Livestock market 
பசுமை / சுற்றுச்சூழல்

மாட்டுத்தாவணி என்றால் என்ன? கோவில் திருவிழாக்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

தேனி மு.சுப்பிரமணி

மதுரை மாநகரத்திலுள்ள எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையம் என்றேப் பெரும்பான்மையாக அழைக்கப்படுகிறது. புதிய பேருந்து நிலையத்திற்கு தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், மதுரை மக்கள் இப்பேருந்து நிலையத்தைத் தாங்கள் முன்பு அழைத்து வந்த மாட்டுத்தாவணி என்றே அழைப்பதால், மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையமாகவே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

தற்போது பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இப்பகுதி, முன்பு மாடுகள் விற்பதற்கும் வாங்குவதற்குமான கால்நடைச் சந்தையாகச் செயல்பட்டு வந்ததால், இப்பகுதியினை மாட்டுத்தாவணி என்று அழைத்து வந்தனர். அப்பெயரே இன்றளவும் புழக்கத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் 210 ஊர்களில் மாட்டுத்தாவணி எனப்படும் கால்நடைச் சந்தைகள் நடைபெறுகின்றன. இக்கால்நடைச் சந்தைகள் பெரும்பான்மையாக, கோயில் திருவிழாக்களை முன் வைத்துப் பல இடங்களில் கூடுகின்றன. சில ஊர்களில் வாரந்தோறும் ஏதாவதொரு கிழமையை சந்தை நாளாகக் கொண்டு கால்நடைச் சந்தைகள் கூடுகின்றன.

இப்படிக் கூடும் கால்நடைச் சந்தைகளில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அத்திக்கோம்பை உச்சிமகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் நடைபெறும் கால்நடைச் சந்தை (மாட்டுத்தாவணி) புகழ் பெற்றதாக இருக்கிறது. இந்த மாட்டுச் சந்தை ஒரு வார காலத்திற்கு நடைபெறும். இந்த மாட்டுச் சந்தையில் பல மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. உழவுக்குப் பயன்படும் காளைகள், ரேக்ளா பந்தயக் காளைகள், ஜெர்சி இனப் பசு மாடுகள், குதிரைகள், ஆடுகள் என்று பல கால்நடைகள் இங்கு விற்பனையாகின்றன.

இதே போன்று, இம்மாவட்டத்தில், பழநி அருகே உள்ள தொப்பம்பட்டி அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் ஆடிப்பெருக்குத் திருவிழாவை முன்னிட்டு, ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் கால்நடைச் சந்தை (மாட்டுத்தாவணி) நடைபெறுகிறது. இந்தச் சந்தை ஐந்து நாட்கள் தொடர்ந்து நடத்தப்படும். காங்கயம், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், உசிலம்பட்டி, உடுமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிகளவில் கால்நடைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் அந்தியூரில் நடைபெறும் கால்நடைச் சந்தையும் மிகவும் புகழ் பெற்றதாகும். கோவில் திருவிழாவையொட்டி நடைபெறும் இந்தச் சந்தை ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தொடர்ந்து நடத்தப்படும். இந்தத் திருவிழாவில் அந்தியூரைச் சுற்றியுள்ள பகுதிகளான அம்மாப்பேட்டை, கோபி, பவானி, பர்கூர், ஜரத்தல் மட்டுமல்லாது, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத் போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் கால்நடை வளர்ப்போர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள் என்பது சிறப்பு. இப்பகுதிகளிலிருந்து கறவை, உழவு, சிந்து, நாட்டு மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.

இதே போன்று ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் கால்நடைச் சந்தை (மாட்டுத்தவணி) நடைபெறுகிறது. இந்தச் சந்தை ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தொடர்ந்து நடத்தப்படும்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையம், கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் கால்நடைச் சந்தை (மாட்டுத்தாவணி) நடைபெறுகிறது. இந்தச் சந்தை ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தொடர்ந்து நடத்தப்படும். ஒவ்வொரு வருடமும் காங்கேயம் காளைகள், பசு மாடுகள் குதிரைகள் மற்றும் ஜமுனா பேரி ஆடுகளும் இங்கு விற்பனைக்கு வருகின்றன.

கோயில் திருவிழாக்களில் கூடும் கால்நடைச் சந்தைகளைத் தவிர்த்து, வாரந்தோறும் ஏதாவதொரு கிழமையை முன்னிலைப்படுத்தி தமிழ்நாட்டில் 193 ஊர்களில் கால்நடைச் சந்தைகள் கூடுகின்றன. இக்கால்நடைச் சந்தைகளில் பெருமளவில் விவசாயப் பயன்பாட்டிற்காகவும், பால் உற்பத்திக்கும் தேவையான கால்நடைப் பரிமாற்றம் நடைபெறுகிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் என்று கேரள மாநிலத்திற்கு அண்மையிலுள்ள தமிழக மாவட்டங்களில் கூடும் சில கால்நடைச் சந்தைகளில் கேரள மாநிலத்தின் இறைச்சி உணவுப் பயன்பாட்டிற்கான மாடுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT