பயிர் காப்பீடு திட்டம் உண்மையில் நல்ல திட்டமே. ஆனால், அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியவில்லை என்ற ஏக்கமும், விரக்தியும் ஒவ்வொரு விவசாயியிக்கும் உண்டு. அவ்வகையில் தனிநபர் பயிர் காப்பீட்டை அரசு செயல்படுத்துமா என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.
பருவமழைக் காலங்களில் விவசாயப் பயிர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம் தான் பயிர் காப்பீடு திட்டம். மழைக்காலத்தில் பயிர்கள் பாதிக்கப்படுமாயின், அந்நிலத்தின் விவசாயி பயிர் காப்பீடு செய்திருந்தால் காப்பீடு வழங்கப்படும். ஆனால் உண்மையில் இந்தத் திட்டம் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்பது தான் விவசாயிகளின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது. இதற்கு முக்கிய காரணமே பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் விதிமுறைகள் அனைத்து விவசாயிகளுக்கும் சாதகமாக இல்லை என்பது தான். மேலும் உரிய நேரத்தில் இழப்பீட்டுத் தொகை விவசாயிகளைச் சென்றடைவதில்லை போன்ற பல குற்றச்சாட்டுகள் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளன.
பொதுவாக ஆயுள் காப்பீடு மற்றும் வாகன காப்பீடு போன்ற காப்பீடுகள் தனிநபரின் பிரச்சினைக்கு உதவக்கூடியதாக இருக்கின்றன. ஆனால் பயிர் காப்பீடு அப்படி அல்ல. ஒரு குறிப்பிட்ட வருவாய் கிராமத்தில் பயிர் விளைச்சலின் அளவு, மழையால் சேதம் மற்றும் விளைபொருள்களின் தரம் என அனைத்தும் ஆராயப்படுகிறது. முடிவில் ஒட்டுமொத்த கிராமமும் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே பயிர் காப்பீடு வழங்கப்படும். அதுவும் தாமதமாகத் தான்.
ஒரு விவசாயி இயற்கை சீற்றங்களில் இருந்து பயிர்களைப் பாதுகாத்து சந்தையில் விற்பனை செய்தாலும் குறைந்த அளவிலான இலாபமே கிடைக்கிறது. புயல், மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் அதுவும் கிடையாது. இப்படியான சூழலில் விவசாயிகளின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் பயிர் காப்பீடும் கைவிட்டால், விவசாயிகளின் நிலை என்னவாக இருக்கும்; நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். அதிகளவில் பயிர்கள் சேதமடையும் போது, அரசு சார்பில் ஏக்கருக்கு இவ்வளவு தொகை என நிவாரணம் வழங்கினாலும், அது போதுமானதாக இருக்குமா என்பது சந்தேகம் தான்.
பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியே தான் பணம் செலுத்துகின்றனர். ஆனால், மழையால் பயிர்கள் சேதமடையும் போது, ஒட்டுமொத்த வருவாய் கிராமமும் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என விதிமுறை இருப்பது எவ்வகையில் நியாயமாகும். அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான பயிர் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இப்படி இருக்கையில், தனிநபர் பயிர் காப்பீடு ஒன்றே தீர்வு என விவசாயிகள் கருதுகின்றனர்.
குறிப்பிட்ட வருவாய் கிராமத்தில் பயிர் பாதிப்புகளை கள ஆய்வு செய்ய, முன்னரே தேதியைக் குறிப்பிட்டு காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் வருவார்கள். அப்போது எவ்வளவு விளைச்சல் மற்றும் எவ்வளவு சேதம் என்பதை ஒட்டுமொத்தமாக கணக்கெடுத்து தான் காப்பீடு வழங்கப்படும். இந்த நடைமுறை முற்றிலும் தவறாகும். தனிப்பட்ட விவசாயிக்கு பயிர் சேதம் இருந்தால் காப்பீடு வழங்க வேண்டும் என்பதை பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஏனோ தெரியவில்லை அரசு இன்னும் விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.
பருவமழைக் காலங்களில் உடனே பயிர் காப்பீடு செய்யுங்கள் என அரசு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல், தனித்தனியாக பயிர் பாதிப்புகளை பிரித்தறிந்து காப்பீட்டுத் தொகை வழங்க அரசு சார்பில், காப்பீட்டு நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் இந்த நிலையே இனியும் தொடரும்.