Spoiled Milk to Fertilizer  
பசுமை / சுற்றுச்சூழல்

கெட்டுப்போன பாலில் உரம் தயாரிக்கலாமா? இது தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

சமையல் கழிவுகள் மற்றும் கெட்டுப் போன உணவுப் பொருள்களை பொதுவாக பலரும் குப்பையில் தூக்கிப் போடுவார்கள். ஆனால் நம் வீட்டில் வேண்டாம் என ஒதுக்கும் சில பொருள்கள் வீட்டுத் தோட்டத்திற்கு உரமாக உதவுகின்றன. அவ்வகையில் கெட்டுப்போன பாலை எப்படி உரமாக பயன்படுத்துவது என்று இப்போது பார்ப்போம்.

பால் சில சமயங்களில் கெட்டுப்போனால், தூக்கி ஊற்றி விடுவோம். ஆனால், கெட்டுப்போன பாலை நாம் உபயோகமான முறையில் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்த முடியும். இதன்மூலமாக சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்!

பாலில் இருக்கும் கால்சியம் தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவும். கெட்டுப்போன பாலில் உள்ள இயற்கையான அமிலத்தன்மை, கார மண்ணில் உள்ள ph மதிப்பை குறைக்க உதவுகிறது. கெட்டுப்போன பாலை உரமாகப் பயன்படுத்துவதன் மூலம், வீணாகும் உணவுப் பொருட்களை மாற்று முறையில் பயன்படுவது மட்டுமின்றி சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்கும்.

பசுமையான இலைகள்:

கெட்டுப்போன பாலை 1:1 என்ற விகிதத்தில் தண்ணீருடன் கலந்து, தோட்டத்தில் உள்ள செடிகளின் பசுமையான இலைகள் மீது தெளிக்கலாம். இதன்மூலம் பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் மற்றும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் செடிகளின் வளர்ச்சியை அதிகரித்து, பசுமையான சூழலை உண்டாக்குகின்றன.

உரமாகப் பயன்படுத்துதல்:

கெட்டுப்போன பாலில் ஒரு பங்கை எடுத்து, இரண்டு பங்கு தண்ணீருடன் கலந்து பாலை நீர்த்துப் போகும் படி செய்யுங்கள். செடிகள் வளரும் பருவத்தில் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு ஒருமுறை இந்தக் கலவையை செடிகளின் அடிப்புறத்தில் ஊற்றவும். இதன் மூலம் வேர் வளர்ச்சி நன்றாக இருக்கும். அதோடு இது இயற்கை உரமாகவும் செயல்படுவதால், மண் வளமும் மேம்படும்.

முன்னெச்சரிக்கை:

கெட்டுப்போன பால் உரமாகப் பயன்படும் என்பதற்காக இதனை அதிகளவில் பயன்படுத்தக் கூடாது. அதிகப்படியான பால் தேவையற்ற பூச்சிகளை ஈர்க்கும்; அதோடு விரும்பத்தகாத வாசனையைக் கொடுக்கும். மண்ணின் மேற்பரப்பில் பூஞ்சைகளின் வளர்ச்சியைக் கண்டால், கெட்டுப்போன பாலை ஊற்றக் கூடாது‌.

நிச்சயமாக இப்போது கெட்டுப்போன பாலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் உங்களுக்கு இருக்கும். இனி பால் மட்டுமல்ல கெட்டுப்போன மற்ற உணவுகளையும் நாம் முறையாகக் கையாண்டால் வீண் என்பதே இல்லை. குப்பையைக் கூட உரமாக மாற்றும் இன்றைய காலகட்டத்தில், வீட்டில் உண்டாகும் சமையல் கழிவுகள் மற்றும் உணவுப் பொருள்களை உபயோகமான முறையில் பயன்படுத்தி சுற்றுச்சூழலைக் காப்போம்; மண் வளத்தை பெருக்குவோம்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT