ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளாக இந்திய வீடுகளில் இந்த வெட்டிவேர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவைத் தாண்டியும் இதன் மகத்துவம் அறிந்த மக்கள் இதனை வாங்கி வெப்பம் சூழ்ந்த காலங்களிலும் இடங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனைப்பற்றிய சில சுவாரசிய தகவல்களைப் பற்றி பார்ப்போம்.
இந்தியர்கள் இப்போது தேங்காய் எண்ணெய்யில் கலந்து வைத்துப் பயன்படுத்தும் வேர்தான் வெட்டிவேர். அந்த வேர் கலந்த எண்ணெய் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். இப்போது மட்டுமல்ல கடந்த 1000 ஆண்டுகளாக வெட்டிவேர் இல்லாத வீடுகளே இல்லை.
Periplus of the Erythraen sea என்றப் பகுதியிலிருந்து முதலாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த ஒரு க்ரீக் பயணிதான் முதன்முதலில் இந்தியாவிலிருந்த வெட்டிவேரின் பயன்களை அறிந்து இங்கிருந்து அவர் நாட்டிற்குக் கொண்டுச்சென்றார். அதேபோல் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்க இலக்கியத்தில் வெட்டிவேரை “ஓமலிகை” என்றப் பெயரில் குறிப்பிட்டு, அதனை மக்கள் குளிக்கும்போது உடலுக்குப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் இடைக்கால இந்தியா, அதாவது முகலாயர்கள் ஆட்சிக் காலத்தின்போது வெட்டிவேரை வாசனைத் திரவியங்களுக்கும், சமையலுக்கும் பயன்படுத்தியுள்ளார்கள். அந்தவகையில் மிகவும் பழமைவாய்ந்த நகரம் மற்றும் இந்தியாவின் வாசனைத் திரவியங்களின் தலைநகரம் என்றழைக்கப்படும் கனூஜ் பகுதியில் ரோஜா, மல்லி மற்றும் வெட்டி வேரின் வாசனைத் திரவியங்களும்தான் புகழ்பெற்றதாக இருந்திருக்கிறது. அதிலும் அந்த நகரத்தில் கிட்டத்தட்ட க்ரே வெட்டிவேர், வெட்டிவேர் பேபிலோன் என விதவிதமான வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்பட்டன. வெட்டிவேரில் மட்டும் 150 வகையான வித்தியாசமான மூலக்கூறுகள் உள்ளதால், அந்த அளவிற்கு புதுப்புது வாசனை திரவியங்களைக் கண்டுபிடிக்கலாம்.
AC அவ்வளவாக இல்லாத 1990 களில் ஒவ்வொரு வீட்டிலும் கோடைக் காலத்தைக் கடப்பதற்கு இந்த வெட்டிவேர் தான் வைக்கப்படும். அதாவது வீட்டின் ஜன்னல் விளிம்புகளிலும் தரைகளிலும் வெட்டிவேரை வைத்து வெப்பத்தைப் போக்குவார்கள்.
வெட்டிவேர்களால் செய்யப்பட்ட பாய்கள் மற்றும் காலடிகளை தண்ணீரில் நனைத்துப் போட்டால் அதன்மேல் காற்றுப் பட்டு வீட்டிற்குள் வரும்போது சொர்க்க லோகத்தில் இருப்பதுப் போன்ற உணர்வு ஏற்படுமாம்.
அபுல் ஃபாஸில் என்பவரின் புத்தகத்தில் , அக்பர் அந்த வேர்களை வைத்து பாய்களைச் செய்யும் யோசனையை அவரே வழங்கியிருக்கிறார் என்றுக் கூறப்படுகிறது.
அதேபோல் இந்த வெட்டிவேர் வைத்து இந்தியாவில் உள்ள பல கிராமங்கள் தங்களின் பாரம்பரிய பொம்மைகளைச் செய்து வருகின்றனர். அதேபோல் ஆங்காங்கே நடக்கும் திருவிழாக்களிலும் பெண்கள் கூடிப் பாட்டு பாடிக்கொண்டே இந்த பொம்மைகளையும் செய்வர். மித்திலா மக்கள் இந்த வெட்டிவேரை வைத்து பாரம்பரிய கலைநயமிக்க பொருட்களைச் செய்கின்றனர். அதனை சிக்கி கைவினைப்பொருட்கள் என்று அழைக்கின்றனர். 600 வருடங்களுக்கு முன்னதாக எழுதிய ஒரு கவிதையில் ' சிக்கி கைவினைப் பொருட்களை விற்ற ஒரு பெண்' என்றுப் பாடலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.