Keerai Garden and nutrition powder 
பசுமை / சுற்றுச்சூழல்

வீட்டில் கூட்டு உரம் தயாரித்து, கீரை தோட்டம் அமைத்து, கீரை சத்து பொடியும் நாமே தயாரிக்கலாம்! ரெடியா மக்களே?

கலைமதி சிவகுரு

உரம் தயாரிக்கும் முறை:

வீட்டை சுற்றி இடம் இருந்தால் சமையல் அறையின் பின் பகுதியில் ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழம் கொண்ட குழி தோண்டி அதில் காய்கறி கழிவுகள், முட்டை ஓடுகள், இலைகள், சாம்பல் போன்ற மக்கும் கழிவுகளை தினமும் பரவலாக இட்டு வர வேண்டும். (பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், ரப்பர், இரும்பு, கண்ணாடி பொருட்களை போடக்கூடாது) 

குழியானது 10செ.மீ வரை உயர்ந்தவுடன் அதே உயரத்திற்கு மண்ணைப் போட்டு, மீண்டும் அதன் மேல் கழிவுகளைக் கொட்டி, இங்ஙனம் குழி நிரம்பும் வரை செய்து  மண்ணால் மூடி விட வேண்டும். உடனே இன்னொரு குழியில் இதே முறையில்  இன்னொன்றையும் தயார் செய்ய வேண்டும். 

முதலில் நிரம்பிய குழியில் சுமார் 45 முதல் 60 நாட்களுக்குள் தரமான கூட்டு உரம் தயாராகி விடும். இப்படி செய்வதால்  நமக்கு உரம் இடைவிடாமல் கிடைத்து கொண்டிருக்கும். 

தோட்டம் அமைக்கும் முறை:

சமயலறை கழிவு நீர் சென்றடைவதற்கு தக்கவாறு மிக அருகில் உள்ள நிலத்தைச் சற்றுத் தாழ்வான பகுதியாக மாற்ற வேண்டும். 

பிறகு இருக்கும் இடத்தை பொறுத்துத் தேவைக்கேற்ற படி, தினமும் கீரை நமக்கு கிடைக்கும் வகையில் வட்டம், சதுரம், செவ்வகம், நீள் வடிவம் போன்ற அமைப்புகளில் தோட்டம் அமைக்கலாம். 

இவ்வண்ணம் தேர்வு செய்த நிலத்தைச் சுமார் முக்கால் அடி ஆழத்திற்கு நன்கு கொத்திக் பண்படுத்தி இத்துடன் சமையலறைக் கழிவினின்று தயாரிக்கப்  பட்ட கூட்டு உரத்தைக் கலக்க வேண்டும். மேலும் கழிவு நீர் வடி காலைத் தோட்டத்தின் முழுப்பகுதிக்கும் செல்லும்படியாய் அமைத்தலும் வேண்டும். 

அடுத்தது விதைகளைத் தனியாக நன்கு பண்படுத்தப்பட்ட உரம் நிறைந்த மண்ணில் தூவி பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கச் சுற்றிலும் பி.எச்.சி 10% மருந்தைப் போட்டு, வைக்கோலால் மூடி காலை மாலை இரு வேளைகளிலும் முளைக்கும் வரை நீர் தெளித்து வருதல் வேண்டும். முளைத்தவுடன் வைக்கோலை மாற்றி விட வேண்டும். 

பின்பு குறிப்பிட்ட உயரம் வரை வளர்ந்தவுடன் வீரியம் உள்ள கன்றுகளைப் பிடுங்கித் தக்க இடைவெளி விட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் நடுதல் வேண்டும். ஒவ்வொரு கீரையையும் தனித்தனி இடத்தில் நடுதல் நன்று. உயரமாக வளரும் கீரை இனங்களை ஓரங்களில் நடுதலே சிறந்தது.

நட்ட மூன்று தினங்களுக்கு தினமும் மூன்று முறை நீர் தெளிப்பதுடன் நிழலும் கிடைக்கும் படியாய் செய்தல் வேண்டும். பின்பு சமையலறை கழிவு நீரை தவறாது பாய்ச்சுவதுடன் கூட்டு உரத்தையும் இட்டு அடிக்கடி புழு பூச்சிகளின் தொல்லை களிலிருந்து மருந்து தெளித்து பாதுகாக்க வேண்டும். 

கீரை சத்துப் பொடி:

அதிகமாகக் கீரைகள் கிடைக்கும் போது அவற்றை சேமித்து வைத்து உண்பதற்கு தகுந்த முறை கீரை சத்துப் பொடி தயாரித்தலே ஆகும். 

கீரை இலைகளைக் கிள்ளி அழுக்குகள், பூச்சிகளை அகற்றி சுத்தப்படுத்தி, சூரிய வெளிச்சம் படாமல் நிழலில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் உலர்த்த வேண்டும். 

நன்கு உலரவில்லை என்றால் சற்று வறுத்து நன்கு இடித்துப் பொடியாக ஆக்கவும். 

நாள்தோறும் தவறாது கீரைகள் உட்கொண்டால் நோய்கள் அணுகாது நூறாண்டு வாழலாம். கீரைகளைப் பச்சையாகவும், சமையல் செய்தும் சாப்பிடலாம். இதனால் பல சத்துக்களும் கிடைக்கப் பெற்று  கண்கள் ஒளி பெறுகிறது, மூளை வளம், எலும்பு பலம், உடல் உரம் பல் உறுதி, பெறுகிறது. இதயம், கல்லீரல், குடல் போன்ற உள்ளுறுப்புகள் அனைத்துமே சரிவர இயங்குகிறது.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT