Water Catchment Pits 
பசுமை / சுற்றுச்சூழல்

நீர் வளத்தை மேம்படுத்த உதவும் நீர் பிடிப்புக் குழிகள்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

வறண்ட நிலத்தில் நிலத்தடி நீர்மட்டம் பல அடி ஆழத்தில் இருக்கும். இதனால் தான் பல விவசாயிகள் இன்று போர் அமைக்கும் சூழலில் இருக்கின்றனர். இந்த நிலத்தடி நீர் ஆதாரத்தை உறுதிப்படுத்தும் நீர்ப் பிடிப்புக் குழிகள் பற்றி பலரும் அறியாத தகவலைத் தெரிவிக்கிறது இந்தப் பதிவு.

பருவநிலை மாறி மழைப் பொழிவதாலும், அதிக வெப்பத்தின் காரணமாகவும் இன்று பல குளங்கள் நீரின்றி வற்றியுள்ளது. இதுதவிர நகரமயமாதலின் காரணத்தாலும் சில குளங்கள் காணாமல் போய் விட்டன. இந்நிலையில், நிலத்திடி நீரின் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. அன்றைய காலங்களில் வான் மழை, கிணற்று நீர் மற்றும் குளத்து நீரைக் கொண்டு விவசாயம் செய்த விவசாயிகள் இன்று பெரும்பாலும் போர் அமைத்து பல அடி ஆழத்தில் இருக்கும் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மழைநீரைத் தேக்கி வைக்கவும் உதவும் ஒரு பழங்காலத் தொழில்நுட்பம் தான் நீர்ப் பிடிப்புக் குழிகள்.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருக்கும் ஒரு நிலத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் சுமார் 10 முதல் 15 செ.மீ. ஆழமும், அகலமும் இருக்குமாறு குழிகளை வெட்ட வேண்டும். இந்த சிறு சிறு குழிகளுக்கு நீர்ப் பிடிப்புக் குழிகள் என்று பெயர். இந்தக் குழிகள் மழைநீரைத் தேக்கி வைத்துக் கொள்வதோடு, நிலத்தடி நீரை மேலே கொண்டு வரவும் உதவுகிறது. நீர்ப் பிடிப்புக் குழிகளை வெட்ட கரிசல் மண் மற்றும் செம்மண் நிலங்கள் ஏற்றவையாக இருக்கும். இருப்பினும் நீர்ப் பற்றாக்குறை இருக்கும் அனைத்து நிலங்களிலும் இம்முறையைப் பயன்படுத்தலாம்.

உங்களின் கிணற்றில் தண்ணீர் வற்றினாலும், சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் நீர்ப் பிடிப்புக் குழிகளை வெட்டினால் நல்ல பலன் கிடைக்கும். மழைக்காலங்களில் இக்குழிகளில் மழைநீர் கிழிறங்கி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மேலே வரும். பீகாரில் இருக்கும் கயா எனும் மாவட்டத்தின் ஒரு ஊரில் சுத்தமாக குடிக்க தண்ணீர் கூட இல்லாத சூழலில், சுமார் 1,650 நீர்ப் பிடிப்புக் குழிகளை அந்த ஊர் மக்கள் வெட்டினர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் 17 வது அடியிலேயே நல்ல தண்ணீர் வந்தது என சொல்லப்படுகிறது. இந்த நீர்ப் பிடிப்புக் குழிகள் நிலத்தில் இருக்கும் உப்புத் தன்மையைக் கூட மாற்றக் கூடியது என சில சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

காவிரி, தென்பெண்ணை, நொய்யல், பாலாறு மற்றும் சில ஆற்றுப் பகுதிகளின் இருபுறமும் சுமார் 3 முதல் 5 கி.மீ. வரை குழிகளை வெட்டினால், நீர்மட்டம் குறையாது இருக்கும். மேலும், கிராமங்களில் வாழும் பொதுமக்களும் தாமாக முன்வந்து நீர்ப் பிடிப்புக் குழிகளைத் தோண்டி, என்றும் நீர்வளம் குறையாத கிராமமாக மாற்ற முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

திருமலை திருப்பதிக்கு அழகு சேர்க்கும் 7 அம்சங்கள் எவை தெரியுமா?

நாவூர வைக்கும் காஞ்சிபுரம் சுண்டல்-பொரிச்ச கிழங்கு கறி செய்யலாம் வாங்க!

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் 7 சைவ உணவுகள்! 

'நாழிகை வட்டில்' என்றால் என்னவென்று தெரியுமா அன்பர்களே!

வேர்க்கடலை சாப்பிடக் கூடாத 5 பேர் யார் தெரியுமா?

SCROLL FOR NEXT