வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெறுவதற்கு, எண் எட்டு போன்று அமைக்கப்பட்டிருக்கும் பாதையில் வாகனத்தை ஓட்டிக் காண்பிக்க வேண்டியிருக்கும். தேன் தரும் மலர்களை அடையாளம் காட்ட, தேனீக்கள் எண் எட்டு போன்று நடனமாடிக் காட்டுகின்றன என்றால் ஆச்சரியமாயில்லை. வாங்க, தேனீக்களின் நடனம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.
தேனீக்களின் நடனம் (Waggle Dance) என்பது தேனீக்களின் சமூக வாழ்வில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. தேனீக்களின் வாழ்க்கையைச் சுமூகமாகக் கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கிறது. முக்கியமாக, உணவு தேடும் உதவியாளர் தேனீக்கள், தேன் தரும் மலர்களை நோக்கி மற்ற தேனீக்களை ஒருங்கிணைத்துக் கொண்டு செல்லும் பணியைச் செய்கின்றன. தேனின் ஆதாரமான மலர்கள் இருக்கும் இடத்தைத் துல்லியமாகப் புரிய வைத்து, மற்ற தேனீக்களை அங்கு அழைத்துச் செல்ல இந்த நடனமே உதவுகிறது.
சாரணத் தேனீ அல்லது வழிகாட்டும் தேனீ முதலில் தேன் இருக்கும் மலரை அடையாளம் கண்டு, தன் வாயில் தேனையும், உடலில் மலரின் நறுமணத்தை நிறைத்துக் கொண்டும் கூட்டுக்குத் திரும்ப வருகின்றன. தன் கூட்டிற்கு வந்ததும், தான் கொண்டு வந்த தேனைக் கூட்டில் இருக்கும் தேனீக்களுக்கு விநியோகம் செய்கின்றன. உதவியாளர் தேனீ கொண்டு வந்து கொடுத்தத் தேனை அருந்திய மற்ற தேனீக்கள் தங்கள் நடனத்தை ஆரம்பித்து விடும்.
தேனீக்களின் நடனம் இரண்டு வகைப்படும். ஒன்று வட்ட நடனம், மற்றொன்று உடம்பை வளைத்து ஆடும் வாக்கிள் நடனம் (Waggle Dance) ஆகும். இவையிரண்டுக்கும் இடைப்பட்ட சிக்கிள் நடனம் ஒன்றும் இருக்கிறது.
கண்டுபிடிக்கப்பட்ட உணவின் தரம் மற்றும் அளவிற்கு ஏற்றார் போல் நடனத்தின் அழகும் தரமும் நிர்ணயிக்கப்படும், தேனைத் தரும் மலர்களின் தரம் மற்றும் அளவு உன்னதமாக மற்றும் மேன்மையாக இருந்தால், தேன் வேட்டைக்குப் போய் வரும் அனைத்துத் தேனீக்களும் மிகவும் உற்சாகத்துடன் மிகவும் நீண்ட நடனம் ஆடும். தரமற்றதாக இருந்தால், நடனம் உற்சாகமற்றதாகவும் மிகவும் குறைவான நேரமே ஆடும்.
உணவுக் கூட்டிலிருந்து 25 முதல் 100 மீட்டர் தொலைவில் இருக்கும் போது, தேனீக்கள் வட்ட நடனம் ஆடும். காத்திருக்கும் தேனீக்களுக்கு, தான் கொண்டு வந்த தேனைக் கொடுத்த பிறகு, சாரணத் தேனீக்கள் வட்ட வடிவில் சுற்றி நடனம் ஆடும். மேலும், அடிக்கடி தன் திசையை மாற்றிக் கொள்ளும். நடனம் முடிந்த பிறகு, நடனம் அதே இடம் அல்லது வேறொரு இடத்தில் நடக்கும். இதைப் போல மூன்று அல்லது அரிதாக அதற்கு மேலும் நடைபெறும்.
கூட்டிற்கு வெளியே மற்றும் ஒரு நடனம் ஆடிய பிறகு, உணவு தேட தேனீக்கள் அனைத்து இடத்திற்கும் பறக்க ஆரம்பித்து விடும். வட்ட நடனம் பொதுவாகத் திசையைச் சொல்லுவதில்லை. ஆனால், சாரணத் தேனீ நடனம் ஆடும் போது தான் கொண்டு வந்த மலரின் நறுமணத்தை வீசச் செய்யும். அதைக் கொண்டு தேனீக்கள் தாங்கள் கண்டுபிடிக்க வேண்டிய மலரை நாடிச் செல்லும்.
உணவு கிடைக்கும் இடம் தொலைவில் இருக்கும் போது, உடலை வளைத்து ஆட்டும் வாக்கிள் நடனமாக அல்லது எட்டு போடும் நடனமாக மாறும். ஒரு இடத்தில் நிலை மாறி அரை எட்டு போட்டது போன்ற நடனமாக மாறிவிடும். எட்டு போடும் நடனம் உணவு கிடைக்கும் இடத்தையும் அங்கு செல்வதற்கு வேண்டிய ஆற்றலைக் குறித்தும் உணர்த்துவதாக இருக்கும்.
எடுத்துக் காட்டாக, ஒரு தேனீ 200 மீட்டர் தொலைவில் உள்ள உணவை எடுத்து வர 8 முதல் 9 சுற்றும் 15 நொடிகளும் எடுத்துக் கொள்ளும். 2000 மீட்டர் தொலைவிற்கு 3 சுற்றும் 15 நொடிகளும் எடுத்துக் கொள்ளும். நடனம் உணவின் திசையையும் குறிக்கும். நேராக நடனம் ஆடினால் உணவு நேர் திசையில் இருக்கும் என்றும், மேல் நோக்கி ஆடினால் சூரியன் இருக்கும் திசையில் இருக்கும் என்றும் உணர்த்தும். மேல் நோக்கி 60 பாகை கோணத்தில் இடப் பக்கம் திரும்பி ஆடினால் உணவு சூரிய திசையில் 60 பாகை இடப்பக்கத்தில் உள்ளது என்பதையும் உணர்த்துகிறது.
சில வேளைகளில் இந்த இரண்டு நடனங்களையும் தவிர்த்து, இரண்டிற்கும் இடைப்பட்ட அதாவது அரை எட்டு போட்டது போல நடனமாடும். இந்நடனத்தின் வழியாக, தேன் தரும் மலர்கள் அருகிலுமில்லை, அதிகத் தொலைவிலுமில்லை இடைப்பட்ட தொலைவில்தான் இருக்கிறது என்று தெரிவிக்கின்றன.