Cotton 
பசுமை / சுற்றுச்சூழல்

பருத்தியைத் தாக்கி அழிக்கும் புழுக்கள் – பாதுகாப்பது எப்படி?

கலைமதி சிவகுரு

பருத்தி ஒரு பணப்பயிர் என்பது அனைவரும் அறிந்ததே. பருத்தி ஒரு மென்மையான விரிந்து பரந்த நாரிழை ஆகும். இது விதைகளைச் சுற்றி பந்துபோல காப்புறைகளில் வளரும். இவ்விதைகளைச் சுற்றி வளரும் இழைகளை பஞ்சு என்கிறோம். இதன் நாரிழை முழுவதும் செல்லுலோஸால் ஆனதாகும்.

பருத்தி நாரிழை நூலாக நூற்கப்பட்டு மென்மையான துணி நெய்யப் படுகிறது. இழைகளை பிரித்தெடுக்கும்போது ஏறத்தாழ 10% மட்டுமே வீணாகிறது. இந்தப் பருத்தியினால் கிடைக்கும் பயன்கள் ஏராளம். இப்படிப்பட்ட பருத்தியை விவசாயம் பண்ணும்போது அதிகமாக புழுக்கள் தாக்கி அழிக்கும்.

பருத்தியை தாக்கி அழிக்கும் புழு வகைகள்:

இந்தப் பருத்தி விளைச்சலைப் பாதிக்கக்கூடிய முக்கிய காரணிகளில் காய் புழுவும் ஒன்று. தமிழகத்தில் அமெரிக்க காய் புழு, இளம் சிவப்பு காய் புழு, புள்ளி காய் புழு என 3 வகையான காய் புழுக்கள் பருத்தியில் அதிக சேதத்தை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது

அமெரிக்க காய் புழுவின் தாய்அந்து பூச்சிகள் இட்ட முட்டையில் இருந்து வெளி வரும் இளம் புழுக்கள் பருத்தி பயிரின் பூக்களை தாக்கும் பின்னர் காய்களில் துளைகளை உண்டாக்கி உள்ளிருந்து திசுக்கள், விதைகள் ஆகியவற்றை உட்கொண்டு அதிக சேதத்தை உருவாக்கும்.

இளம் சிவப்பு காய் புழுக்கள் ஒன்றிணைந்து கூடுகளை உருவாக்கி பூக்களின் திசுக்களை உண்பதால் பூ, மொட்டுகள், இளம் பூக்கள் கொத்து கொத்தாக உதிர ஆரம்பிக்கும். பின்னர் காய்களின் நுனிப் பகுதியில் துளைகளை உண்டாக்கி உள்ளே சென்று திசுக்கள், விதைகள் ஆகியவற்றை உட்கொண்டு நடுவில் உள்ள சுவரின் வழியே துளையிட்டு மற்ற அறைகளுக்கும் சென்று சேதப்படுத்தும்.

புள்ளிக்காய் புழுக்கள் பூ மொட்டுகள், பூக்கள் ஆகியவற்றை உண்பதால் அவை உதிர்ந்து விடுகின்றன. பின்னர் காய்களில் துளையிட்டு திசுக்களை உண்பதோடு தனது எச்சத்தால் காய்கள் உள்ளிருக்கும் பஞ்சு ஆகியவற்றையும் சேதப்படுத்தும்.

காய் புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

1. தட்டைப்பயறு, மக்காச் சோளம் போன்றவற்றை ஊடு பயிராக ஒரு வரிசை பருத்தி செடி 6 வரிசை என்ற விகிதத்தில் நட்டால் புழுக்கள் தாக்குவது குறையும்.

2. சாம்பலை தேவைக்கேற்ப எடுத்து புழுக்கள் இருக்கும் பருத்தி செடிகளின் அனைத்து பாகங்களிலும் நன்கு படுமாறு தூவ வேண்டும்.

3. தாவர இலைச்சாறு அல்லது வேப்பங்கொட்டை சாறு அடிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 50கிலோ எண்ணெய் எடுக்காத வேப்பம் புண்ணாக்கினை பயிர் நடவு செய்த ஆரம்பத்தில் செடிகளுக்கு அருகில் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

4. மேலும், இரசாயன முறையில் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி இமிடாகுளோர், 2 கிராம் அசிபேட் கலந்து காலை மற்றும் மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

5. மேலும் உயிரியல் முறையில் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் வெர்டிசீலியம் மற்றும் பிவேரியா என்னும் பூஞ்சாணங்களை ஒன்றாகக் கலந்து காலை மற்றும் மாலை வேளையில் தெளித்து புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

பருத்தி விவசாயம் பண்ணும் போது புழுக்களின் வகையையும், அதன் தாக்குதலையும் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைக் கையாண்டால் புழு தாக்குதலினால் ஏற்படும் மகசூல் இழப்பினை குறைத்து வருமானத்தை அதிகரிக்கலாம்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT