நம்மில் பலரும் நீல நிற வானத்தில் வெண்மையான மேகக்கூட்டங்கள் தவழ்ந்து செல்வதை பார்த்து ரசித்திருப்போம். சிலர் வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது என்று சிந்தித்திருப்பார்கள். அதே நேரத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் வானம் இவ்வாறு நீல நிறத்தில் காட்சியளிப்பது இல்லையே என்றும் யோசித்திருப்பார்கள். உண்மையில் வானம் நீல நிறமா? ஏன் காலை மற்றும் மாலை நேரத்தில் வேறு நிறங்களில் காட்சியளிக்கிறது? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நீல நிறத்தில் காட்சியளிக்க காரணம்:
சூரியனிடமிருந்து வரும் ஒளி வெண்மையாக தெரிந்தாலும், சூரிய ஒளி வானவில்லின் அனைத்து நிறங்களையும் உள்ளடக்கியது.
ஒரு முப்பட்டகத்தில் Prism வெண்ணிற ஒளிக்கதிர் விழும் போது, அது பல வண்ணங்களில் பிரதிபலிக்கிறது. அதுபோல சூரியனிடம் இருந்து வரும் வெள்ளை நிற ஒளிக்கற்றையில் பல வகையான வண்ணங்கள் இருக்கிறது. இந்த ஒளிக்கதிர் பூமியின் மேற்பரப்பில் வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகளின் மீது மோதி சிதறடிக்கப்படும் போது நமக்கு வானம் பல நிறங்களில் காட்சியளிக்கிறது.
அந்த வகையில் சூரிய ஒளியில் பல வித்தியாசமான அலைநீளம் கொண்ட வண்ண ஒளிக்கற்றைகள் உள்ளது. இதில் குறைந்த அலைநீளம் கொண்ட நிறமாக நீல நிறம் விரைவாக சிதறடிக்கப்படுகிறது. மற்ற நிறங்களை விட நீல நிறம் அதிக அளவில் அனைத்து திசைகளிலும் சிதறடிக்கப்படுவதால் நம் கண்களுக்கு வானம் நீல நிறமாக தெரிகிறது.
வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகளின் மீது சூரிய ஒளிக்கற்றைகள் மோதி பல திசைகளில் சிதறுகிறது. இதை தான் நாம் ஒளிச்சிதறல் என்று கூறுகிறோம்.
நீல நிறத்தை விட ஊதா நிறம் அலைநீளம் குறைந்தது. ஆனால் வானம் ஊதா நிறமாக இல்லாமல் நீல நிறமாக உள்ளதே என சந்தேகம் வரும். இதற்கு காரணம் என்னவென்றால், சூரியனில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளிக்கற்றையின் அளவு அதிகம். எனவே வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகளில் நீல நிறம், ஊதா நிறத்தை விட அதிக அளவு சிதறடிக்கப்படுகிறது.
அதே சமயம் மனிதக் கண்கள் ஊதா நிறத்தை விட நீல நிறத்தை தான் அதிகம் உணரக்கூடியது. எனவே வானம் மனித கண்களுக்கு நீல நிறமாக தான் காட்சியளிக்கும்.
சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்:
சூரியன் உச்சியில் இருக்கும் போது நீல நிறமாக காட்சியளிக்கும் வானம் காலை சூரிய உதயத்தின் போதும், மாலை சூரிய அஸ்தமனத்தின் போதும் சிகப்பு, ஆரஞ்சு,மஞ்சள் நிறமாக காட்சியளிக்கிறது. இதற்கு காரணம் சூரியன் குறிப்பிட்ட புள்ளியில் இருக்கும் போது குறைந்த அலைநீளம் கொண்ட நீல நிறம் மற்ற திசைகளில் சிதறடிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் அதிக அலைநீளம் கொண்ட பிற ஒளிக்கதிர்கள் ஒளி சிதறல் அடைந்து வானம் சிகப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறமாக நம் கண்களுக்கு தெரிகிறது.