தென்மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நமீப் பாலைவனத்தின் மோசமான நிலப்பரப்புகளில், ஒரு பழமையான தாவரம் இயற்கையின் முரண்பாடுகளை மீறி வளர்கிறது. அதுதான் Welwitschia Mirabilis என்ற தாவரம். இதன் தனித்துவமான தோற்றம் மற்றும் நம்ப முடியாத ஆயுட்காலம் போன்றவை தாவரவியலாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை வெகுவாகக் கவர்கிறது.
அதன் குறிப்பிடத்தக்க தோற்றத்தைப் பொருத்தவரை இதில் இரண்டு பெரிய இலைகள் மட்டுமே வரும். இந்த செடியின் தண்டிலிருந்து வளரத் தொடங்கும் இரண்டு இலைகள், மிக நீளமாக வளர்ந்து கொண்டே செல்லும். இவை நீண்ட காலம் கழித்து வயதாகி உதிர்ந்ததும், மீண்டும் அதே போல இரண்டு இலைகள் நீண்டு வளரத் தொடங்கும். இதனால் இந்த தாவரத்தின் தோற்றமே பார்ப்பதற்கு கொடூரமாக இருக்கும். உலகிலேயே அருவருப்பான தாவரம் என்றும் இதைச் சொல்கிறார்கள்.
அங்கோலா மற்றும் நமீபாவின் வறண்ட பகுதிகளில் தோன்றிய இந்தத் தாவரம், தீவிர பாலைவன நிலைகளில் உயிர் வாழும் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இவை அங்கு பெய்யும் மூடு பனியிலிருந்து ஈரப்பதத்தை பிரித்தெடுத்து தனக்காக பயன்படுத்திக் கொள்ளும் அற்புத ஆற்றலைப் பெற்றுள்ளது. நீளமான இலைகள் நீர் துளிகளை சேகரித்து அதன் வேர் அமைப்புக்கு அனுப்புகிறது. இதன் காரணமாகவே மழை இல்லாத நிலையிலும் இந்தத் தாவரத்தால் உயிர் வாழ முடிகிறது.
இதன் மற்றொரு வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அதன் நீண்ட ஆயுளாகும். இவற்றின் சில பழைய மாதிரிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, அவை 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இவை பூமியில் உள்ள மிகவும் பழமையான தாவரங்களில் ஒன்றாகும். மேலும் இந்த தாவரத்தின் வளர்ச்சியைப் பொருத்தவரை, இதன் தண்டு ஒரு ஆண்டுக்கு சில சென்டிமீட்டர் மட்டுமே வளர்கிறது. பல கடுமையான சூழ்நிலைகளையும் தாக்குப்பிடித்து வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரே தாவரம் இதுதான்.
நமது கிரகத்தில் உள்ள பல தாவரங்களுடன் ஒப்பிடுகையில் Welwitschia Mirabilis தாவரங்கள் உறுதியான தாவரங்களின் சான்றாக அமைகிறது. இதனிடமிருந்து வாழ்க்கையின் கடினமான சூழல்களை எப்படி நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.