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது, இன்சுலின் உற்பத்தியை குறைக்கிறது மற்றும் பல உடல்நல சிக்கல்களுக்கு பங்களிக்கிறது. புகைப்பிடிப்பதை நிறுத்துவதால் நீரிழிவு நோயின் அபாயம் குறைந்து ஒட்டுமொத்த நல் வாழ்வையும் மேம்படுத்த உதவும்.
மன அழுத்தம்: நீடித்த மன அழுத்தம் இன்சுலின் உள்ளிட்ட ஹார்மோன் அளவை பாதிக்கும். இதனால் நீரிழிவு நோய் உருவாகும் அபாயம் அதிகரிக்கும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த தியானம், சுவாசப் பயிற்சிகள் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இது உங்களது மன அழுத்தத்தைக் குறைத்து பல வகைகளில் நன்மை புரியும்.
தூக்கமின்மை: போதிய தூக்கமின்மை அல்லது மோசமான தூக்கத்தின் தரம் போன்றவை ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து இன்சுலின் உற்பத்தியை பாதிக்கிறது. எனவே தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் நன்கு தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கலாம்.
இந்த பழக்கவழக்கங்கள் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கலாம். ஆனால் இவற்றால் நிச்சயம் நீரிழிவு நோய் வந்துவிடும் என சொல்ல முடியாது. நீரிழிவு நோய் என்பது பல்வேறு காரணிகளால் ஏற்படும் ஒரு சிக்கலான நிலை. வழக்கமான உடற்பயிற்சி, சீரான உணவு மற்றும் மன அழுத்த மேலாண்மை உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஆபத்தை நீங்கள் கணிசமாகக் குறைத்து நலமாக வாழலாம்.